Tuesday, November 29, 2011

முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீட் மரணம்


(ஏ.ஜே.எம். ஹனீபா) 
சம்மாந்துறை மண்ணின் முடிசூடா மன்னன் முன்னாள் அமைச்சர் எம்.ஏ. அப்துல் மஜீட் இன்று செவ்வாய்க்கிழமை தனது 85ஆவது வயதில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையில் இரவு 9.25 மணிக்கு மரணமாகியுள்ளார்

இவர் கடந்த 24ஆம் திகதி சுகயீனமுற்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளார். இவர் 1926ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சம்மாந்துறையில் அப்துல் மஜீட் வன்னிமை கதிசா உம்மாவுக்கும், அஹமதுலெப்பை உடையார் முஹம்மதலி தபாலதிபருக்கும் தலைமகனாக  பிறந்தார்.

கிழக்கிலங்கையில் மதிப்புக்குரிய கல்விமானாக திகழ்ந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரினால் ஏடு துவக்கப்பட்ட மாணவராக தனது ஆரம்பக் கல்வியை 1933ஆம் ஆண்டு சம்மாந்துறை அரசினர் ஆண்கள் பாடசாலையில் கற்ற இவர் 1934ஆம் ஆண்டு இடைநிலைக் கல்வியை தொடர்வதற்காக மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியிலும்,  உயர்தரக் கல்வியினை பெற்றுக் கொள்ள 1943 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு சென்ற இவர் 1946ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று 1947ஆம் ஆண்டு கொழும்பு பல்கலை கழகத்துக்கு கலைத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு 1950ஆம் ஆண்டு பொருளாதாரப் பட்டதாரியாக பட்டம் பெற்ற இவர் கிழக்கிலங்கையின் முதல் முஸ்லிம் பட்டதாரி என்ற முத்திரையினையும் பதித்துள்ளார்.

பின்னர் தான் கற்ற மட்டக்களப்பு சிவானந்த கல்லூரியில் 1951 தொடக்கம் 1952 இறுதிவரை ஆசிரியனாக பணியாற்றிய இவர் 1953ம் ஆண்டு தொடக்கம் 1954ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பிராந்திய சமூக சேவை உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ளார். இதேகால கட்டத்தில் 1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி சம்மாந்துறை பிரதேசத்தில் பிரபல்யம் பெற்று விளங்கிய கல்லோயா அபிவிருத்திச் சபையின் நீர்ப்பாசன பிரதம பொறியியலாளராக கடமையாற்றிய இஸ்மாயில்துரை என்று அழைக்கப்பட்ட மீராலெப்பை முகம்மட் இஸ்மாயில் மற்றும் அஹமதுலெப்பை போடி ஆயிஷா தம்பதியினரின் மூத்த மகளான றசீனதுல் கதிஜாவை திருமணம் செய்தார்.

இவ்வல்லற வாழ்கையில் இணைந்து கொண்ட அப்துல் மஜீட் அவர்கட்கு ஜலாலுதீன் பாறூக்கி, பஸால் மாலிக்கி, பளுனா, நாஸர், முஹம்மட் லாபிர் ஆகிய நான்கு ஆண்களும், ஒரு பெண்ணுமாக ஐந்து பிள்ளைகளின் தந்தையாக விளங்கினார்.

அதன் பின்னர் தான் வகித்து வந்த சமூகசேவை உத்தியோகத்தர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு 1954ஆம் ஆண்டு நடை பெற்ற பட்டின சபை தேர்தலில் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட முதலாம் வட்டாரத்தில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்ட அப்துல் மஜீட் அவர்கள் 6 வருடங்களாக பட்டின சபை தலைவராக பணியாற்றி தனது அரசியல் பயனத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொத்துவில் தொகுதிக்கு சுயற்சை உறுப்பினராக போட்டியிட்டு 7,736 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றார் பின்னர் அதே 1960ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் பொத்துவில் தொகுதிக்கு சுயற்சைக் குழுவில் போட்டியிட்டு 10,654 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார்.

அதனை தொடர்ந்து 1965, 1970, 1977, 1989ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியூடாக போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக, பிரதியமைச்சராக, அமைச்சராக இருந்து 38 ஆண்டுகள் இப்பிராந்தியத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்காக அளப்பரிய சேவைகளை செய்த ஒரு முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர்.

இவர் 1977ஆம் ஆண்டு தொடக்கம் 1978ஆம் ஆண்டு வரை காணி, விவசாயப் பிரதியமைச்சராகவும், 1978 தொடக்கம் 1980 வரை மின்சக்தி எரிபொருள் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சராகவும், 1980 தொடக்கம் 1981 வரை எரிபொருள் மின்சக்தி பிரதி அமைச்சராகவும், 1981 தொடக்கம் 1983ஆம் ஆண்டுவரை மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராகவும், 1983 தொடக்கம்
1989ஆம் ஆண்டுவரை தபால், தந்தி, தொலைத் தொடர்புகள் பிரதி அமைச்சராகவும், 1989 தொடக்கம் 1992ஆம் ஆண்டு வரை நெசவுக் கைத்தொழில் அமைச்சராகவும் பணியாற்றி எமது மாகாணத்தின் அரசியல் முதுசமாக திகழ்ந்தவர்.

பொதுவாக கூறின் தன்னலம் கருதாத ஒரு மக்கள் சேவகன் 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற உயரிய தத்துவத்துக்கு எடுத்துக் காட்டாக எம் மக்கள் மத்தியில் வாழ்ந்தவர் ஜாதி, மத பேதங்களுக்கு அப்பால் நின்று எல்லோரும் ஒரே இரத்தங்கள் என்ற உணர்வோடு வாழ்ந்து காட்டி உத்தம புருஷர் என்றால் மிகையாகாது. அன்னாருடைய இழப்பு தமிழ், முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய இழப்பாகும்.அன்னாருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் கிடைக்க நாம் அனைவரும் பிராத்திப்போம்.

0 comments:

Post a Comment