(எஸ்.எம். அறூஸ்)
தியகம மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 23ஆவது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
100 மீற்றர் ஓட்டத்தில் 11.00 செக்கன்களில் ஓடி முதலாமிடத்தையும், 200 மீற்றர் ஓட்டத்தில் 22.20 செக்கன்களில் ஓடி முதலாமிடத்தையும் பெற்று தங்கப்பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் முதலாமிடம் பெற்றிருப்பது வரலாற்றில் இதுதான் முதற்தடவையாகும்.
அண்மையில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் ஒரு அம்சமான ஆண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர், 4X 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டிகளிலும் அஷ்ரப் முதலாம் இடத்தினைப் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
திருகோணமலை மக்ஹெய்சர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏ.எல்.எம். அஷ்ரப் மெய்வல்லுனர் போட்டியிலேயே சம்பியனாகத் தெரிவாகியிருந்தார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாமிடத்தினைப் பெற்றதோடு அண்மையில் குருநாகலில் நடைபெற்ற தேசிய கூட்டுறவுதின விளையாட்டு விழாவில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பொத்துவில் பிரதேசம் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமமாகும். இந்தப் பிரதேசத்திலிருந்து அவ்வப்போது பல சாதனையாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள். அந்த வகையில் விளையாட்டுத்துறையில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் இந்நாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.அப்துல் மஜித் ரக்பீ விளையாட்டில் தேசிய அணியில் இடம்பிடித்து விளையாடியதோடு அந்த அணிக்கு தலைமை தாங்கியும் உள்ளார்.
கிழக்கு மாகாணமே அறியாத, அங்கு விளையாடப்படாத ரக்பீ விளையாட்டில் பொத்துவிலைச் சேர்ந்த எஸ்.எஸ்.பி. அப்துல் மஜித் தேசிய அணியில் விளையாடியது முழுக் கிழக்கு மாகாணத்திற்கே இன்றுவரை பெருமைதரும் விடயமாகும். அந்த வகையில் பொத்துவில் மத்திய கல்லூரியிலிருந்து இலங்கையின் அதிவேக இளம் ஓட்ட வீரராக ஏ.எல்.எம். அஷ்ரப் இன்று இனம் காணப்பட்டுள்ளார்.
அஸ்ரபின் வெற்றி இன்று முழுக் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை தரும் விடயமாக மாறியுள்ளது. அவரது வெற்றியை பாராட்டுவதோடு, எதிர்காலத்தில் அஷ்ரப் தேசிய அணியில் இடம்பிடித்து சாதனை படைப்பதற்கு கிழக்கு மாகாணசபை மற்றும் அரசியல்வாதிகள், தனவந்தர்கள் முன்வரவேண்டும்.
இந்த வெற்றி மூலம்தான் மிகவும் சந்தோசமடைவதாகவும், பயிற்சியாளர், எனது குடும்பம், இளைஞர் சேவை அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் தேசிய அணியில் இடம்பிடித்து நாட்டுக்குப் பெருமை தேடிக்கொடுக்க வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும் என அஷ்ரப் நம்மிடம் பேசும்போது தெரிவித்தார்.



0 comments:
Post a Comment