Saturday, January 07, 2012

எனது கொலைப் பட்டியலில் சாரைப் பாம்புகள் இருக்கவில்லை – பொன்சேகா

(கலாநெஞ்சன்)
தமது கொலைப் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்கள் மாத்திரமே இடம்பெற்றிருந்ததாகவும், சாரைப் பாம்புகள் இருக்கவில்லை எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். கொலைப் பட்டியலில் அமைச்சர் விமல் வீரவன்சவின் பெயர் இருந்ததாக கூறப்படுதாக சுட்டிக்காட்டிய  சரத்பொன்சேகா, சாரைப் பாம்புகளைக் கொன்று பாவத்தை தேடிக்கொள்ள வேண்டிய தேவை தமக்குக் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு நேற்று அழைத்து வரப்பட்டபோதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார். தாம் விருப்பம் தெரிவிக்காத பட்சத்தில் தமது குடும்பத்தினர் விடுதலைக்கான மன்னிப்பை கோர மாட்டார்கள் என சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். தாம் விடுதலை செய்யப்பட வேண்டுமாயின் தமது மனைவி ஜனாதிபதியிடம்  மன்னிப்புக் கோரவேண்டும் என்றும், தாம் விரும்பும்வரை அது நடக்காது எனக் குறிப்பிட்ட அவர், அமைச்சரின் குடும்பத்தில் என்ன நேருகின்றது எனத்தெரியாது எனவும் குறிப்பிட்டார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், முதல் 24 மணித்தியாலங்களுக்குள் கொலை செய்யப்படவுள்ள நபர்களின் பட்டியலில் தனது பெயரும் இருந்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச லங்காதீப பத்திரிகைக்கு அளித்துள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளமை தொடர்பாகவே சரத் பொன்சேகா இந்த கருத்தை நேற்று தெரிவித்துள்ளார்.

அந்த செவ்வியில் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளதாவது; சரத் பொன்சேகா கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் முதல் 24 மணித்தியாலங்களுக்குள் கொலை செய்யப்படவுள்ள நபர்களின் பட்டியலில் எனது பெயரும் இருந்தது. அந்த கதை எப்படி இருந்தபோதிலும் ஜனாதிபதி இந்த நபரை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

இவ்வாறு நான் குறிப்பிடுவது சரத் பொன்சேகா மீது எனக்குள்ள அன்பினால் அல்ல. சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்று கூக்குரலிடுபவர்கள்தான் அவர் உள்ளே இருக்கவேண்டும் என்று அதிகம் விரும்புகிறார்கள். அவர்கள் பொய்யாகவே விடுதலை செய்யுமாறு கோருகிறார்கள். சரத் பொன்சேகாவின் பாரியாருக்கு உண்மையில் தேவை இருந்தால் தனது கணவரின் விருப்பம் இன்றி கூட ஜனாதிபதியிடம் கணவரை விடுதலை செய்யுமாறு கேட்க முடியும். ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்டால் மாத்திரமா பொது மன்னிப்பு கிடைக்கும்? என்று எவரேனும் வாதம் புரியமுடியும். ஆம்! அதுதான் உண்மை.

எல்லா கைதிகளும் விடுதலை பெறவே விரும்புவார்கள். அதுபோல் கைதிகளின் உறவினர்களும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுகிறார்கள். அப்படியானால் சரத் பொன்சேகாவின் பாரியார் அவ்வாறு கேட்காதது ஏன்?

ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னொரு எதிரி உருவாவார். டிரான் அலஸும் அவர்களுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கிடைத்த பணம் தொடர்பாக பிரச்சினை எழும். ஜே.வி.பி.யுடன் எப்படியும் பிரச்சினையை ஏற்படுத்தி கொள்வார்கள். இவை எல்லாம் நடக்க சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும். அவர் உள்ளே இருக்கும்வரை இவை எவையும் நடைபெறாது. அப்படியாயின் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே சிறந்த பதிலாகும்.

0 comments:

Post a Comment