Sunday, January 08, 2012

ஹர்பஜன் சிங் இடம் பெறாதது இந்திய அணிக்கு பேரிழப்பு - வாசிம் அக்ரம்

"ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இடம் பெறாதது, இந்திய அணிக்கு பேரிழப்பு,'' என, முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இத்தொடருக்கான இந்திய அணியில், அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்படவில்லை. மாறாக, இளம் வீரர் அஷ்வின் வாய்ப்பு பெற்றார். மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் நான்கு விக்கெட் வீழ்த்திய அஷ்வின், சிட்னியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியாமல் திணறினார். இவரது பந்தை சிதறடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், ரன் மழை பொழிந்தனர்.

இதுகுறித்து அக்ரம் கூறியதாவது : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் விளையாடாதது, இந்திய அணிக்கு பின்னடைவான விஷயம். இதனை முதலிரண்டு டெஸ்டில் நன்றாக காண முடிந்தது. ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய அனுபவம் இருப்பதால், இவருக்கு முன்னுரிமை அளித்திருக்க வேண்டும். ஒரு ரன் கூட எடுக்கவிடாமல், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு எப்படி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது இவருக்கு நன்றாக தெரியும்.

பொதுவாக ஆஸ்திரேலிய மைதானங்கள் வேகப்பந்துவீச்சுக்கு அதிகளவில் ஒத்துழைப்பு அளிக்கும். இதனால் தான், ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியான் கூட பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், அனுபவ வீரரான ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அஷ்வின் திறமையான பவுலர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு தரும் மைதானங்களில் இவரது சுழல் எடுபடாது. இதற்கு நிறைய பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்திய துணைக் கண்டத்தில், இவரது பந்துவீச்சு நன்றாக கைகொடுக்கும்.

நீண்ட நாட்களுக்கு பின் சர்வதேச போட்டியில் விளையாடும், அனுபவ இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், தனது திறமையை நிரூபித்தது பாராட்டுக்குரியது. இத்தொடர் இஷாந்த் சர்மாவுக்கு பெரிய அளவில் ஏமாற்றம் அளித்துள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் இவர் எழுச்சி காண வேண்டும். இளம் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், சிறப்பாக பந்துவீசிய போதிலும், சில நேரங்களில் அனுபவமின்மை வெளிப்படுகிறது.

இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ், பவுலர்களுக்கு நிறைய பயிற்சி வழங்கவேண்டும். ஒவ்வொரு ஆடுகளத்திற்கு ஏற்ப திட்டமிட்டு, பயிற்சி வழங்க வேண்டும். சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் சந்தித்த மோசமான தோல்வியை கருத்தில் கொண்டு, இந்திய பவுலர்கள் எழுச்சி பெறும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை  சமன் செய்யலாம்.இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.

0 comments:

Post a Comment