
இஸட் ஸ்கோர் புள்ளி தொடர்பான குழப்பத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மாணவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டு அடுத்த வாரத்தினுள் உயர்தரப் பெறுபேறுகளை வெளியிட உத்தேசித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனநாயக தேசிய முன்னணி எம்.பி. அநுர குமார திஸாநாயக்க முன்வைத்த கவனயீர்ப்பு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
5 வருடத்துக்கு ஒரு தடவை உயர்தர பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி பழைய பாடத்திட்டம், புதிய பாடத்திட்டம் என இரு பாடத்திட்டங்களின் கீழேயே பரீட்சை நடத்தப்பட்டது. வினாத்தாள்கள் திருத்தும் பணி ஏற்கெனவே முடிந்துவிட்டது. இரு இஸட் புள்ளி முறைகளை வெளியிட முடியாததால் இந்த சிக்கல் குறித்து 3 மாதங்களுக்கு முன்னரே பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அறிவித்தோம். உயர்தரப் பரீட்சை முடிவுகளை வெளியிட வேண்டாமென 3 வாரங்களுக்கு முன் மானிய ஆணைக்குழு கோரியிருந்தது.
இந்த நிலையில் இஸட் புள்ளி தொடர்பான குழப்பத்தை தீர்க்க நிபுணத் துவ குழுவொன்று நியமிக்கப்பட்டது. நிபுணத்துவ குழுவினால் இஸட் புள்ளி தொடர்பில் ‘சூத்திர'மொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சூத்திரத்திற்கு ஏற்ப பரீட்சைக்குத் தோற்றிய சகல மாணவர்களினதும் புள்ளிகள் தொகுக்கப்பட்டு மாணவர்களின் இஸட் புள்ளி தயாரிக்கப்படும்.
சனி, ஞாயிறு தினங்களிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு அடுத்த வாரத்தினுள் உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும். இஸட் புள்ளியின் ஒரு தசம அளவு மாறினாலும் ஒன்றோ டாக்டராகலாம் அல்லது நடத்துநராகலாம். எனவே, மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இஸட் புள்ளி தயாரிக்கப்படும். மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்காக அவசரப்பட்டு பெறுபேறுகளை வெளியிட முடியாது. அவசரப்பட்டு பெறுபேறு வெளியிடுவதால் சிக்கலே ஏற்படும்.
0 comments:
Post a Comment