துருக்கியில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள், வீடுகள் உள்ளிட்டவை இடிந்து விழுந்தன. இதில், 270 பேர் பலியானதாக, அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், பலி எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள வான் இலி மாகாணத்தில், பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.6 புள்ளிகள் பதிவான இந்நிலநடுக்கத்தால், எர்ட்ஜிஷ் நகரில் ஆயிரம் கட்டடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. இவற்றில், 40 கட்டடங்களின் இடிபாடுகளில் மக்கள் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. இதுவரை 270 பேர் பலியாகியிருப்பதாகவும், 1,300 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், உள்துறை அமைச்சர் இத்ரிஸ் நயிம் சகின் அறிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என, பிரதமர் ரெட்ஜெப் டாயிப் எர்டோயன் அச்சம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருப்போரை மீட்கும் பணியில், 2,400 மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். முதலுதவி மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக, 680 வைத்தியர்கள், தாதியர்கள் கொண்ட குழு இயங்கி வருகிறது. 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருப்போரைக் கண்டறிய, 12 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.





0 comments:
Post a Comment