மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் முதலாக 15000 ரன்களை எடுத்து சாதனை புரிந்த சச்சின் 33 ரன்களுடனும், பிஷூ வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தை கவர் திசையில் பவுண்டரி விளாசிய திராவிட் 30 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
முன்னதாக சேவாக் தனது வழக்கமான பாணியில் விளையாடி 55 ரன்கள் எடுத்து சாமியின் ஒன்றுமேயில்லாத பந்தில் ஆட்டமிழந்தார். கம்பீர் எல்.பி.டபிள்யூ. ஆனார். அவர் 22 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு விக்கெட் இழப்பின்றி சச்சினும் டிராவிடும் இணைந்து இதுவரை 57 ரன்களை 3வது விக்கெட்டுக்காக சேர்த்துள்ளனர். முன்னதாக இன்று காலை 26/2 என்று களமிறங்கிய மேற்கிந்திய அணி இஷாந்தின் துவக்க விக்கெட்டுக்குப் பிறகு அஷ்வினின் சுழலில் சிக்கி 180 ரன்களுக்கு சுருண்டனர்.
ஆனால், முன்னர் 84/7 விக்கெட்டுகள் என்று திணறினர். ஆனால் சந்தர்பாலின் அபாரமான 47 ரன்களும் கேப்டன் சாமியின் அதிரடி 42 ரன்களும் ரவி ராம்பாலின் பயனுள்ள 18 ரன்களாலும் அவர்கள் 180 ரன்களை எட்டி இந்தியாவுக்கு ஓரளவுக்குக் கடினமான 276 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தனர். ஆனால், இந்தியா களமிறங்கி நிதானப் போக்கைக் கடைபிடித்தது. இருப்பினும் சேவாக் ஆட்டமிழக்கும் வரை ரன் விகிதம் ஓவருக்கு 5 ரன்கள் என்றே இருந்தது.
எனவே இன்றைய தினம் பல சாதனைகள் நிகழ்ந்த தினமாகும். முதலில் ரவிச் சந்திரன் அஷிவ்ன் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளைச் சாய்த்தது. அதோடு மட்டுமல்லாமல் இந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டாவது சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் வாழ்வில் 15,000 ரன்களைக் கடந்து மேலுமொரு உலகச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


0 comments:
Post a Comment