Tuesday, November 01, 2011

கடலுக்குள் புதையும் ஒலுவில் கிராமம்


அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தின் கடற்கரையோரங்கள் பாரியளவில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக கல்முனை, சாய்ந்தமருது, ஒலுவில் போன்ற பிரதேசங்களின் கடற்கரை கடலுக்கு இரையாகி வருகின்றன.

கடந்த சுனாமியின் பின்னர் இந்த நிலை தொடர்ந்து வந்தாலும் அண்மைக்காலமாக மிகவும் விரைவாக கடலரிப்பு ஏற்பட்டு வருகின்றமையினால் மீனவர்களும், அவர்களது குடியிருப்புக்களும் மிகமோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கரையோரத்தில் காணப்படும் தென்னை மரங்கள், வீடுகள், மீனவர்களது வாடிகள் போன்றனவும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இப்பிரதேசங்கள் கடலுக்குள் முழ்கிடும் அபாயம் தோன்றியுள்ளதாகவே மீனவர்களும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர். ஒலுவில் துறைமுகம் கட்டுமான வேலைகளின் பின்னர் ஒலுவில் பிரதேசம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கிராமத்தவர்கள் கூறுகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்குமெனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் தற்போது கிழக்கில் பரவலாக பருவமழை பாரிய காற்றுடன் பெய்ய ஆரம்பித்துள்ள நிலையில் கவனிக்காது விட்டால் இக்கிராமங்கள் கடலுக்குள் அடிமையாகிவிடும் உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.









அட்டாளைச்சேனை துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்

0 comments:

Post a Comment