Wednesday, October 26, 2011

கடாபியைப் புதைத்த இடத்தின் மர்மம்


"கடாபியின் உடலைப் புதைத்தவர்கள் உண்மையான லிபியப் பிரஜைகளாக இருந்தால், புதைத்த இடத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்" இந்த வாக்கியங்கள் ஒலிப்பதுடன் முடிவடைகின்றது, அரபு மொழி தொலைக்காட்சி செய்தி ஒன்று. லிபியாவில் இருந்து செவ்வாய்கிழமை நேரடியாக ஒளிபரப்பு செய்த இந்த அரபு டி.வி. சனல், கடாபி புதைக்கப்பட்ட இடம் பற்றிய "ரகசியம்" குறித்த சர்ச்சை ஒன்றை சில நாடுகளில் ஏற்படுத்தி உள்ளது. அந்த இடத்தை ரகசியமாக வைத்திருப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

லிபியாவின் இடைக்கால அரசின் பிரதிநிதி இப்ராஹிம் பீட்டல்மால், "கடாபியின் உடல் இன்று காலை ரகசியமான இடம் ஒன்றில் புதைக்கப்பட்டது. அந்த இடம் ஒர் பாலைவனப் பகுதி என்பதைத் தவிர வேறு எந்தத் தகவலையும் தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளேன்" என்று ஏ.பி. செய்திச் சேவைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால், லிபியாவில் இருந்து வெளியாகும் வேறுசில செய்திகள், கடாபியின் உடல் திங்கட்கிழமை இரவே புதைக்கப்பட்டு விட்டது என்று கூறுகின்றன. எப்போது புதைக்கப்பட்டது என்பது சிக்கலை ஏற்படுத்தவில்லை. புதைக்கப்பட்ட இடம் ஏன் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்பதில்தான் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இப்ராஹிம் பீட்டல்மால், "கடாபியின் உடல் புதைக்கப்படுவதற்கு முன்னர் செய்யப்பட வேண்டிய சமயச் சடங்குகளை அவரது முன்னாள் சகா ஒருவரை வைத்து செய்திருந்தோம். மஹ்முத் ஹமிட் உட்பட கடாபியின் நெருங்கிய உறவினர்கள் இருவர் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்" என்று தெரிவித்துள்ளார். உடல் புதைக்கப்படும் போது இவர்கள் யாரும் அந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை.

லிபிய இடைக்கால அரசின் மற்றொரு அதிகாரி ஒருவர், "கடாபியின் உடல் புதைக்கப்பட்ட இடம் ரகசியமாக வைக்க வேண்டியது அவசியம் என்றே நாம் நினைக்கிறோம். காரணம், நாளைக்கே கடாபி ஆதரவாளர்கள் அந்த இடத்தை ஒரு நினைவுச் சின்னமாக மாற்றி விடலாம். வருங்காலத்தில் அந்த இடம் லிபிய சரித்திரத்தில் ஒரு நினைவுச் சின்னமாக மாறுவதை எமது அரசாங்கம் தடுக்க நினைக்கின்றது" என்று தெரிவித்திருந்தார்.

கடாபியின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதன்பின் உடல் முழுமையாக வெள்ளைத் துணி ஒன்றால் மூடப்பட்டு கட்டப்பட்ட புகைப்படமும் வெளியாகியது. புதைப்பதற்கு முன் மிக மெல்லிய மரத்திலான பெட்டி ஒன்றில் வைக்கப்பட்ட போட்டோ ஒன்றும் வெளியாகியது. அதன்பின், புதைக்கப்படும்போது எடுக்கப்பட்ட போட்டோக்களோ, யார் புதைத்தார்கள் என்ற விபரமோ, வெளியாகாதவாறு லிபிய இடைக்கால அரசு மிகக் கவனமான நடந்து கொண்டது.

லிபியாவுக்கு வெளியே வசிக்கும் கடாபி ஆதரவாளர்களால் நடாத்தப்படும் இணையத்தளங்கள் சில, இதற்கு எதிராக மக்களை ஒன்று திரளும்படி கோரிக்கை விடுத்துள்ளன. கொல்லப்பட்டவர் புதைக்கப்பட்ட இடம் பற்றி தெரிந்து கொள்வது தமது உரிமை. அதைத் தடுப்பது மனித உரிமை மீறல் என்கின்றன இந்த இணையத்தளங்கள். மொத்தத்தில், கடாபி கொல்லப்பட்டது எப்படி என்பதில் மர்மம் நீடிப்பதுபோல, அவர் புதைக்கப்பட்ட இடமும் மர்மமான விஷயமாகியுள்ளது. அந்த ரகசியத்தை உடைத்தே தீருவது என்ற முயற்சிகள் செய்யப்படுகின்றன.

0 comments:

Post a Comment