Sunday, October 23, 2011

தந்தைக்காக பழிதீர்ப்பேன் - கடாபியின் மகன்


லிபியா இடைக்கால தேசிய அரசு ஞாயிற்றுக்கிழமை லிபியாவின் விடுதலையை அறிவித்தது. இந்நிலையில், கடாபியின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது தலையில் பாய்ந்த குண்டுதான் அவரது இறப்புக்குக் காரணம் என, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக தலைவராக இருந்த மும்மர் கடாபி, கடந்த 20ஆம் திகதி எதிர்ப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, விரைவில் நாட்டின் விடுதலை அறிவிக்கப்படும் என இடைக்கால அரசு தெரிவித்தது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான பெங்காசியில் இடைக்கால கவுன்சில் தலைவர் முஸ்தபா ஜலீல், இடைக்கால பிரதமர் மஹ்மூத் ஜிப்ரீல் ஆகியோர் பங்கேற்ற விடுதலை அறிவிப்பு விழா நிகழ்ந்தது.இதில் பேசிய ஜலீல், லிபியா விடுதலை அடைந்ததாக அறிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையில், கடாபியின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது தலையில் இடப்பக்கம் பாய்ந்த குண்டுதான் அவரது உயிரைப் பறித்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கடாபியின் மற்றொரு மகனான சயீப் அல் இஸ்லாம், தனது தந்தையின் கொலைக்காக பழிவாங்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும், தற்போது அவர் லிபியாவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

0 comments:

Post a Comment