
சிட்னி 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் வெற்றியைத் தடுக்க கடுமையாக போராடிய அஸ்வின் அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார். இப்போட்டியை ஒரு இன்னிங்ஸ், 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கொண்டது. நான்காம் நாளான இன்று கம்பீர் 83 ரன்களும், சச்சின் 80 ரன்களும் குவித்து அணியை பெரும் சரிவிலிருந்து மீட்டனர். அதேபோல விவிஎஸ் லட்சுமன் சிறப்பாக ஆடி 62 ரன்களை எடுத்து வலு சேர்த்தார். மற்றவர்கள் வழக்கம் போல சொதப்பினர். இதனால் மயிரிழையில் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது.
சிட்னி 2ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் படு மோசமாக ஆடி 191 ரன்களில் சுருண்டது இந்திய அணி. ஆனால் ஆஸ்திரேலிய அணி மிகச் சிறப்பாக பேட் செய்து பெரும் ரன் குவிப்பில் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் கிளார்க் சிறப்பாக ஆடி முச்சதம் அடித்து ஆஸ்திரேலியாவை வலுவாக்கி விட்டார். அதேபோல பான்டிங், ஹஸ்ஸி ஆகியோரும் சதமடித்தனர்.
இதையடுத்து 468 ரன்கள் என்ற மிகப் பெரிய லீடைப் பெற்றது ஆஸ்திரேலியா. இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. நேற்றைய 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 114 ரன்கள் எடுத்திருந்தது. கம்பீர் 68 ரன்களுடனும், சச்சின் 8 ரன்களிலிரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று ஆட்டம் தொடங்கியதும் கம்பீர் வேகமாக ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். செஞ்சுரியை நோக்கி அவர் நெருங்கிக் கொண்டிருந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதேபோல சச்சினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக கம்பீர் 83 ரன்கள் எடுத்திருந்தபோது சிடில் பந்து வீச்சில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து சச்சினும், லட்சுமனும் இணைந்து ரன் சேர்ப்பை துரிதப்படுத்த ஆரம்பித்தனர். சச்சின் மீண்டும் ஒரு அழகான அரை சதத்தை விளாசினார். அதேபோல லட்சுமனும் ஒரு அரை சதம் அடித்தார். இதனால் இந்தியாவின் நிலை சற்றே இலகுவானது.
சச்சின் விளையாடிய விதத்தைப் பார்த்தபோது அவர் நிச்சயம் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் மைக்கேல் கிளார்க் வீசிய பந்தை அடித்த சச்சின் அதை ஹஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி விட்டார். அப்போது சச்சின் எடுத்திருந்த ரன்கள் 80 ஆகும். இதன் மூலம் சதம் வரை நெருங்கி வந்த சச்சின் அதை தொட முடியாமல் போயுள்ளார். சச்சின் ஆட்டமிழக்கும் வரை எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் சச்சின் ஆட்டமிழந்து வெளியேறியதற்குப் பின்னர் விக்கெட்கள் சரியான இடைவெளியில் விழ ஆரம்பித்தன.
மறு முனையில் வி.வி.எஸ்.லட்சுமன் சிறப்பாக ஆடி வந்த நிலையில், 66 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விராத் கோலியும் வழக்கம் போல சீக்கிரமே அவுட்டாகிப் போய் விட்டார். அவர் இந்த முறை எடுத்த ரன்கள் 9. அதேபோல கேப்டன் டோணியும் 2 ரன்களில் மூட்டையைக் கட்டவே இந்தியாவின் ரன் வேகம் சரிந்து விட்டது.
இதையடுத்து வந்தார் ஜாகிர்கான். அவரது சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக எகிறியது. 35 ரன்களை அதிரடியாக சேர்த்த ஜாகிர் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின்னர் அஸ்வின் ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டார். சிறப்பாக ஆடிய அஸ்வின் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடினார்.
இறுதியில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார் அஸ்வின். இதன் மூலம் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ், 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற முன்னிலையைப் பெற்றது.
0 comments:
Post a Comment