நாடளாவிய ரீதியில் நிலவும் அடை மழையுடன் கூடிய காலநிலைக் காரணமாக மண்சரிவு, வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கம் அபாயங்கள் அதிகரித்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது. மலையகப் பிரதேசங்களில் மண் சரிவுக்கான அபாயம் அதிகரித்திருப்பதனால் அவ்வாறான பிரதேசங்களில் வாழ்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் விரும்பினால் தற்காலிகமாக அவ்வாறான இடங்களிலிருந்து விலகியிருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை, நேற்று கண்டியில் மண்சரிவு ஒன்று இடம்பெற்றிருப்பதாகவும், உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். அத்துடன் இரத்தினபுரியில் வீசிய கடுங்காற்று காரணமாக குருவிட்ட பிரதேசத்திலுள்ள 33 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் பல பாகங்களிலும் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் நீரேந்துப் பகுதிகளில் பெய்த கடும் மழைக் காரணமாக ரன்தம் பேயில் 93.2 மில்லி மீற்றர் மழையும், ரன்தெனிகலவில் 84 மில்லி மீற்றர் மழையும் லக்சபானவில் 40.3 மில்லி மீற்றர் மழையும் பெய்திருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் அதிகாரியான டி.ஏ.ஜயசிங்க தெரிவித்தார்.
நேற்று, ஆகக்கூடிய மழை வீழ்ச்சியாக காலியிலேயே 99.9 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. இன்றும் நாடளாவிய ரீதியில் நண்பகல் மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும். நவம்பர் மாதம் இறுதி வரை கடும் மின்னல் தாக்கம் இருப்பதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.


0 comments:
Post a Comment