Saturday, November 26, 2011

உதவி தவிசாளருக்கு இன்னும் இடமில்லை


(பாலமுனைச் செய்தியாளர்) 
அட்டாளைச் சேனை பிரதேச சபையில் உதவித் தவிசாளருக்குரிய காரியாலயம் இதுவரை ஒதுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. கடந்த காலங்களில் உதவித் தவிசாளர்களுக்கு காரியாலய அறை ஒதுக்கப்பட்டிருந்தும் தற்போது காரியாலய அறை ஒதுக்கப்படாமை மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியிருப்பதோடு பிரதேச வாதம் பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தவிசாளராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.நஸீரும், உதவித் தவிசாளராக பாலமுனையைச் சேர்ந்த எம்.ஏ. அன்சிலும் உள்ளனர். உதவித் தவிசாளராக இருக்கும் அன்சில் கடந்த பிரதேச சபையில் இரண்டு வருடங்கள் தவிசாளராக கடமை புரிந்திருக்கின்றார்.

அன்சில் தவிசாளராக இருந்தபோது, உதவித் தவிசாளராக நியமிக்கப்பட்ட ஒலுவிலைச் சேர்ந்த இஸ்மாயிலுக்கு காரியாலய அறை ஒதுக்கப்பட்டு அவரது கடமைகளை செய்வதற்கு சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அதுமட்டுமல்ல, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பை முன்னர் தவிசாளராக இருந்தபோது கூட உதவித் தவிசாளருக்கு காரியாலய அறை ஒதுக்கப்பட்டிருந்தது.அத்துடன் தொலை பேசி வசதிகளும் வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு கடந்த காலங்களில் உதவித் தவிசாளர்களுக்கு காரியாலய அறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மட்டும் அறை ஒதுக்கப்படாமை ஏற்றுக்கொள்ள முடியாத கவலைக்குரிய ஒரு விடயமாகும் என முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வுகளில் அன்சில் பல தடவைகள் பேசும் போது, உதவித் தவிசாளருக்குரிய காரியாலய அறையை ஒதுக்கி, இதனை சகல பிரதேச சபை உறுப்பினர்களும் பயன்படுத்தும் விதத்தில் ஏற்படுத்தித் தருமாரு கோரிக்கை விடுத்ததையும் இந்த இடத்தில் ஞாபகப்படுத்தினால் பொறுத்தமாக இருக்கும்.

அன்சில் தவிசாளராக இருந்தபோது, பிரதேச வேறுபாடின்றி சிறந்த சேவையை மேற்கொண்ட ஒருவர். அவருடைய தந்தையார் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர். அதுமட்டுமல்ல தனது கல்வியைக் கூட அட்டாளைச்சேனை மத்திய கல்லூhயில் கற்றவர். தற்போது சட்டத்துறை இறுதி ஆண்டு மாணவராக உள்ளார்.

உதவித் தவிசாளருக்குரிய காரியாலய அறை வழங்களில் மாத்திரம் அல்ல நெல்சிப் திட்டத்தில் பாலமுனைப் பிரதேசத்தில் எந்த வித அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை இது விடயத்தில் என்ன? நடவடிக்கையை எடுக்கப்போகின்றது என்பதை பாலமுனை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பாலமுனை மக்கள் பாராளுமன்றத் தோதல்களிலும், மாகாண சபைத் தேர்தல்களிலும் அட்டாளைச்சேனை கிராமத்திலிருந்து போட்டியிடுகின்ற வேட்பாளருக்கு தொடர்ச்சியாக வாக்களித்து வருகின்ற நிலையில் ஏன் பாலமுனை மக்களை புறக்கணிக்கின்றனர் புதிரான புதிராகவே உள்ளது.


இன்னும் ஒரு சில தினங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமை பாலமுனை மத்திய குழு சந்திக்கவுள்ளதாகவும், தமக்கு நடந்த புறக்கணிப்புக்களை எடுத்துக் கூறவுள்ளதாகவும், எதிர் காலத்தில் பாலமுனைக்கான தனியான பிரதேச சபைக்கான முன்னடுப்புக்களை ஆராயவுள்ளதாகவும் மத்திய குழு முக்கியஸ்தர் நம்மிடம் தெரிவித்தார்.

பாலமுனை மக்கள் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அட்டாளைச்சேனையிலிருந்து போட்டியிடுகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பதில்லை என்ற முடிவில் இருப்பதாகவும் அறிய வருகின்றது.

பிரதேச சபைத் தேர்தலில் பிரதேச வாதத்தைக் கக்கி வென்றவர்கள் எந்த முகத்தைக் கொண்டு பாலமுனை மக்களிடம் வாக்குக் கேட்பது?  காலம்தான் பதில் கூற வேண்டும். பொறுத்திருப்போம், பொறுமைக்கு வெற்றி நிச்சயம் கிட்டும்.

0 comments:

Post a Comment