Sunday, January 08, 2012

இந்தியா தோற்றதற்கு மோசமான பேட்டிங்தான் காரணம்


ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில், இந்தியா முதல் 2 போட்டியிலும் தோற்றதற்கு மோசமான பேட்டிங்தான் காரணம் என்று தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறினார்.

இது குறித்து சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: நமது பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைந்து விளையாடத் தவறிவிட்டனர். ஆஸ்திரேலியத் தொடரில் சிறப்பாக விளையாடுவோம் என நம்பிக்கை வைத்த நிலையில், இது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. நம்மை விட ஆஸ்திரேலிய வீரர்கள் அபாரமாக விளையாடினர் என்பதில் சந்தேகம் இல்லை. தோல்விக்கு யார் பொறுப்பு என்று ஆராய்வதை விட, அடுத்து வரும் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். அதுதான் முக்கியம். கேப்டன் டோனியை மட்டுமே குறை கூறுவது தவறு.

பேட்டிங்கில் முன்னணி வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறியதே பின்னடைவுக்கு காரணம் என்று அவரும் ஒப்புக் கொண்டுள்ளார். தற்போதுள்ள நிலையில், இதுவே சிறந்த இந்திய அணி. வீரர்கள் அனைவரும் முழு உடல்தகுதியுடன் உள்ளனர். தென் ஆப்ரிக்காவில் நாம் டெஸ்ட் தொடரை சமன் செய்தபோது, யாராவது ஒரு வீரர் மிகப் பெரிய ஸ்கோர் அடித்து கை கொடுத்தனர். ஆஸி. தொடரில் சில வீரர்கள் அரைசதம் அடித்தாலும், யாருமே அதைத் தாண்டி கணிசமாக ரன் குவிக்கத் தவறிவிட்டனர்.

டெஸ்ட் போட்டிகளில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். இல்லை என்றால் வெற்றி பெறுவது மிகக் கடினம். பெர்த் டெஸ்டில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவார்கள் என நம்புகிறேன். கடந்த முறை அங்கு விளையாடியபோது வெற்றியை வசப்படுத்தினோம். நம்பிக்கையுடன் முழு திறமையையும் வெளிப்படுத்தினால் இம்முறையும் சாதிக்கலாம். இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

0 comments:

Post a Comment