
"சச்சின் 100வது சதம் அடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளார். இதற்கு தீர்வு காண, விளையாட்டு மனோதத்துவ நிபுணரிடம் அறிவுரை பெறலாம்,'' என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இதுவரை 99 சதங்கள் அடித்துள்ள இவர், சர்வதேச அளவில் 100வது சதம் அடிக்க காத்திருக்கிறார். இந்த மைல்கல்லை எட்ட முடியாமல் மிக நீண்ட காலமாக தவிக்கிறார். தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், சதத்தில் சதம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதலிரண்டு டெஸ்டில் இரு முறை அரைசதம் கடந்த போதும், சதம் அடிக்க முடியவில்லை.
இது குறித்து லத்தீப் கூறியது:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் சேர்த்து, கடந்த 10 மாதங்களாக சச்சின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். நல்ல "பார்மில்' இருக்கிறார். சரியான நேரத்தில் பந்தை அடித்து விளையாடுகிறார். இவரது "புட்வொர்க்' சிறப்பாக இருக்கிறது. எவ்வித சிரமும் இல்லாமல் ரன் எடுக்கிறார். ஆனாலும், 100வது சதம் தான் அடிக்க முடியவில்லை. இதனால் மிகுந்த நெருக்கடியில் உள்ளார். இது, மனதளவில் ஒருவிதமான தடங்கலை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து விடுபடும் பொருட்டு, ஒரு விளையாட்டு மனோதத்துவத நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறலாம். உலகின் பிரபல விளையாட்டு வீரர்களுக்கு கூட, மனத்தடை நீங்க, மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனை தேவைப்பட்டுள்ளது. இந்த தொடரிலேயே சச்சின் 100வது சதம் அடிப்பார் என நம்புகிறேன்.
பவுலிங் பலவீனம்:
ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் தோல்விக்கு அனுபவ பேட்ஸ்மேன்களை மட்டும் குறை சொல்கின்றனர். ஆஸ்திரேலிய அணியை இரு முறை "ஆல் அவுட்டாக்க' கூடிய அளவுக்கு திறமையான பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜாகிர் கானை தவிர மற்றவர்களின் பந்துவீச்சு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஹர்பஜனை நீக்கியது பெரிய தவறு. அஷ்வின் இன்னும் டெஸ்ட் போட்டிக்கு தயாராகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு லத்தீப் கூறினார்.
பிராட்மேனுக்கு நிகராக...
ஆஸ்திரேலியாவிலுள்ள பிராட்மேன் மியூசியத்தில், பிராட்மேன்-சச்சின் இணைந்திருப்பது போன்ற சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மியூசியம் அமைந்துள்ள இடமான பவுரல்லிற்கு, சச்சின் வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இத்தொடரின் போது வாய்ப்பு இல்லாததால், இன்னொரு முறை வருவதாக சச்சின் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் அல்லாத ஒருவருக்கு, இங்கு சிலை வைக்க இருப்பது இதுவே முதன் முறை.
0 comments:
Post a Comment