Thursday, November 24, 2011

நாட்டின் அபிவிருத்தியில் அதிவேக நெடுஞ்சாலை


(எஸ்.எல். மன்சூர்) 
நாட்டின் அபிவிருத்தியில் பாதை அபிவிருத்தி விசேடமான இடத்தை வகிக்கிறது. நாட்டின் எப்பாகத்திற்கும் செல்ல வேண்டுமானால் சீரான பாதையின் ஒழுங்கு அமையவேண்டும். அது சரியாக அமையாவிட்டால் பயனிக்க முடியாது. கடந்தகாலங்களில் நாட்டில் தொடர்ச்சியாக இருந்துவந்த யுத்தம் எவ்வித அபிவிருத்திக்கும் இடைஞ்சலாக இருந்து வந்துள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும்.  இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த 2005இல் நாட்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இன்றைய ஜனாதிபதியின் அபிவிருத்தி மூலோபாயத் தந்திரத்தின் ஊடாக மகிந்த சிந்தனை எனும் எண்ணக்கருவுலமாக பாதை அபிவிருத்திக்கு வித்திட்டது. இதன் மூலம் நாட்டின் எந்தவொரு இடத்திற்கும் செல்ல பாதையின் அவசியத்தை உணர்ந்த அரசு நாட்டின் வடக்கு கிழக்கு மேற்கு, தெற்கு என்று பாதையின் சீராக்கத்தை வெற்றிகரமாக முன்கொண்டு நாட்டையும், நாட்டின் அபிவிருத்தியையும் ஆச்சரியமிக்கதாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இவ்வேiளியல் மாபெரும் பாதைப் புரட்சியான தெற்கின் அதிவேக நெடுஞ்சாலை அமைகிறது என்றால் மிகையாகாது.


அந்தவகையில் கடந்த 2003ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாதையின் அபிவிருத்தி மந்தகதியில் இருந்து வந்திலிருந்தபோதிலும், மகிந்த சிந்தனையின் ஊடாக துரிதப்படுத்தப்பட்டு நாளை (27.11.2011) கௌரவ ஜனாதிபதியினால் திறக்கப்படவுள்ளது. இப்பாதையின் நீளம் 100 மீற்றர்கள் கொண்டதாக காணப்படுகிறது.  கொழும்பு அண்மையிலுள்ள கொட்டாவ எனும் இடத்திலிருந்த காலிக்கு அண்மையிலுள்ள பின்னதுவ எனும் இடம் வரையில் அமைக்கப்பட்டுள்ள இப்பாதைக்கு எட்டு இடங்கள் உள்ளே போகவும், வெளியேறவும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பாதுகாப்பு கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. கொட்டாவ, கஹதுடுவ, களனிகம, வெலிபன்ன, குறுந்துஹா, தாபம, தொடங்கொட, பத்தேகம, பின்னதுவ போன்ற எட்டு இடங்களினூடாகவே பயணம் மேற்கொள்ள முடியும். உண்மையில் இவ்வாறான ஒரு முயற்சி இலங்கையின் பாதை அபிவிருத்தியில் புதுயுகம் படைக்கிறது. காலவோட்டத்திற்கேற்ப நாமும் விரைந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டுள்ள மனிதன் உலகின் போக்குக்கு ஏற்ப எம்மையும், நமது பாதைகளையும் வடிவமைக்கப்பட வேண்டியதன் அவசியம் இப்பாதையின் ஆரம்பத்துடன் ஆரம்பமாகின்றது எனலாம். 


ஜப்பானின் சர்வதேச வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கையரசு, ஏனைய நிதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாதையில் 22 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பயணிக்க வேண்டுமானால் பணம் கொடுத்து, அப்பாதையில் செல்லத்தக்கதாக வாகனம் அமையும் பட்சத்தில்தான் இப்பாதையில் செல்ல அனுமதி கிடைக்கும். குறிப்பாக சில வாகனங்கள் இப்பாதையில் செல்லத் தடைசெய்யப்பட்டுள்ளன. விசேட பயிற்சிகள் பெற்றுள்ள சுமார் 500 பொலிசார் 24 மணிநேரமும் இயங்கும் நிலையில் விசேட வாகனங்களில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர் எனத் தெரியவருகிறது. இப்பாதையின் முழுப்பொறுப்பும் போக்குவரத்துப் பொலிஸ்பிரிவின் அதிகாரியான கே. அரசரத்தின் தலைமையில் இயங்கவுள்ளது. சட்டவிரோதமாக நுழைகின்ற நபர்களுக்கும், வாகனங்களுக்கும் தண்டப்பணமும் அறவிடப்படவுள்ள நிலையில் இப்பாதையில் பயணம் செய்வதற்கேற்ற வாகனங்களின் பருமன், அளவு போன்றவற்றிக்கேற்ப 400.00தொடக்கம் 2000.00வரையில் இப்பணத்தொகை அமையும் எனவும் கூறப்படுகிறது.


எது எப்படியிருந்த போதிலும் நாட்டில் அதிவேகப்பாதைபோல அதிவேகமான முறையில் இனப்பிரச்சினைக்குரிய தீர்வையும் மையப்படுத்திய தீர்வை முன்னிலைப்படுத்தி கிழக்கு, வடக்குப் பிரதேசங்களில் இருந்து எப்பாகத்திற்கும் விரைவாக செல்லக்கூடிய பாதைகளையும் அமைக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்றைய அமைதியும், அபிவிருத்தியும் கட்டாயம் தேவையான ஒன்றாகும். இது எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்பதே அனைவரும் பிரார்த்தனையுமாகும். நாட்டின் அபிவிருத்தியினை முன்னிலைப்படுத்தி மகிந்த சிந்தனையின் கருவூலம் கிழக்கு மாகாணம் முழுவதும் பாதையின் அபிவிருத்திக்கு தடையாக காணப்பட்ட வாகரையூடாக மூதூர், கிண்ணியா பாலங்கள் அமைத்தமை, மன்னார் ஊடாக யாழ்ப்பானம் செல்ல சங்குப்பிட்டி பாலம் அமைத்தமை, இதுபோன்ற இன்னும்பல பாலங்களும், மேம்பாலங்களும் அமையப்பெற்றுள்ளமை நாட்டின் அபிவிருத்தியின் இலக்கை எட்டும் நிலை வெகு தூரத்திலில்லை என்றே கூறலாம்.


அதேவேளை பிரதான பாதைகள் இவ்வாறு நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றபோது உள்ளுர் வீதிகளும் நவீன முறையில் சீராக்கப்பட்டு வருகின்றமை போற்றத் தக்கதாகும். மாகாண அமைச்சுக்கள், பிரதேச சபைகள் ஊடாக பிரதேசங்கள் தோறும் கொங்கிரீட்டிலான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கால கட்டங்களில் சில உள்ளுர் வீதிகள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள சில பிரதேச சபைகளில் இவ்வாறு துரிதப்படுத்தப்பட்ட வீதி அபிவிருத்தியை பல பாதைகள் கண்டுகொள்ளாமலே உள்ளமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். மக்கள் வசிக்கின்ற பிரதேங்களில் காணப்படும் இப்பாதைகளை செப்பனிட வேண்டிய பாரிய பொறுப்பு பிரதேச சபைகளுக்கும் உண்டு.

அதனை மாகாண அமைச்சிடமிருந்தோ, மத்திய அரசிடமிருந்தே பணத்தைப் பெற்று திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அமைச்சு ஒருபுறம், பிரதேச சபைகள் ஒருபுறம் அதாவது கட்சி அரசியல் செய்வோராக காணப்படுகின்றபோது மக்களுக்கு கிடைக்கின்ற சேவைகள் தடைப்படுகின்ற ஒரு நிலையும் காணப்படுகிறது. இன்று நாட்டின் அதிவேக பாதை திறக்கப்படவுள்ள நிலையில் கிராமங்களில் சுமார் 61226 பாதைகள், பாலங்கள் அமைக்கும் திட்டங்களை அரசு மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கான திட்டங்களை செய்வதற்கு அரசியல் வாதிகளும், அரச அதிகாரிகளும் தங்களுக்குள்ள பேதங்களை மறந்து வீதி அபிவிருத்தியில் மைல்கல்லை எட்ட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.


கடந்தகாலங்களில் வீதி அபிவிருத்தி என்ற பேரில் கிறவல்களும், தார்களையும், மண்ணையும் போட்டு பணத்தை பெற்ற வரலாறுகளை உடைத்தெரிந்து உண்மையான பாதையமைப்பை இன்றைய அரசு அமைத்துத் தந்துள்ளது. கடந்தகாலங்களில் அமைக்கப்பட்ட பாதைகள் ஒரு மழைக்காலம் வந்தால் அத்தோடு முடிந்துவிடும் பாதையால் பயணிக்க முடியாது குன்றும் குழியுமாக காணப்படும். ஆனால் இன்று அமைக்கப்படுகி;ன்ற பாதைகள் தரமானவையாகவும், உறுதியானவையாகவும் காணப்படுவதனால் நீண்டாகலம் பயனுடையதாக இருக்கும் என்று திடமாக நம்பலாம். இந்த அடிப்படையில் கிராமங்களில் காணப்படும் உள்ளுர் பாதைகளை உறுதியாக அமைக்கின்ற ஒரு நிலையை பிரதேச சபைகள் மேற்கொள்ள வேண்டிய கடப்பாடும் உண்டு.

எனவே, எதிர்காலத்தில் நாட்டின் எப்பாகத்திற்கும் விரைவாகவும், குறைந்த செலவில் செல்லத்தக்கதாக அதிவேகப் பாதைகளை அமைத்து வடக்கு கிழக்கு மக்களும் தெற்கு மேற்கு போன்ற பிரதேசங்களுக்குச் சென்றுவர விரைவான பாதைகள் அமைய வேண்டும். அத்துடன் இப்பாதைகளை இணைக்கின்ற கிராமப்புற பாதைகளையும் அமைப்பதற்கு கொள்கைகள் வகுத்து செயற்பட வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் உள்ள அனைவரும் கவனமெடுத்து சிறந்தபோக்குவரத்திற்கு உதவிடுமாறு நற்காரியத்தை செய்ய உறுதி பூணுமாறு மக்கள் வேண்டுகின்றனர்.

0 comments:

Post a Comment