
தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையில் பெரும் மோதலாக மாறியிருக்கும் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை குறித்த செய்திகளை இந்தியாவில் இருக்கும் ஆங்கில ஊடகங்கள் வெளியிடும் விதம் சமீபத்தில் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. சர்ச்சைக்குரிய அணை, 'முல்லைப் பெரியாறு அணை' என்று தமிழ்நாட்டிலும் 'முல்லப் பெரியாறு அணை' என்று கேரளத்திலும் அழைக்கப்படுகிறது. முல்லை மற்றும் பெரியாறு ஆகிய இரு நதிகளின் தண்ணீரும் இந்த அணையில் தேக்கப்படுவதை குறிக்கும் விதத்தில் இந்த பெயர் பயன்படுத்தப்படுவதாக கருதப்படுகிறது.
இந்த பின்னணியில், தமிழ்நாட்டில் வெளியாகும் ஆங்கில தினசரிகள் உள்ளிட்ட பெரும்பாலான இந்திய ஆங்கில ஊடகங்கள் தாங்கள் வெளியிடும் செய்திகளில் கேரள பாணியில் இந்த அணையை முல்லப் பெரியாறு அணை என்று ஆங்கிலத்தில் செய்திகள் வெளியிடுகின்றன. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் வெளியாகும் ஆங்கில தினசரிகளில், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்த பிரச்சினை குறித்து பேசிய பேச்சுக்கள் தொடர்பான செய்திகளில் கூட முல்லப் பெரியாறு என்கிற மலையாள பாணி சொல்லே பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடக்கும் செய்திகளை தமிழக வாசகர்களுக்கு தெரிவிக்கும் ஆங்கில ஊடகங்களின் இந்த போக்கு, நடுநிலையாக செயற்படவேண்டிய ஊடக நெறிமுறைகளுக்கு முரணானது என்கிற விமர்சனம் தமிழகத்தில் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இந்த பின்னணியில், இந்த அணை தொடர்பான அரசு ஆவணங்களில் ஆரம்பம் முதலே பெரியாறு அணை என்று மட்டுமே இருப்பதாக கூறுகிறார் தமிழக பொதுப்பணித்துறையின் சார்பில் பெரியார் அணைக்கு பொறுப்பாக இருந்து தற்போது ஓய்வுபெற்றிருக்கும் நிர்வாக பொறியாளர் சுதந்திர அமல்ராஜ்.
இந்த அணை பலவீனமாக இருப்பதான செய்திகளை 1970களில் பெரிய அளவில் முன்னெடுத்த மலையாள ஊடகங்கள் தான் முதன் முதலில் முல்லப் பெரியாறு என்கிற சொல்லை பிரபலப்படுத்தியதாக கூறும் சுதந்திர அமல்ராஜ், அதிலிருந்து ஆங்கில ஊடகங்கள் அந்த வார்த்தையை பின்பற்றத் துவங்கியதாகவும், இது தவறான போக்கு என்றும் கூறுகிறார்.
0 comments:
Post a Comment