Tuesday, January 10, 2012

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இலங்கை இளைஞன் தற்கொலை


அவுஸ்திரேலியாவின் பிலாவூட் தடுப்பு முகாமில் தங்கியிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவது குறித்து இதுவரை அவரின் உறவினர்கள் முன்வரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. தயாரத்த ஜயசேகர என்ற குறித்த இளைஞர் தனது முகவரியாக மட்டக்களப்பின் இரண்டு பிரதேசங்களைக் குறிப்பிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனவே, சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரவேண்டுமாயின் தமது கொன்சியூலர் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் குறித்த இளைஞரின் உறவினர்களுக்கு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இம்முறை அநுராதபுரத்தில் சுதந்திர தின வைபவம்


"ஆச்சரியமிக்க தேசத்தைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தின வைபவம் அநுராதபுரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின்கீழ் நடைபெற்று வருவதுடன் விழா ஏற்பாடுகள் குறித்த முக்கிய மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது.

அமைச்சர் ஜோன் செனவிரத்னவின் தலைமையில் நடை பெற்ற இந்த விசேட மாநாட்டில் உயர்மட்ட அதிகாரிகள், பொலிஸ் மற்றும் முப்படைகளின் முக்கியஸ்தர்கள் பல ரும் கலந்து கொண்டனர். சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் பல இதன் போது நிறைவேற்றப்பட்டதுடன் பாதுகாப்பு நடவடிக்கை முக்கிய பல விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டன.

இம்முறை தேசிய தின பிரதான வைபவம் அநுராதபுரம் சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தையில் நடைபெறவுள்ளதுடன் சமகாலத்தில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள தேச பிதா டீ. எஸ். சேனநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் வைபவம் நடைபெறவுள்ளது. இம்முறை சுதந்திர தின வைபவத்தில் 3000 சிறப்பதிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதுடன் முப்படைகளையும் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அநுராதபுரம் மாவட்ட பாடசாலைகளிலிருந்து மூவினத்தையும் சேர்ந்த 125 மாணவிகள் தேசிய கீதம் மற்றும் ‘ஜய மங்கல’ கீதம் ஆகியவற்றை இசைக்கவுள்ளனர். பிரதமர் டி. எம். ஜயரட்ண உட்பட அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளும் தேசிய தின சமய வழிபாடுகள் அநுராதபுர நகரிலுள்ள சமய வழிபாட்டுத் தகவல்களில் நடைபெறவுள்ளன.

அநுராதபுரம் ஸ்ரீமாபோதியில் நடைபெறும் பெளத்த சமய வழிபாடுகளில் பிரதமர் டி.எம். ஜயரத்ன கலந்து கொள்வார். அநுராதபுரம் ஸ்ரீ கதிரேசன் தேவஸ்தானத்தில் நடைபெறும் இந்த சமய வழிபாடுகளில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் கலந்து கொள்ள மொஹிடீன் ஜும்மாபள்ளிவாசல் இஸ்லாமிய சமய வழிபாடுகளில் அமைச்சர்கள் ஏ.எச்.எம். “பெளஸி, ரிசாட் பதியுதீன் ஆகியோரும் புனித சூசையப்பர் ஆலய கத்தோலிக்க சமய வழிபாடுகளில் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தேசிய தினத்தன்று அரச நிறுவனங்கள் மற்றும் பொது ஸ்தாபனங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றியும் நேற்றைய மாநாட்டில் கலந்துரையாடப்பட்டன. இதற்கிணங்க பெப்ரவரி 3,4ஆம் திகதிகளில் அரச நிறுவனங்கள், பொது ஸ்தாபனங்களில் தேசியக் கொடிகளை ஏற்றுவதுடன் மின் குமிழ் அலங்காரங்களை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான அறிவித்தல்களை எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சு வெளியிடவுள்ளது.

அநுராதபுரத்தில் தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெறும் முன்னோடி நடவடிக்கைகளப் பார்வையிடுவதற்காக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தலைமையிலான விசேட குழுவொன்று அங்கு விஜயம் செய்யவுள்ளது. இம்முறை சுதந்திர தினம் நடைபெறும் அநுராதபுரத்திலேயே “தயட்ட கிருள” கண்காட்சியும் நடைபெறவுள்ளது அதற்கான சகல நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சல்மான் ருஷ்டியின் இந்தியா வருகையில் சர்ச்சை


உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 20ஆம் திகதி நடைபெறும் இலக்கிய விழாவில் பங்கேற்பதற்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள வரும் ருஷ்டியின் விசாவை இரத்துச் செய்யவேண்டும் என்று இஸ்லாமிய மதப் பள்ளியான தாருல் உலூம் தியோபந்தின் துணைவேந்தர் அப்துல் காஸிம் நுமானி கோரிக்கை விடுத்துள்ளனர். சில அரசியல் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

கடந்த 1988இல் சல்மான் ருஷ்டி எழுதிய ஒரு நாவலில், இஸ்லாமியர்களைப் புண்படுத்தியிருப்பதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அவருக்கு எதிராக, ஈரானின் மதத் தலைவரான அயதொல்லா கொமெனி ஃபத்வா உத்தரவைப் பிறப்பித்தார். இந்தியாவும் கூட அந்தப் புத்தகத்துக்குத் தடை விதித்தது.

அதன் பிறகு, சல்மான் ருஷ்டி பலமுறை இந்தியா வந்துள்ளார். ஆனால், இப்போதுதான் சர்ச்சை எழுந்துள்ளது.
இப்போது இந்தப் பிரச்சினை தொடர்பாக மெளலானா அப்துல் காஸிம் நுமானி தெரிவித்தாவது, ''இந்த ஓராண்டுக்குள் நான் துணைவேந்தராகப் பதவியேற்ற பிறகு, சல்மான் ருஷ்டி வருவதை ஊடகங்கள் மூலம் அறிந்து அவரது விசாவை ரத்து செய்யக் கோரினேன். அதற்கு முன்பு என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. தேர்தலுக்காக இதைச் செய்யவில்லை’’, என்றார்.

இது மத்திய அரசு தொடர்பான பிரச்சினை என்பதால் அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷித் ஆல்வி தெரிவித்தார். ஆனால், இந்தப் பிரச்சினை முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படும் நாடகம் என பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாரமான் புகார் கூறுகிறார். ஆனால் ருஷ்டி வருகைக்கு ஆட்சேபம் தெரிப்பவர்கள் சட்டப்படித்தான் அதனை அணுக வேண்டும் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்யக் கூடாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத் கூறினார்.

மகன் பேஸ்புக்கில் 20 மில்லியன் டொலருக்கு விற்பனை


சவுதி அரேபியாZவைச் சேர்‌ந்த அல் சஹாரி என்பவர் தனது மகனை 20 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்துள்ளார். தனது வறுமையைப் போக்கவே இவ்வாறு செய்துள்ளா. சவூதி அரேபிய அரசாங்கம் இது சட்டவிரோத வர்த்தகம் என்று தெரிவித்துள்ளது.


35 வயதுடைய அல் சஹாரி தனது கடன் சுமையைப் போக்கவே இவ்வாறு பேஸ்புக்கில் அறிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் பிள்ளைகளை விற்பனை செய்வது சட்டவிரோத செயலாகும். அத்துடன் பேஸ்புக்கின் இந்த திறந்த வெளிப்படையான செய்திப் பரிமாறல் குறித்தும் பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

'துருவம்' யாருக்கும் விற்கப்படவில்லை - வதந்திகளை நம்பவேண்டாம்


'துருவம்' இணையத்தளம் தற்போது தனியொருவருக்கு விற்கப்பட்டதாக செய்திகள் பரவிவருகின்றன. எமது ஆசிரியர் பீடத்துக்கும் பலர் தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் நேரடியாகவும் இதுதொடர்பாக விசாரித்துள்ளனர். ஆகவே, இதுதொடர்பாக நாம் வாசகர்களுக்கு விளக்கமளிக்கவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.

'துருவம்' இணையத்தளம் யாருக்கும் விற்கப்படவும் இல்லை, விற்கப்படவும் மாட்டாது. நாங்கள் ஆரம்பத்திலிருந்து தனித்துவத்துடன் இயக்கிவருகின்றோம். எந்தக் காரணத்துக்காகவும் தனிப்பட்ட ஒருவருக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ இதனை விற்பனை செய்வதற்குரிய தேவை எமக்கு இல்லை.

எமது வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாத சில சக்திகளே இவ்வாறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இதுமுற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஆகவே, வாசகர்களாகிய நீங்கள் இந்த வதந்தியை நம்பவேண்டாம்இதுபோன்று யாராவது 'துருவம்' இணையத்தளத்துக்கு உரிமம் கோரினால் எமது ஆசிரியர் பீடத்துடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கின்றோம்.

பல சிரமங்களுக்கு மத்தியில் நாம் துருவம் இணையத்தளத்தை நடாத்தி வருகிறோம். ஆரம்பித்து 3 மாதங்களுக்குள் தற்பொழுது இலங்கையில் அதிகமாகப் பார்க்கப்படும் தமிழ் இணையத்தளங்களுக்குள் ஒன்றாக துருவம் இணையத்தளமும் இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். அத்துடன் (அலெக்ஸா) தரப்படுத்தலிலும் வேகமாக முன்னேறிக்கொண்டு வருகின்றோம்.

ஏனைய தமிழ் இணையத்தளங்களிலில் இருந்து மாறுபட்டு செய்திகளை கொப்பியடிக்காமல், ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் தனித்தனியாக செய்தியாளர்களை நியமித்து அவர்கள் சேகரிக்கின்ற செய்திகளை நாம் உடனுக்குடன் பிரசுரிக்கின்றோம். பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் எமது செய்தியாளர்கள் செய்திகளை சேகரித்து இரவு, பகல் பாராது துருவத்துக்காக உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு எமது ஆசிரியர் பீடம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

இலங்கைக்குள் மட்டுப்படுத்தப்படாமல் தற்போது வெளிநாடுகளிலும் நாங்கள் செய்தியாளர்களை நியமித்து வருகின்றோம். எதிர்வரும் காலங்களில் புதிய பல வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். ஆகவே, வாசகர்களாகிய நீங்கள் வதந்திகளை நம்பாமல் துருவத்தின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் ஆதரவிலேயே எமது வளர்ச்சி தங்கியுள்ளது. நன்றி.

 - பிரதம ஆசிரியர்

வடமேல் மாகாண அமைச்சின் செய்தியாளர் மாநாடு


(புத்தளம் செய்தியாளர்) 
வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடமைப்பு நிர்மாணம்,  மற்றும் கடற் தொழில் அமைச்சின் 2010ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி பணிகள்,  2011 ஆம் ஆண்டுக்காக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பான செய்தியாளர் மாநாடொன்று இன்று சிலாபம் இரணவில காரோலிகா ஹோட்டலில் இடம் பெற்றது.

வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடமைப்பு நிர்மாணம்,  மற்றும் கடற் தொழில் அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா தலைமையில்  அமைச்சின் செயளாலர் குமாரி வீரசேகர உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் இந்த  செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கடற்தொழில் அமைச்சுக்கள் தொடர்பாக 2010ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகள், 2011ஆம் ஆண்டுக்காக  மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பாக தனித்தனியாக புள்ளிவிபரங்களுடன் விளக்கமளிக்கபட்டது.



கல்முனை கல்வி வலயத்தின் 63ஆவது பாடசாலை திறப்பு


(பி.எம்.எம்.ஏ.காதர்) 
கல்முனை கல்வி வலயத்தின் 63ஆவது பாடசாலையாக "அக்பர் வித்தியாலயம்" நேற்று திங்கட்கிழமை பெரியநீலாவணை அக்பர் கிராமத்தில் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. அக்பர் கிராம மக்களின் நீண்ட கால கனவு இப்போது நிறைவேறியிருக்கின்றது. அந்த கிராமத்து மக்கள் தூரப்பாடசாலைகளுக்கு சென்றே தங்கள் கல்வியை தொடர்ந்து வந்தனர்.

ஆரம்ப பிரிவுகளில் கற்று வந்த மாணவர் பல சிரமங்களை எதிர்கொண்டனர். இதனால் ஆரம்ப பாடசாலை ஒன்றின் அவசியம் பற்றி எல்லோராலும் உணரப்பட்டது. இந்த விடயம் அக்பர் கிராம மஸ்ஜிதுன் அக்பர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் கவனத்தில் எடுக்கப்பட்டது. பள்ளிவாசல் நிர்வாகம் இந்த விடயத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எல். துல்கர் நஹீமின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

சட்டத்தரணி எம். எல். துல்கர் நஹீம் எடுத்த துரித முயற்சியின் பயனாக ஒரு மாதத்திற்குள் இந்த பாடசாலை அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டது. கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ரீ. ஏ. தௌபீக் அவர்களின் முதல் முன்மொழிவுடன் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ரீ.எம்.ஈ. போல், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என். ஏ. ஏ. புஷ்பகுமார ஆகியோரின் ஊடாக கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி,காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சர் கௌரவ விமலவீர திசநாயக்க அவர்கள் இதற்கான அனுமதியை வழங்கி இருக்கின்றார்.

கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எம். எல். துல்கர் நஹீம் அவர்கள் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். அக்பர் கிராமத்தின் முன்னாள் தலைவரும் இக்கிராமத்தின் முன்னோடியுமான வை. எல். அன்சார், தற்போதைய தலைவர் ஐ. எல். எம். பாறூக் ஆகியோரின் முன்னிலையில் இந்த விழா கோலாகலாமாக நடைபெற்றது.

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி,காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சர் கௌரவ விமலவீர திசநாயக்க அவர்கள் கலந்து கொண்டு பாடசாலையை திறந்து வைத்தார். கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை கலந்து கொண்டு பாடசாலையின் நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்து வைத்தார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. எம். ஏ. ரசாக் கலந்து கொண்டார். மேலும் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ரீ. எம். ஈ. போல், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ரீ. ஏ. தௌபீக், பிரதிக்கல்வி பணிப்பாளர் எம். எஸ். ஏ. ஜலீல் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம். கே. எம். மன்சூர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் கமுனை மாநகர சபை உறுப்பினர் ஏ. ஆர். அமீர் கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ். எல். ஏ. ரஹீம் உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ. எல். சக்காப் அக்பர் கிராம முஸ்லிம் விவாகப்பதிவாளர் எம். எம். உதுமாலெப்பை, சட்டத்தரணி எப். எம். ஏ. அன்சார் மௌலானா சத்தார் எம். பிர்தௌஸ் ஆகியோரும் அக்பர் பள்ளிவாசல் நிரவாகிகள் அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் அக்பர் கிராமத்தின் முன்னோடியாக செயற்பட்டு தன்னை அர்பணித்து வரும் வை. எல். அன்சாருக்கு அதிதிகள் வாழ்த்து பத்திரம், நினைவுச்சின்னம் என்பன வழங்கி கௌரவித்தனர். அதிபர் ஏ.எம். ஜிப்ரியின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. பிறை எப்.எம். கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் தொகுத்து வழங்கினார்.






'நிகாப்' அணிவதில் பெருமைப்படும் ஸாரா போக்கர்


நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்கா வில் ஏதோ பூகம்பமே வெடித்து விட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச் சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக் கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.

உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது.

எனக்குத் தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது.

பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான். நீச்சலுடை அல்ல. முன்னாள் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர்
அமெரிக்காவின் இதயப் பகுதியில் பிறந்த அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.

ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன். ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக் கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.

நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?

செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலசாரத்தைப் பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ''கூடாரத்துக்குள்'' அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.

அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குர்ஆனை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரேமாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன்.

கடைவீதிக்குச் சென்று நீளமான அழகான 'கவுன்' ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப் பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டதுபோல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவதுபோல் உணர்ந்தேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து 'பெரிய சுமை' கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.

''பெண்களை அவமதிக்கும் மதம்'' என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லிமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை (Hijab) அணிந்து கொண்டாலும் நிகாபை (Niqab) அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன். எனது முஸ்லிம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது, 'ஹிஜாப்' அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர 'நிகாப்' அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, 'நிகாப்' என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு என் கணவரிடம் மறுபடியும் எனது 'நிகாப்' இன் மீதுள்ள ஆசையை தெரிவித்தேன். இம்முறை நான் சொன்ன காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும் தட்டமுடியாது. ஆம். என் பிரியமுள்ள கணவரிடம் சொன்னேன், "நான் 'நிகாப்' அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும், அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும் என்று நம்புகின்றேன்'' என்றேன்.
இம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று அதனை வாங்கியும் கொடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்!!!

நான் 'நிகாப்' அணிந்துகொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு 'நிகாப்'' அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித் தீர்த்தனர்.

பெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும் சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லிம் பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன். குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துகிறேன். நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, 'நிகாப்' அல்லது 'ஹிஜாப்' அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதேவேளையில், ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணியவேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச் சொல்வேன்.

எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான் என்று.

சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது. அதனால்தான் நான் 'நிகாப்' அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான்.

நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண் விடுதலையின்  குறியீடு 'நிகாப்'தான். அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ''நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.''

- தமிழில் எம்.ஏ. முஹம்மது அலி

தையல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கல்


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
உலக உணவு வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை செயலகத்தினால் தையல் பயிற்சி நிலையங்களினுடாக தையல் பயிற்சிகளை முடித்துக் கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் இன்று சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரும் உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட நிறைவேற்று அதிகாரியுமான எஸ். அன்வர்டீன், உலக உணவுத் திட்டத்தின் மட்டு, அம்பாரை மாவட்ட வதிவிடப் பிரதிநிதி திருமதி செனப் ஹெபிற்றி, ஜனாதிபதி கூட்டிணைப்பு உத்தியோகத்தர் எம்.ரி. கரீம், கணக்காளர் ஏ.எல். மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், அபிவிருத்தி இணைப்பாளர் ஐ.எல்.யூ. றாபியூ, அபிவிருத்தி உதவியாளர் எம்.ஐ.எம்.பஸீர், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் எம்.ஏ. தம்பிக்கண்டு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் 400 யுவதிகளுக்கு சான்றிதழ் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரிக்க முயன்றவருக்கு பிணை



(கலாநெஞ்சன்) 
தேவாலயத்துக்கு சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நபரை நீர்கொழும்பு பிரதான நீதவான் 7,500 ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார் .

சீதுவை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார். சீதுவை பொலிசார் சந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்தனர். சீதுவை அமன் தொழுவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இந்த வழக்கின் முறைப்பாட்டாளராவார்.

2012 ஜனவரி முதலாம் திகதி வழக்கின் முறைப்பாட்டாளர் தனது நண்பியுடன் ராகமையில் உள்ள தேவாலயத்துக்கு சென்று கொண்டிருக்கும் போது, சீதுவை அமன்தொழுவ பிரதேசத்தில் வைத்து சைக்கிளில் வந்த சந்தேக நபர் முறைப்பாட்டாளர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கொள்ளையிட்டு செல்ல முயன்றுள்ளார் என்று வழக்கின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Older Posts