Sunday, January 08, 2012

கள்ளக் காதலனுடன் பெற்ற குழந்தையை புதைத்த தாய்; சம்மாந்துறையில் சம்பவம்


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
பெற்ற குழந்தையை குழிதோண்டி புதைத்த பரிதாப சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட கல்லரிச்சல் 03ஆம் கிராமத்தில் இன்று ஞாயிற்றுகிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் கள்ளத்தொடர்பு மூலம் உருவான இக்குழந்தை கடந்த டிசம்பர் 06ஆம் திகதி காலையில் பிறந்துள்ளது.

இக்குழந்தையினை குறித்த பெண்ணும் அவருடைய கள்ளம் காதலனும் இணைந்து தனது வீட்டின் அருகிலுள்ள சுவர் ஓரமாக அன்று காலை 8.00 மணிக்கு புதைத்துள்ளனர் பின்னர் குழந்தையினை பெற்ற தாய்க்கு ஏற்பட்ட இரத்தப் பெருக்கு காரணமாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கல்முனை அஷ்ரப் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலைக்கு இடமாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வெளியான சில தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அக்கிராம வாசிகளால் சம்மாந்துறை பொலிஸாருக்கு கொடுத்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸ் பரிசோதகர் கே.எம்.இப்றாஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினரும், அம்பாரை சொக்கோ புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்ட நடவடிக்கையினால் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் குழந்தையின் சடலம் தோண்டி ஏடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கணகரத்தினம் ஆனந்தி, கல்முனைப் பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.என். மென்டீஸ், கல்முனை அஷ்ரப் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையின் சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் கிரியல்ல, சொக்கோ புலனாய்வு பொலிஸ் பரிசோதகர் அமரசிங்க, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி சஞ்ஞீவ பண்டார உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயது பெண்ணுடன் 55 வயதுடைய நபரே கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரிய வருகின்றது.குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரின் பிடியில் வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்பான சில உண்மைகளும் கண்டறியப்பட்டுள்ளன.மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.






0 comments:

Post a Comment