Tuesday, November 01, 2011

மழைக்குள் தத்தளிக்கிறது தமிழகம்

தமிழகத்தில், தொடர்ந்து அடைமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில், அணைகள் நிரம்பியுள்ள நிலையில், வீடுகளில் வெள்ளம் புகுந்தும், பயிர்கள் நீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஓம்சக்தி நகர், சக்கரகோட்டை, நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில், வெள்ளம் வெளியேற வழியின்றி, வீடுகளுக்குள் புகுந்தது.பலர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தும், சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். பல அரசு அலுவலகங்களில் தண்ணீர் புகுந்ததால், வேலை நடக்கவில்லை.

ராஜபாளையம்: மலையடிவாரத்தில் உள்ள நீர்காத்த அய்யனார்கோவில் ஆற்றில், தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.நேற்று காலை, ராஜபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்களான முத்துகிருஷ்ணன், 23, சீனிவாசன், 20 ஆகியோர், தங்களது நண்பர்களான மதுரை மாணவர்கள் எட்டு பேருடன், ஆற்றில் குளித்து, கோவிலுக்கு சென்றனர். திரும்புவதற்குள் காட்டாற்று வெள்ளம் வந்தது. அப்போது அங்கு சென்ற நகராட்சி கவுன்சிலர், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு மற்றும் வனத்துறையினர், ஒரு மணிநேரம் போராடி அவர்களை மீட்டனர்.

நாகப்பட்டினம்: நாகையில், பாசன வாய்க்கால்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரால், 2 லட்சத்து 84 ஆயிரம் ஏக்கரில் நடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் உஷாராக இருப்பதோடு,எக்காரணம் கொண்டும் விடுப்பு எடுக்க கூடாது என்று கலெக்டர் முனுசாமி உத்தரவிட்டார்.


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்வதால், அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. பி.ஏ.பி.,பாசனத் திட்டத்தின் உயிர்நாடியான பரம்பிக்குளம் அணை, இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்பிவிடும் வாய்ப்புள்ளது. 72 அடி உயரமுள்ள இந்த அணையில், நேற்றைய நிலவரப்படி, 69.47 அடிக்கு தண்ணீர் உள்ளது. சோலையாறு அணையில், 160 அடிக்கு தண்ணீர் தேக்க முடியும்; இப்போது அதற்கும் அதிகமாக 0.91 அடி உயரத்துக்குத் தண்ணீர் உள்ளதால், அணை நிரம்பி வழிகிறது.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொடர்மழைகாரணமாக 20,000 ஏக்கரில் அமைந்துள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து, ஆறு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில், 2,000 ஏக்கருக்கு அதிகமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம், ராமநாதபுரம், களிமேடு மற்றும் பல பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு நெல் கொள்முதல் நிலையங்கள் முன் குவித்து வைக்கப்பட்டுள்ள, 100 டன் நெல்மணிகள் முளைத்து, விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகாவை சேர்ந்த அகத்தியம் பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.அக்., 15ம் தேதி வரை உப்பு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், கடந்த 15 நாட்களாக மழை பெய்து வருவதால், உப்பளங்களில் நீர் நிரம்பி பெரிய ஏரி போல் காட்சியளிக்கிறது. மீண்டும் உப்பு உற்பத்தி துவங்க, இரண்டரை மாதங்களுக்கு மேலாகும் என்பதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


பள்ளிகளுக்கு விடுமுறை
பல பகுதிகளிலும், நேற்று காலையிலிருந்து இரவு வரையிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டேயிருந்தது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, இன்றும் மழை தொடரும் என்பதால், கோவை, கடலூர், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் அனைத்துப் பள்ளிகளுக்கும், இன்று விடுமுறை அளிக்குமாறு கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வலுவடைந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை
தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு "வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால், இரண்டு நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும்,'' என, சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும், நேற்று முன்தினம் இலங்கைக்கும், தென் தமிழகத்திற்கும் இடையே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, சற்று நகர்ந்து, குமரி கடலுக்கும், ஆந்திராவின் மேற்கு மத்திய வங்கக் கடலுக்கும் இடையே நிலை கொண்டுள்ளது.இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதிகபட்சமாக, மண்டபத்தில், 17 செ.மீ., மழை கொட்டியது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறும்போது, "வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் அனேக இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல், மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் மழை விட்டுவிட்டு பெய்யும்,' என்றார்.

அமைச்சர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கீடு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மாவட்டந்தோறும் அமைச்சர்களை நியமித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டம் அமைச்சர்கள்
திருவள்ளூர் - ரமணா
காஞ்சிபுரம் - சின்னய்யா
கடலூர் - எம்.சி.சம்பத், செல்வி ராமஜெயம்
விழுப்புரம் - சி.வி.சண்முகம்
நாகை - ஜெயபால்
தஞ்சை மற்றும் திருவாரூர் - வைத்திலிங்கம்
புதுக்கோட்டை - சுப்பிரமணியன்
ராமநாதபுரம் - செல்லூர் ராஜு
தூத்துக்குடி - சண்முகநாதன், செல்லப்பாண்டியன்
நெல்லை - செந்தூர்பாண்டியன்

0 comments:

Post a Comment