பால்நிலை விழிப்புணர்வுகள் மேலோங்கப்படுவதன் மூலம் எயிட்ஸிலிருந்து தவிர்ந்தகொள்ள முடியும்
எஸ். எல். மன்சூர் (கல்விமானி)
‘வாழ்க்கையானது ஒரு மலரைப் போன்றது. அதில் தேன் போன்றது காதல்' என்பதாக ஒரு அறிஞர் கூறுகின்றார். காதல் இயற்கையாக தோன்றும் ஒருவிடயம். மனித இனம் மட்டுமல்ல அனைத்துப் படைப்பினங்களிலும் காதலில் வயப்பட்டு இனப்பெருக்கத்திற்கு வழிவகுத்திட உதவி நிற்கின்ற சங்கதியை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இருந்தாலும் முறைகேடான காதலும், புதியதாக அனுபவிக்கத் துடிக்கும் மனித விழுமியங்களும், முறைகேடான பழக்கவழக்கங்களும் மனிதனை அசிங்கமானவனாக துரத்திச் செல்கின்ற ஒரு செயற்பாடுதான் பால்வினை நோய்களாக வந்தடைகின்றன. முன்னோர் கூறிய கூற்று இதற்குப் பொருத்தமாக இருக்கலாம். ‘ஒருவனுக்கு ஒருத்தி' என்கிற தாரகை மந்திரம் பலவாறான உண்மைகளை உணர்த்தியே நிற்கின்றன.
பொதுவாக ஆண் பெண்களுக்கிடையிலான உயிரியல் ரீதியான வேறுபாடாக ‘பால்' காணப்படுகின்றது. உயிரியல் ரீதியான வேறுபாடுகள் என்கிறபோது அவை உடலுறுப்பு, உடற்றொழிப்பாடுகள், ஓமோன் சுரப்புக்கள் என்பனவாக காணப்படுகினறன. அத்துடன் சமூகத்தில் ஆண்கள் பெண்கள் ஆகியோருக்கு வழங்குகின்ற ஒரு சமுதாய அந்தஸ்துதான் பால்நிலையாகும். இது உயிரியல் உருவாக்கம் அல்ல. ஆனால் சமூதாயத்தினால் உருவாக்கப்பட்ட விழுமியங்கள், பாத்திரங்கள், குணாதிசயங்கள், மனப்பாங்குகள் ஆகியவற்றைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. எது எப்படியிருப்பினும் சமூகமானது பால் வேறுபாட்டை பால்நிலை வேறுபடாகவே வளர்க்கின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.
உலகில் தற்காலத்தில் மக்கள் தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர். ஒருநாளில் 70 வீதத்திற்கும் மேற்பட்ட நேரம் பெண்கள் வேலை செய்கின்றவர்களாகவும், உணவுத் தேவையில் சுமார் 50 வீதமானவற்றை பெண்களேதான் உற்பத்தி செய்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர். அத்துடன் இவர்களது கல்வியறிவு 75 வீதத்திலும் வருமானத்தில் பத்துசதவீதத்தையும் ஈட்டுகின்ற ஒருநிலையும் காணப்படுகின்றது. இவ்வாறான பெண்கள் சமுதாயத்தில் ஒரு போதைப் பொருள் போன்று பார்க்கப்படுகின்றனர். இவ்வாறான ஒரு இழிநிலை காரணமாக அதனை மிகவும் பக்குவமின்றி பயன்படுத்துகின்ற பெண்கள் மிகப்பெரிய பால்வினை நோய்களுக்கு ஆளாக்கப்பட்டு நோய்க்காவிகளாக உலாவருகின்றனர். சமுதாயத்தின் கண்கள் பெண்கள். இவர்களைப் பாதிக்கவைக்கின்ற பாரிய பங்களிப்பில் ஆண்கள் காரணமாக அமைகின்றனர்.
நமது நாட்டில் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட விலை மாதர்கள் உலாவருகின்றனர் என்கிற செய்திகளை பத்திரிகையில் பார்க்கின்றபோது இவ்வளவுக்கு நமது பெண்கள் போக்கற்றவர்களாகவும், கீழ்தரமான சபல புத்தியுடையவர்களாகவும் காணப்படுகின்றனரா? என எண்ணத் தோன்றுகின்றது, இவர்களது உருவாக்கத்திற்குப் பின்னால் நிச்சயமாக ஆண்களும் இருக்கிறார்கள் என்பது பகிரங்கமானதோர் உண்மை என்றே கூறலாம். வழிகெட்டு பெண்கள் செல்வதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இந்தச் சின்னஞ்சிறிய நாட்டில் இந்தத்தொகை எதிர்கால சமுதாயத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகவே அமையும் என்பதில் சமூதாய ஆர்வலர்கள் கவனம் செலுத்துதல் கட்டாயமாகும்.
இன்று எச்.ஐ.வி. பற்றிய அறிவு அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் போதியளவான விழிப்புணர்வுகள் அனைவரையும் சென்றடையவில்லை என்பதையே இவைகள் சுட்டிக்காட்டுகின்றன. 2005 ஆம் ஆண்டின் அறிக்கை ஒன்றின்படி சுமார் 743 HIV காவிகள் காணப்பட்டனர் எனவும், அதன் காரணமாக 140 பேர் இறந்துள்ளனர் எனவும் 15 வயதிற்கு மேற்பட்டோருக்கும் இவை ஏற்படுகின்றன எனவும் கூறப்பட்டது. கடந்த 1987ஆம் ஆண்டிலிருந்து இந்த HIV பற்றிய நோய் இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இன்றுவரை கூடிக்கொண்டே வந்திருக்கின்றன.
இதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்ற ஒரு நிலைமை காணப்பட்டாலும் போதியளவான கற்றலுடன்கூடிய ஒரு நிரந்தரமான விழிப்புணர்வுகள் தொடராக ஊட்டப்படுகின்றபோது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படலாம் என்பது பலரின் கருத்தாகும். மகாகவி பாரதியின் கருத்துப்படி ‘கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான்' என்று கூறுகின்றார். உண்மையில் ஆண்களும் கற்புடையவர்கள் என்பதைத்தான் இவரது கூற்று சுட்டிக்காட்டுகின்ற அதேவேளை பல்வேறு பாலியல் நோய்களுக்கும் ஆண்கள் உள்ளாக்கப்படுகின்றனர் அத்துடன், முறைகேடான இச்சைகளினாலும் பால்வினைநோய்கள் ஏற்படுகின்றன என்பதை ஆண்களும் உணர்ந்;திருத்தல் அவசியமாகும்.
Human Immuo Virus எனப்படுகின்ற இவ்வைரஸ் எற்டுத்துகின்ற Acquired Immune Deficiency Syndrome என்கிற மாற்றம் காணமுடியாத நோய்க்கு இட்டுச் செல்ல இது உதவுகின்றது. அத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியை இல்லாதொழித்து நோயின் தாக்கத்தை அதிகரிக்கவைத்து இறுதியில் மரணத்திற்கு இட்டுச் செல்கின்ற நிலைக்கு இதன் தாக்கம் பயங்கரமானதாக காணப்படுகிறது. பொதுகவாகவே ஆண்-பெண் சேர்வதால் 85 வீதமும், ஆணும் ஆணும் சேர்வதால் (ஓரினச் சேர்க்கை) 11 வீதமும், தாய் மூலமாக பிள்ளைக்கு (பாலூட்டுவது போன்ற) 3 வீதமும், இரத்த ஏற்றத்தின் மூலமாக 1 வீதமும் பரவுகின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான HIV/AIDS சுகாதாரத்துறைக்கு பாரியதோர் அறைகூவலாகவே காணப்படுகின்றது. இக்கொள்ளை நோய் ஆரம்பித்த காலத்திலிருந்து கடந்த2000ஆம் ஆண்டுவரை உலகில் சுமார் 22மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். 2000ஆம் ஆண்டில் மாத்திரம் 3 மில்லியன் மக்கள் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மேலும் 5மில்லியனுக்கும் மேற்பட்டோர் புதிதாய் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியும் இருந்தனர். அவ்வருடத்தில் 36 மில்லியன் மக்களுக்கு இத்தொற்றுக்கள் தொற்றியிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பத்தாண்டுகள் கழிந்துள்ள நிலையில் இதைவிட அதிகமாகவே காணப்படும்.
அத்துடன் இலங்கையின் பாலியல் தொழிலில் ஈடுபாடுகாட்டுகின்ற தொகையினரின் அதிகரிப்பானது நமது நாட்டிலும் அதிகமான HIV/AIDS நோய்க்குள்ளானவர்கள் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இன்று நாட்டில் அழகுச் சிகிச்சை நிலையங்கள் என்றபேரில் பல விபச்சார விடுதிகள் அண்மைக்காலங்களில் பொலிஸாரின் தேடுதலில் அகப்பட்டுள்ளனர். கிராமப்புற இளம் யுவதிகள் இவ்விடயத்தில் நகரத்திற்கு தொழில் வாய்ப்பு என்கிற பேரில் அங்கு சென்று விபச்சாரிகளாக ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில்கூட தொழில்பேட்டைகளில் வேலை செய்கின்றனர் என்றபோர்வையில் பல பெண்கள் பொலிசாரிடம் அகப்பட்டுள்ளனர். இவைகள் ஆச்சரியமிக்க நாட்டைக் கட்டியெழுப்பும் மகிந்த சிந்தனைக்கு பாரியதோர் அச்சுறுத்தலாக அமையும். ஆதலால் அரசு இவ்விடயத்தில் மிகக்கண்டிப்புடன் அழகு நிலையங்களை பார்த்துக் கொள்ளல் வேண்டும்.
பொதுவாக மரணங்களுக்கும் நோய்வாய்ப்படலுக்கும் முக்கிய காரணங்களாக அமைந்துள்ள தொற்று நோய்களும், ஊட்டக்குறைபாடுகளும் தொடர்ந்தும் நிலவுகின்ற அதேவேளை எல்லைகளுக்குள்ளும், எல்லைகடந்து வெளிநாட்டுப் பயணங்கள், பூகோளமயமாக்கம் என்பனவும் இதன் பரவலுக்கு காரணமாகின. அத்துடன் சூழல் மாசடைதல், சூழல் அழிவு, நகரமயமாக்கல் என்பன துரித வளர்ச்சியடைதல், கைத்தொழில் மயமாக்கல், நகர்ப் பிரதேசங்களில் வாழ்க்கை வட்டத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் போன்றவைகள் மனிதருக்கு இடையிலான உளரீதியான நெருக்கிடையை அதிகரிப்பதற்கான காரணங்களாகவும் காணப்படுகின்றன. இதன் விளைவாக தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் போன்ற இரு வகையான காரணங்களும் சுகாதார ரீதியான பிரச்சினைகளை உருவாக்கி பாரியதோர் சுகாதார சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லலாம்.
இன்றைய உலகில் பாரியளவில் சனத்தொகை வளர்ச்சி காணப்படுகிறது. இதில் 95 வீதமானோர் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில்தான் இந்நோய்க்குள்ளாக்கப்படுவோர் காணப்படுவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக பாடசாலைப்பிள்ளைகள் இன்று தனியார் வகுப்புக்கு செல்கின்றனர் என்று கூறிவிட்டு ஒழுக்கம் கட்டுப்பாடுகளை மீறி இளம் வயதில் தன்னைக் கெடுத்துக் கொள்கின்ற ஒரு நிலையும் காணப்படுகிறது. அண்மைக்காலங்களில மலையகம், யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் பலர் விபச்சாரத்திற்கு வழிவகுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் ஒரு பயிற்சிக் கூடத்தில் பலர் முறைகேடான வகையில் நடந்து கொள்வதாக பத்திரிகைள் சுட்டிக் காட்டியதை நாம் மறந்துவிடமுடியாது. யுத்தம், வறுமை, ஆண்கள் வெளியேற்றம், ஆண்கள் இறந்துபோனமை, ஆண்கள் ஊனமுற்றமை போன்றன பெண்களின் முறைகேடான நடத்தைக்கு காரணமாக அமைந்துள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள். அதுமட்டுமன்றி சில ஆசிரியர்கள், சில அதிபர்கள் மாணவிகளுடன் சல்லாபம் செய்கின்ற செய்திகளும் இன்றைய நாட்களில் எம்மை அதிரவைக்கின்றன. மேலும் காதல் என்றபேரில் மாணத்தை இழப்பது இதுபோன்ற சமூக நோய்களுக்குள்ளாகி எதிர்காலத்தில் சமுதாயத்தை சீரழிக்கின்ற நிலைக்குத் தள்ளபட்ட இக்காரியங்கள் கட்டுமீறியுள்ளன. இவைகள் சமுதய ஆர்வலர்களின் மீது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சமுதாயம் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களும் பாலியல்ரீதியான தொழிலுக்குள்ளாகி நோய்க்காவிகளாக எதிர்காலத்தில் உலாவருவர்.
உண்மையில் பாடசாலைப் பிள்ளைகள் பாலியல ரீதியில் உயிர்ப்பாகச் செயற்படத் தொடங்குகின்ற, புதிய அனுபவங்களைப் பெறவிரும்புகின்ற, சமுதாயத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக சமவயதுக் குழுக்களின் ஆதிக்கத்திற்கு ஆளாகின்ற பருவத்திலேதான் காணப்படுகின்றனர். பாலியல் நடத்தைககள், போதைப் பொருள்கள், நடிகர் நடிகைகளை பின்பற்றுதல் போன்ற விடயங்களில் சமுதாயத்தில் இடம்பிடிப்பதற்காக உலகாதாய பௌதீகப் பொருள்களின் பால் அதிக நாட்டம் காட்டல், செல்போன், இன்டர்நெட் போன்ற நவீன தொழிட்நுட்பங்கள் காரணமாக இப்பருவத்தினர் கவரப்படுகின்றனர். இவைகளின் விளைவாக உருவாகும் பொறுப்பற்ற நடத்தைகள் காரணமாக தானாகவே எச்.ஐ.வி. தொற்றடையும் ஆபத்தை அதிகரிப்பவையாகவே அமைந்துவிடுகின்றன.
சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் பாலியல் (விபச்சாரம்) தொழிலுக்காக விற்பனை செய்யப்படுகின்றனர். சமவயதுக்குழுவினர் அல்லது வளர்ந்தோரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். இன்னும் கன்னியருடன் பாலியல் உறவு கொள்வதன் மூலமாக எயிட்ஸ்யை குணப்படுத்தலாம் என்கிற மூடநம்பிக்கைகளும் கிராமப்புறங்களில் சில இடங்களில் காணப்படலாம். இதிலிருந்து தவிர்ந்து கொண்டு எமது சந்ததிகளை நாம் பாதுகாத்தல் வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகங்கள் இன்று நாட்டின் நாலா பக்கங்களிலும் ஏற்பட்டுக் கொண்டேதான் வருகின்றன. எப்படியான தண்டகைள் இருப்பினும் இலகுவாக சட்டத்திலிருந்து தப்பிவிடுகின்றனர். இவ்வாறான தண்டணைகள் அதிகபட்சமாக அமைவதற்கு புதிய சட்ட ஏற்பாடுகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நாட்டில் பாலியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது சமுதாயத்தினதும், அரசினதும் கடமையாகும். அண்மையில் தென்கிழக்கு பிரதேசத்தில் ஒருபாடசாலையின் அதிபர் பல இளம் சிறார்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வயப்படுத்தியுள்ளமை கசியத்தொடங்கியுள்ளது. இவைகள் வெளிக்கொணரப்பட்டு அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஒழுக்க நிறைந்த கட்டமைப்பினை பாடசாலைகளில் ஏற்படுத்தலாம்.
எனவேதான் சமுதாயத்தின் முன் இவ்வாறான நோய்த்தாக்கங்களின் உணர்வுகளை ஒப்புவிப்பதற்கு காத்திரமான பங்களிப்புக்களை செய்வதற்கு சுகாதாரத்துறைக்கு சமுதாய ஆர்வலர்கள் உதவுதல் வேண்டும். பொதுவாக சில வழிகளில் எச்.ஐ.வி. ஏற்பட்டாலும் கட்டித்தழுவுதல், கைகுலுக்குதல், தொடுதல், கண்ணீர், மலசலகூடங்கள், இருமல், பூச்சிகள், தடாகங்களிலோ ஆற்றிலோ கடலிலோ நீந்துதல், குளித்தலால் இவை பரவுவதில்லை. நீங்கள் (ஆண், பெண்) அறிமுகமற்ற ஒருவருடன் அல்லது பலருடன் பாலுறவு கொண்டீர்களானால், தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டீர்களானால், மேலே குறிப்பிட்ட நபருடன் பாலியல் தொடர்பு கொண்டால், போதைப் பொருள் ஏற்றிக் கொள்ளும் உபகரணங்களைப் பிறருடன் பரிமாறிப் பயன்படுத்தீர்களானால் உடனடியாகவே இரத்தப் பரிசோதனைக்கு தம்மை உட்படுத்துதல் அவசியமாகும். இரத்தப்பரிசோதனைகள் அரச வைத்தியசாலைகளில் இலவசமாகவே செய்துகொள்ளப்படுகின்றன.
எனவே, இளமை இதமானது, எனினும் அறியாமை, பொறுப்பின்மை போன்ற காரணங்களினால் அதனை இழந்திட நேரிடலாம். அதிலிருந்து பாதுகாப்புப்பெற நீங்கள் விழிப்பாய் இருங்கள். பொறுப்புடன் செயற்படுங்கள். அத்துடன் சமுதாயக் கட்டுப்பாடுகள், சமய விடயங்கள், தொடரான கற்றல் செயற்பாடுகள், பெரியோரின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்து நமது வாழ்க்கையை ஆரம்பித்து நம்மை நாம் பாதுகாத்திட திடசங்கற்பம் பூணுவதுடன், HIV/AIDS போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறவும், பாலியல் பற்றிய சரியான விடயங்களை அறிந்து, சிந்தித்து செயல்படுவதற்கும், ஒழுக்கம் நிறைந்த பாடசாலைக் கட்டமைப்பைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஆசிரியர்களும், அதிபர்களும் கால்கோளாய் அமைய வேண்டும் என்பதுடன், இவைபற்றிய விழிப்புணர்வுகளை சமுதாயத்தின் முன்கொண்டுவர உரியவர்கள் அர்ப்ப சிந்தையுடன் செயற்படுத்த வேண்டும் என்பதே நமது கணவு.







0 comments:
Post a Comment