Tuesday, November 29, 2011

கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்


தம்மீதான அடாவடி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, அநுரதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 65 தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராடத்தை ஆரம்பித்துள்ளனர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சிறை அதிகாரிகளால் 65 தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டனர். இதில் சிலர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. போரின்போது அவையவங்களை இழந்த விசேட தேவையை கொண்ட அரசியல் கைதிகளும் இதன்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் இணைந்ததாக சிறைச்சாலைக்குள் இருந்த இந்துக் கோயிலையும் சிறை அதிகாரிகள் உடைத்துள்ளனர். இந்நிலையில் கைதிகளில் இந்த உண்ணாவிரதத்தை நிறுத்தக்கோரி, பொலிஸ் அதிகாரி, துசித உடுவர, சிறைக்கைதிகளுடன் பேச்சு நடத்தினார்.

எனினும் தம்மீது இவ்வாறான தாக்குதல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது என்று உறுதியளிக்கப்படும் வரை தாம் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தாக்கப்பட்ட சிறைக்கைதிகளை நேற்று பார்வையிட சென்ற உதுல் பிரேமரத்ன தலைமையிலான சட்டத்தரணிகளை சிறை அதிகாரிகள் தடுத்து விட்டனர்.

தமது அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணிகளுக்கே இந்த அனுமதி மறுக்கப்பட்டதாக நாம் இலங்கையர் அமைப்பின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன எமது துருவம் இணையத்தளத்துக்குத் தெரிவித்திருந்தார். இதனிடையே, இலங்கையில் கைதிகளை பார்வையிட சட்டத்தரணிகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டமை இது முதல் தடவை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதற்கிடையில் மாவீரர் நிகழ்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்கையில், சிறை அதிகாரிகள், கைதிகள் இருந்த அறையை சோதனையிட்டதாகவும், இதன்போது 19 கையடக்க தொலைபேசிகளை கைப்பற்றியதாக இலங்கையின் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரஸ்ரீ கஜதீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment