இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா ஷேவாக்கை இழந்து விட்டது.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. டெல்லியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரில் 1-0 என்ற முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் டோனி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். இதையடுத்து ஷேவாக்கும், கம்பீரும் களம் இறங்கினர். வழக்கம்போல வேகமாக ஆடிய ஷேவாக் 33 பந்துகளில் 38 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து கம்பீரும், டிராவிடும் தற்போது ஆடி வருகின்றனர்.
இன்றைய போட்டியிலாவது சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தைத் தொடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏகமாகவே உள்ளது. டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்த பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஓஜா ஆகியோர் இந்த போட்டியிலும் கலக்கும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றியை தடுக்க முடியாது. வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா உடன் உமேஷ் யாதவ் சேர்ந்து கொண்டு மேற்கிந்திய தீவுகள் அணியை ரன் குவிக்கவிடாமல் தடுக்கலாம்.
மேற்கிந்திய தீவுகள்:
மேற்கிந்திய தீவுகளை பொறுத்த வரை அனுபவ வீரர் சந்தர்பால் களத்தில் நீண்டநேரம் நிலைத்து நின்று ஆடி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி டெஸ்டில் ஏமாற்றம் அளித்த துவக்க பேட்ஸ்மேன்கள் பிராத்வைட், பாவல் ஆகியோர் நல்ல துவக்க தர வேண்டியுள்ளது.
பந்துவீச்சாளர் தேவேந்திர பிஷூ டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்தினார். அதேபோல இந்த போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் என்று தெரிகிறது. கேப்டன் டேரன் சம்மி ஆல்-ரவுண்டராக வந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


0 comments:
Post a Comment