(இன்று 30.10.2011 வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 21 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு வரையப்பட்ட கட்டுரை)
ஈரினமும் ஓரினமாய் ஒரேதமிழுக்குள் பரிமாரிய அந்த பரிபாசைகளுக்குள் முத்தாப்பு வைத்தாற்போல் வெகுண்டெழுந்த பேரினவாதத்தின் பிடியடிக்குள் அடிபட்டு கால்கட்டும், கைக்கட்டும் ஏன் வாய்க்கட்டும் கட்டியது மட்டுமன்றி வெளியேற்றப்பட்ட அந்தநாளில் வெகுண்டெழுந்த மனிதத்துவம் ஊமையாக்கப்பட்ட கரிநாளைத்தான் என்றென்னும் மறக்கலாமா? விட்டுத்தான்போகுமா? இரு மணித்தியாலய விடுதலைக்குள் ஒரு தார்மீகத்தின் அடிப்படையில் வாழ்ந்த சமூதாயம் முழுவதும் அடைமானமிட்ட அந்தக் கோலம் கவிழ்ந்துபோன நிகழ்வை வைக்கிரப் புத்தியாளர்கள் நாடாளும் நாட்டார்களுடன் சேர்ந்திருந்தமையினால்தான் என்னவோ ஈருடலில் ஓருயிரை வழியனுப்பிய பாதகத்திருநாள் எத்தனைகாலம்தான் மாறினாலும் மறந்திடாத நெஞ்சழுத்தம்! தாங்குமா பூமித்தாயின் அழுகுரல். கேட்டதா அன்றைய அராஜகத்திற்கு? ஏன் இத்தனை வீம்பு என்றுகேட்டோர் அனைவரும் தலைவேறாகக்பட்டனர் இதுதான் வரலாறுதந்த பாடம்.
அரசியல் செய்வோர் ஏனிந்த மனிதத்துவத்தை விற்கிறார்கள் என்று யாராவது கேட்டால் அவரையே வளைத்துப்போட்டு பணம், பெண், பாசத்தை அள்ளிவிட்டு அரசியலுக்குள் குற்றுயிராய் போனோர்கள் எத்தனை எத்தனையோ பேர். இதுவல்ல கோலம் யாழில் இருந்து எழும் ஓசைபோல கடலினுள்ளாகிய சுனாமிபோல் போர்க்கோலம் போட்ட அந்தநாட்கள் நரகத்திற்கு செல்லும் வழிபோல அழுகையும், ஓசையும், ஒப்பாரித் திட்டல்களும், வான மண்டலத்தையல்லவா ஆர்ப்பரித்தன. எத்தனை எத்தனை மனித முகங்கள், அவலங்களின் உயர்மட்டப் பரீட்சையில் இருந்தெழுந்த வேட்காடாய்ப் போனது. அவமானம். அன்றாடம் தனது சகோதரனாய் தினம் தினம் சந்தையில், தெருவில், கடலில், காரியாலயத்தில், பாடசாலையில் ஏன் ஒன்றாய் இருந்து சாப்பிட்ட அந்தநாட்கள் எல்லாம் எங்கே ஐயா! மறைந்தும் மறந்தும் போனது! தெவிட்டாத பனம் பதநீரில் ஒன்றாய் ஒரே குட்டையில் இருவாய்களும் ஒரிடத்தில் மாறி மாறி குடித்துவிட்டு ஒரே துவிச்சக்கர வண்டியில் நீ ஒருகால் நான் ஒருகால் ஓட்டி ஊர் வந்ததெல்லாம் வெறும் போலிதானா?
அரசியல் காய் நகர்த்தல்களால் விரக்தியுற்ற ஒரு சமுதாயத்தின் வீண்பழியும், பழிபாவமும் இன்னொரு சமுதாயத்தை பழிக்கடாவாக்குவதுதான் நியாமா, சமசதர்மமா? என்ற நிலைப்பாட்டை உணர்த்த யாருக்குத்தான் பேச்சாற்றல் சக்தி இருந்தது. தெருவழியே நாய்களும், நரிகளும், கழுகுகளும் உரமிட்டவர்களின் உயிரற்ற உடல்களை கொத்தியிழுத்த அந்த நாட்களில் வெட்டிய மடுவுக்குள் போட்டு இவனும் ஒரு மனிதன்தானே பாவம், நாடும், வீடும் இன்றி தெருவில் கிடக்குது என்றென்னி துணியிட்டு மடுவுக்குள் நல்லதாய் இட்ட சமுதாயத்தையே வீதியோரத்திற்குள் தள்ளிவி;ட்ட நாட்களை இன்று நினைத்தாலும் அப்பப்பா! செய்த பாவமெல்லாம் அருக்கன் காதல் கொண்ட பனிபோல ஓடி மறைந்திட வேண்டுமென எண்ணியிருந்தால் இந்நிலை. பரவாயில்லை. பூண்டோடல்லவா வெளியேற்றம் பெறவைத்தீர்கள். காரணம் கேட்டால் மரணடி என்று முன்னவதாரம் பெற்ற ஈனர்களின் ஈவிரக்கமற்றதனத்திற்கு இறைவனிடம் என்றோ ஒருநாள் பதிலிருத்துவிட்டுத்தான் நகரவேண்டும் என்பதில் இவர்சமூகம் விடாப்பிடியாய் இருப்பது ஒருபுறம்.
போராட்ட வழிகளுக்குள் இரு விழிவைத்து, காவல்காத்து நின்ற வரலாறுகள்! என்ன நினைவில்லையா? ஓரினத் தனித்துவம், ஒரேமொழி, ஒரேமக்கள், ஒரேநாடு என எங்கும் இருக்கின்ற, இருந்த வரலாறுகள் உண்டா? ஒளவையாரும், கம்பனும், ஒட்டகக்கூத்தாரும், ஏன் நமது நேற்றைய அன்னல் காந்தியும் சொன்னதை தப்பாக நினைத்தவர்கள் அன்றும் ஏன் இன்றும்தான் அகிம்சைக்குரித்தான காந்தியை சுட்ட கோட்சோக்கள் இன்னும் இல்லையென்று யாராவது கூறுவார்களா? முடியாது. அதுபோலதான் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது மூக்கூரார்வம் பெறவிருப்பவர்களுக்குத்தான் நன்கு தெரிந்த விடயம்போல, எதிரிகளை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி தலைக்கு முந்தானையும், தலைக்கு தொப்பியும் அணிந்து, அணிவித்து காப்பாற்றிய அந்த நாட்களையும் மறந்து வெளியேற்றி தீரவசனம் பேசியயோர் தீயிலிட்ட உனது சகோதரனின் போக்கை மாற்றாந்தாய் மனப்பக்குவம் என்று பார்த்துக் கொண்டுதான் இருந்தீர்கள் என்றால் ஐக்கியம் எந்தக் கடையில் விற்கிறார்கள் என்று கேற்பதுபேல எனக்குள் உன்முகம் தெரிகிறது.
லிபியாவின் ஆட்சியில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, நிலகீழ் நீரை சரியாக பயன்படுத்திய மாவீரன் நிலையும் ஒருநாள் வெறும் வீதிக்கு குறுக்காய் இருந்த குழாய்க்குள் போனது ஏன்? ஒவ்வொருவரினதும் செயல்கள் அதற்கு வழிவிடுகின்றன என்பதுதான் அதற்குத்தக. என்பார்கள் முதியோர்கள். இறைவன் விதித்த சதிவலையிலிருந்து தப்பவே முடியாது என்பதை மனிதர்களுக்குள் தலைமைகள் என்று ஆர்ப்பாட்டம் செய்கின்ற மாவீரர்கள் ஏன் இன்னும் விளங்காது உள்ளனர் என்பதுதான் என்கேள்விக்கு இன்னும் அகப்பட்டதாக விடை தெரியவில்லை. உண்மையில் ஆறரடிக்குள் சமாதி அடைந்திட முடிவுகொண்ட மனிதன் ஏன் சாகாவரத்தை பெறலாம் எனத் துடிக்கிறான். கிடைத்தா சாகாவரம்? கள்ளுக்குள் ஈரம் என்று சொன்னார்கள் இதுஒரு புதுமொழியாக அன்று பாடசாலையிலும் படித்திருக்கின்றோம். இதற்கு என்னதான்; விளக்கம். அந்த வெறும் கல்லினுள்ளும் ஈரம் இருக்கிறதே! மனிதத்திற்குள் ஏன் ஈவிரக்கம் காணப்படவில்லை என்றுதான் நாம் கேட்கிறோம். சொந்தம் பந்தம் எல்லாமே அழிவுற்று, நாடும் நகரமும், கிராமமும் கிராமமும் ஒன்றித்துப்போகிறது என்றால் இதனை என்னவென்று சொல்வது. அபிவிருத்திக்கான அத்திவாரமா, அத்திவாரத்திற்குரிய அபிவிருத்தியா? தெரியவில்லை.
ஊசிமுனைக்குள் ஒட்டகத்தை நுழைத்தாலும் இந்த மனித மனதினுள் நுழைக்க முடியாது அவ்வளவுக்கு இருக்கமான நன்றி கெட்ட மாந்தர்கள் வாழ்ந்த அந்தக்காலகட்டத்தில் சோகத்தையும், குடும்பத்தையும், கௌரவத்தையும் விட்டுவிட்டு பட்டுப்போடா என்றென்னிய அந்த மனிதத்துவங்களும், அவர்களது அடிகளும், நுனிகளும் தேய்ந்து பட்டுப்போன வரலாறுகளை இனிமேலும் நினைவுகூர்ந்து அனைவரும் மனிதத்துவமிக்கவர்கள் என்பதை யாவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் கனிந்துள்ளது என்பதை நினைவிற்கொள்ள இந்த இரு தசாப்ப காலமும் போதாதா என ஓரினத்தின் ஒருபகுதியினர் கேட்பது உங்கள் காதுகளுக்குள் விழவில்லையா?
ஆண்டொன்றுபோனால் வயதொன்று போய்விடும் என்பார்கள். அன்றுபிறந்த பிள்ளைக்கு இவைகள் எதுவும் தெரிய நியாமில்லைதான். அகதி வாழ்வும், பருப்பும் பாணும், ஒரேகுடைக்குளிலிருந்து உண்டு கழித்து வாழ்வின் கால்பகுதி ஓடிவிட்டது. சந்தோசம் என்பதும், மண உழைச்சல் என்பதும் நீண்டு நிமிர்ந்து கண்பொத்தா நிலையில் இருப்பது கண்டு உம்மால் எப்படி ஐயா உண்டு உலாவுகிறாய். நீரும், நாமும் அந்த மா குளத்தில் கொக்கிச்சான் மீன் பிடித்து கருவாடு காயவைத்து ஒன்றாய் அமர்ந்திருந்து குழம்புக்கறி சமைத்து உண்டு தீர்த்த காலம் உணக்குள் நினைவிருக்கிறதா? சன்முகமும், சன்சிரும், காமாச்சியும், காமிலாவும் ஒரே பள்ளியில், ஒரே மடுவுக்குள் நின்றதும் உம்மால் நினைக்கத்தான் தோன்றுகிறதா? கயவர்கள், கள்ளர்கள் அல்ல நாடுகாண் வீரர்கள் என்று சமர்தட்டிப் பாராட்டிய அஞ்சா நெஞ்சமகன் எத்தனையோ பேர் இருந்த சரித்திரம் இடைநடுவில் பாழாயப்போன பழங்கதைகள் நீ ஏன் படிக்கவில்லை.
இனிமேலும் தாமதித்து காலத்தைக் கழிக்காது, உயிருக்குயிராய் அன்பான நண்பனாய் வாழ்ந்திருந்த கிராமமும், அந்த மண்ணும், ஓலைக்குடிசைக்குள் மாரிகாலம் தேங்காய்ப்பூ சுண்டலும், குறுணல்சோறும் உரலிலிட்டு பிசைந்து கையில் உருண்டையாய் நாம் உண்டு மகிழ்ந்த அந்தநாள் ஞாபம் நெஞ்சிலே வந்ததே… அந்தநாள் இன்றுபோல் இல்லையே அது ஏன் ஏன் ஏன் நண்பனே! சிவாஜி பாணியில்தான் கேட்கத் தோன்றுகிறது. வெளியேற்றம் என்பது சாதாரண கோலமாக இருந்தாலும் நீண்டகாலம் கூடாது அது வேதனைக்கும், சபலத்திற்கும் அத்திவாரமாய் அமைந்திடும். இத்தமிழ் இனி மெல்ல சாகும் என்பதுபோல நாடு என்ன உலகம் முழுவதும் நம் தமிழ் செம்மொழியாய் உலாவருவதற்கு நாம் இருவருமே சாட்சி. இதுவொன்றும் போதாதா?
இருளகற்றி ஒளியேற்றிய தீபாவளிபோல் தைபிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இதற்குள் சகவாழ்வு, சரிசமம், ஒரேமொழி, ஒரேவழி என்பதுபோல தன்மானம் தழைத்தோங்க, விட்டகன்ற சுய கௌரவமும், வாழந்து பழக்கப்பட்ட கிராமத்து மணல் ஒழுங்கையும், பனையோலை வேலியும், படலைக் கதவுக்குள் ஒழித்துவிளையாடிய கிராமம் வெட்ட வெளியாய் குற்றுயிராய் கிடக்கிறது. வெட்டி வெளிசாக்கி துப்பரவு செய்திட நாம் ஓடோடி வருவதற்கு எங்கே நிமிர்ந்துபார்த்து ஒருமுறை சொன்னால் போதும். வேண்டாம் வேண்டாம் இனியொரு விதி செய்வோம். பாரதியின் குரலில் ஓடிவிளையாடி களிதீர்த்தே உலகத்தை வெல்வோம். நாளைய சந்திக்காய் ஓரினத்திற்குள் வெட்டிச் சாத்திய கதை முற்றுப் பெறவேண்டும். முடிந்துபோய்விட வேண்டும். சிந்தியுங்கள் சீர் பெறுவோம். அக்கிரமக்காரர்கள் எமைப்பிரிக்க வந்தால் அடியோடு சாய்ந்திடுவோம் இருவரும் ஓருயிராய் நின்று எனும் கோசத்தை எழுப்பிடுவோம்.
சாமஸ்ரீ தேசமாண்ய எஸ்.எல். மன்சூர்
அட்டாளைச்சேனை துருவம் செய்தியாளர்





0 comments:
Post a Comment