Monday, November 14, 2011

குழந்தைகளின் எதிர்காலம் யாரிடம்?

(நவம்பர் 14ஆம் திகதி உலக குழந்தைகள் தினம். அதனை யொட்டி இக்கட்டுரை துருவம் வாசகர்களுக்காக பிரசுரமாகின்றது)

 லகில் பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக சர்வதேச தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் குழந்தைகளுக்கான சர்வதேச தினமும் ஒன்றாகும். இது வருடந்தோறும் நவம்பர் 14இல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. உண்மையில் இன்றைய காலகாலகட்டத்தில் குழந்தைகளின் மீதான கண்காணிப்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துகின்றார்களா? என்பதுகூட சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில் அண்மைக்காலங்களில் சிறுகுழந்தைகளின் உயிர்களை காவு கொள்ளவைப்பதில் தாய் அல்லது தந்தை சில வேளைகளில் இருவரும் ஏதோஒரு விதத்தில் உடந்தையாக இருக்கின்றனர்.

அண்மையில் அக்குறண பிரதேசத்தில் பெற்ற குழந்தையை வீசி எறிந்திருந்ததை ஊடகங்களில் பார்த்தோம். தன்னுடைய ஆசைக்காக பாவம் ஒரு உயிரை வயிற்றில் பத்துமாதம் சுமந்து அதனை பெற்றும்விட்டு கொலை செய்வதானது எந்த வகையில் நியாயம் கற்பிக்க முடியும். கடந்தகாலப் போர் சூழல், சுனாமி, வறுமை, தாய் வெளிநாடு செல்லல், தந்தையால் கைவிடப்படுதல், குடும்பத்தவர்களால் அச்சத்திற்குள்ளாக்கப்படுதல், பெரியவர்கள் குழந்தைகளை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்குதல் போன்ற பல பரிணாமங்களுக்கும் மத்தியில் தன்னுடைய குழந்தையை நல்ல முறையில் வளர்த்தெடுத்து நாளைய உலகின் நற்பிரஜையாக்கி அழகுபார்க்;கும் பெற்றோர்கள் இவ்வாறான ஈனச் செயல்களிலிருந்து விலக்களிப்பதில் ஆர்வமாகவே இருந்து வருகின்றனர்.

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில் அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்றொரு பாடல் வரிகளுக்கொப்ப ஒரு தாய் குழந்தையை வளர்த்தெடுப்பதில் அவள் படுகின்ற துண்பங்கள் துயரங்கள் சொல்லிடங்காததுதான். ஆனால் அந்தத்தாயின் அரவணைப்பும், அன்பும் கிடைக்காத எத்தனையோ குழந்தைகள் நடைப்பிணங்களாக தெருக்களிலும், பணக்கார்களது வீடுகளிலும் அடிமையாக்கப்படுவதற்கான முஸ்தீபுகளை எடுப்பதும், இல்லாமல் செய்வதும் பெற்றோர்களின் கைகளிலேயே உள்ளது. தரித்திரத்திற்காக (பயந்து) உங்கள் குழந்தைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள். ஏனென்றால் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அப்படி நீங்கள் செய்தால் அதனினும் கொடிய பாவம் வேறொன்றுமில்லை (அல்குர்ஆன்) எடுத்தியம்புகிறது.

இன்று வறுமைக்காக கொலை, ஆசைக்காக கொலை, கள்ளத்தனத்திற்காக கொலை, வயிற்றிலிருக்கும்போதே கொலை என்று பலதரப்பட்ட கொலைகளை செய்வதற்கு சிலர் தயங்குவதில்லை. இதன் பாவம் கொடியது என்று எம்மைப்படைத்த இறைவன் கூறுகின்றான். அப்படியானால் இதன் தண்டணை மிகவும் பயங்கரமானதாக இருக்கும் அல்லவா! ஆதலால்தான் இறைவனுக்கு அடத்த ஸ்தானத்தில் பெற்றோர்கள் இருக்கின்றார்கள் என்கிறார் அறிஞர் வில்லியம் பென்.

பேனபார்ட்டின் கருத்துப்படி “ஒரு குழந்தையின் எதிர்காலத் தலைவிதி எப்போதும் அக்குழந்தையுடைய தாயின் முயற்சியில் இருக்கிறது” என்றுகூறுகின்றார். தாயின் பாசத்திற்கு ஆளாகாத குழந்தையே இல்லை. இன்று சில அப்பாக்கள் குழந்தையின் வளர்ச்சியில் பங்கு கொள்வதில் நின்றும் விலகிவிடுகின்றார்கள் காரணம் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்கள், தூர இடங்களில் தொழில் புரிதல், அதிகாலை சென்று இரவில் வீடுவரல், குடும்பப்பிரிவு போன்ற காரணிகள் குழந்தைகளின் செல்வாக்கில் அதிக தாக்கத்தை செலுத்துவதில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் தாயின் பரிவும், பாசமும் குழந்தைகளை ஸ்பரிசத்துடன் வாழ வைக்கிறது.

ஆதலால்தான் பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து குழந்தையின் வளர்ச்சிப்பணியில் ஆர்வம் காட்ட வேண்டும். சில அப்பாக்கள் இருப்பார்கள் ஆண்குழந்தைகளைக் கண்டாலே பிடிக்காது. பாசத்திற்கு ஏங்கும் குழந்தைகளை இவ்வாறு பரிகாசிப்பதன் விளைவு அவன் பெரியவனானதும் அப்பாவை எதிர்த்து பேசுகின்ற அல்லது அப்பாவை வெறுக்கின்ற ஒரு நிலைக்கு இட்டுச் செல்வதை நடைமுறை வாழ்வில் காண்கின்றோம்.

குழந்தைகள் இல்லை என்று ஏங்குகின்ற பல பெற்றோர்கள் இருக்க பெற்ற குழந்தையை சரியான முறையில் வளர்ப்பதில் கரிசனையற்று காணப்படுகின்ற பிள்ளைகள் இந்தச் சமுதாயத்தின் எதிரிகளாகவும், சமூகப்பற்றற்றவர்களாகவும், மூர்க்கத்தனமுள்ளவர்களாகவும் உருவாக்கப்படுகின்றார்கள் என்பதை அறிஞர்களும், உளவியளார்களும் கூறிநிற்கின்றனர். குழந்தைகள் வீட்டின் செல்வங்கள் என்று நம்முன்னோர் கூறியுள்ளனர். ஆனால் இன்று பிள்ளைகளே தமக்கு விரோதியாக மாறுகின்ற ஒரு சூழலில் நமது குழந்தையை நாமே வளர்க்கின்றோம். பெற்றோர்கள் இருவரும் வேலைகள் காரணமாக சென்றுவிடுவதால் அக்குழந்தையின் பராமரிப்புக்கள், பிள்ளையின் நடத்தைக் கோலங்கள் போன்றவற்றை அவதானிப்பதில் இருந்தும் விடுபடுகின்றோம். இது நல்லதல்ல. இவ்வாறனவர்கள் நேரங்கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் கொஞ்சிக் குழாவுதல் வேண்டும். லீவு நாட்களில் குழந்தைகளுடன் அதிக நேரத்தை கழிக்கின்ற ஒரு போக்கு எம்மிடத்தில் உருவாக்கப்பட வேண்டும். பாசத்தை, அண்பை, ஸ்பரிசத்தை அப்பிள்ளை எதிர்பார்க்கின்றான் என்பதை நினைவிக்கொள்ள வேண்டும்.

எனக்குத் தெரிந்த ஒருவருக்கு குழந்தை இல்லை. அவர் சுவீகாரம் செய்து குழந்தையை நல்லமுறையில் வளர்த்தெடுத்தார். பாடசாலை செல்லும் வயதில் அவனது பள்ளிக்கூட நண்பர்கள் அவனை வளர்ப்புக் குழந்தைதானே என்று அவனை கிண்டல் செய்து வந்தனர். காலப்போக்கில் அவனது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு இறுதியில் வளர்த்த பெற்றோருக்கே எதிரியாகி அவர்களது சொத்துக்களையும் அழித்து ஊரையே விட்டு ஓடிவிட்டான். இவ்வாறன சந்தர்ப்பங்களில் குழந்தையின் ஆரம்பத்திலிருந்து அன்பான வார்த்தைகளும், அவனது நிலையை உரிய வயதில் அவனிடம் எடுத்து இயம்பியிருந்தால் அவன் எதிரியாகி, சமுதாய சீரழிவுக்குள்ளாகாதிருந்;திருக்கலாம். ஆதலால்தான் குழந்தையின் வளர்ச்சியில் சூழல் ஒரு முக்கியமான தாக்கத்தை செலுத்துகின்றது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து அவனுக்குரிய சூழலை சரியான முறையில் தெரிவு செய்து அதன்படி ஒழுகின்றானா என்பதை அன்புடன் கலந்த முறையில் அவதானிக்க வேண்டும்.

சிறுபிள்ளைகளின் நடத்தைக் கோலங்கள் அவர்களது சுயவிருத்தியையும், அவர்களுக்கிடையில் ஏற்படும் அனுபவங்களையும், சூழலுடன் அவர்களுக்குள்ள ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு பிள்ளையும் தனக்கேயுரித்தான வகையில் தனது தனித்தன்மைக்கேற்ப சூழலுக்குத் தனது துலங்களைக் காட்டுகின்றது. ஒரு பிள்ளை தன் வீட்டுச் சூழலில் சுதந்திரமான நடமாட்டத்திற்குப் பழக்கப்பட்டிருப்பதனால் அவன் முன்பள்ளிக் கல்வியில் அல்லது ஆரம்பப்பாடசாலை வகுப்பில் சுதந்திரமானவனாகவே உலாவித்திரிய பார்ப்பான். அவ்வேளையில் விளையாட்டு முறையிலான கற்றலை மேற்கொள்கின்ற முறைகளை இன்றைய கல்விப்புலம் கல்விச் சிந்தனைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதனை விட்டுவிட்டு சில பெற்றோர்கள் நினைப்பதுபோல் எனது பிள்ளை வீட்டிலும் விளையாட்டு, பாடசாலையிலும் விளையாட்டு என்று ஆசிரியர்களை கோபிக்கின்ற பெற்றோர்களை நாம் காண்கிறோம். இவர்களுக்கு விளையாட்டின் ஊடாக வழங்கும் கல்விச் சிந்தனைகளை பெற்றோருக்கு விளங்கப்படுத்த வேண்டியது ஆரம்பக் கல்வி ஆசிரியர்களது கடமையாகும்.

விஞ்ஞானி நியூட்டனை அவரது தாயார் முறையான கல்வியில் நீண்டு நிலைக்காது வீட்டில் வைத்து பாடம் சொல்லிக் கொடுத்து அவனை விஞ்ஞானியாக்கியது ஒரு தாய்தானே. இவ்வாறு பாடசாலைக் கல்விக்கு முழுக்குப் போடவைத்து பிள்ளைகளின் வாழ்வில் மாறாத வடுக்களை ஏற்படுத்துகின்ற ஆசிரியர்களும் இன்றைய கல்விப்புலத்தில் இருக்கின்றார்கள் என்பதையும் பெற்றோர்கள் கவனத்திற் கொண்டு தங்களது பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டில் அவதானம் செலுத்துகின்றவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கின்ற ஒரு நிலைமைக்கு தனது குழந்தைகளை வளர்த்தெடுக்கலாம். சில பெற்றோர்கள் தமது பிள்ளையை வேறொரு பிள்ளையுடன் ஒத்துப்பார்த்து பிள்ளையை குறை கூறுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு பிள்ளையும் தத்தமது விருத்திக்கேற்பவே கற்கும் ஆற்றலுடையது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சில பிள்ளைகள் விரைவாக கற்பார்கள். சிலர் மெதுவாக கற்பார்கள். சிலரோ தமது உணர்வுகளை வெளிப்படையாகக் கூறும் ஆற்றலுடையவர்களாகவும், சிலர் வெட்க சுபாவத்திற்கும் ஆளானவர்களாக காணப்படுவர். இவர்கள் எல்லோரையும் அரவணைத்து அவர்களது ஆற்றல் அனைத்தையும் ஒருங்கமைத்து கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குபவராக ஆசிரியர்கள் காணப்பட வேண்டும். பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளையின் நிலைமை அறிந்து அதற்கு ஈடுகொடுக்கக்கூடியவர்களாக காணப்படுகின்றபோதுதான் பிள்ளையும் உரிய அந்தஸ்த்தை அடைவான்.

பிள்ளைகளின் சுற்றுப்புறம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை ஐநாவினது ஆய்வொன்று இவ்வாறு தெரிவிக்கின்றது. “பிரித்தானியக் குழந்தைகளைவிட நெதர்லாந்துக் குழந்தைகள் மேம்பட்ட வளர்ச்சியுடன் காணப்படுகின்றனராம். ஏனெனில் அவர்களது சுற்றுப்புறச் சூழல் மேம்பட்டுக் காணப்படுவதேயாகும்” எனவேதான் பிள்ளையின் ஆளுமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணியாக சூழல் அமைந்துள்ளது. எனவேதான் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த் தெடுப்பதில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதையே இந்த ஆய்வின் மூலம் காண்கின்றோம்.

சில தந்தைமார் பிள்ளையின் வளர்ச்சியில் அக்கரை செலுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டுக்களை தாய்மார்கள் கூறுவர். உண்ணுகின்றபோது, குளிக்கின்றபோது, கடைகளுக்குச் செல்கின்றபோது, கூட்டங்களுக்குச் செல்கின்றபோது என எந்தவிதமான இடங்களுக்கும் இவர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்வதில்லை. வீட்டில் யாராவது வருகை தந்தால் பெற்றோர்கள் அவர்களையும் கலக்கச் செய்வதில்லை. இவ்வாறான செயல்களும் குழந்தையின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அனைத்து செயற்பாடுகளிலும் கலக்கச் செய்து அவனை சமூக இணக்கப்பாடுள்ளவனாக மாற்றுகின்ற கைங்கரியங்கள் இவைதான் என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்களுடன் சேர்ந்து உண்ணுகின்றபோது அப்பிள்ளை சிறப்பாக பேசக் கற்றுக் கொள்கிறது என்பதை கொலம்பிய பல்கலைக்கழகம் ஒன்றின் ஆய்வு கூறுகின்றது. அதாவது சுவையான உணவுகளை ருசித்து உண்ணுகின்றபோதும், அங்கு பேசுகின்ற விடயங்களையும் குழந்தைகள் கற்றுக் கொள்வதாகவும், வாரத்திற்கு இரண்டு நாட்கள் மாத்திரம் சேர்ந்து உண்ணுகின்றபோது அப்பிள்ளை பல்வேறுவிதமான குற்றச் செயல்களுக்கு உள்ளாகின்றனர் எனவும், பெற்றோர்கள் தங்களது அரவணைப்பில் வைத்துக் கொண்டு உண்ணுகின்றபோது சிறப்பானதொரு பிள்ளையாக வளருகின்றது என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.

கிராமம்புறங்களில் கூறுவார்கள் நூலைப் போல் சேலை, தாயைப்பேல பிள்ளை என்று. உண்மைதான் பிள்ளையின் அனைத்து விடயங்களிலும் தாயின் நடத்தைக் கோலம் பரிணமித்திருந்தாலும், அமெரிக்கப் பேராசிரியரான ரோஸ்டிபார்க்கி என்பவரது கூற்று சற்று வித்தியாசமானதாக காணப்படுகிறது. அதாவது குழந்தையின் பராமரிப்பில், வளர்ச்சியில், அதன் ஆளுமையின் உருவாகத்தில் ஆண்களுக்கு அதிகமான பங்குண்டு எனக் கூறுகின்றார். எனவேதான் பெற்றோர்கள் என்கிற இருவரும் ஒன்று சேர்ந்து பிள்ளையின் ஆக்கத்திற்கும், அழிவுக்கும் காரணமாக அமைகின்றனர் என்பதை உணர்ந்து கொண்டு, இரு கைகள் ஒன்று சேர்கின்றபோது சத்தம் பிறக்கிறது என்பதுபோல ஒவ்வொரு பெற்றோரும் தங்களது செல்வக்குழந்தைகளை நல்லமுறையில் பராமரித்து நாளைய உலகின் சிற்பிகளாகவும், தலைவர்களாகவும், ஆக்கவூக்கச் சிந்தனாவாதிகளாகவும், சிறந்த ஆளுமையுள்ள நற்பிரஜையாகவும் வளர்க்கின்ற பாரிய பொறுப்புக்களை சிரமேற்கொண்டு யதார்த்த உலகின் போக்கை நன்குபுரிந்து கொள்கின்றவனாகவும் வளர்க்கின்ற கடமையில் என்றும் வழிதவறாது நடந்து கொள்ள வேண்டும் என்பதையே வருடந்தோறும் வருகின்ற இந்தக் குழந்தைகள் தினம் உணர்த்தி நிற்கின்றது என்பதை நினைவிற் கொள்வோமாக.

சாமஸ்ரீ தேமாண்ய எஸ்.எல். மன்சூர் (கல்விமானி),
தென்கிழக்கு துருவம் செய்தியாளர்

0 comments:

Post a Comment