Saturday, November 26, 2011

அட்டாளைச்சேனை சந்தை ; நடப்பது என்ன?


(துருவத்திற்கான அரசியல் செய்திப்பிரிவு) 
அண்மைக்காலமாக அட்டாளைச்சேனை சந்தை அமைப்பதில் இருந்துவரும் தடைகள், இழுபறிகள் பற்றி கடந்த வாரங்களில் துருவம் இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ள சந்தை விவகாரம் தற்போது சந்தைக்கு வந்துள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபையானது ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் கட்சியின் வசமுள்ளது. அட்டாளைச்சேனையை சேர்ந்தவர் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை. இரு துருவங்களும் ஒரே கட்சி ஆட்சியின்கீழ் இருப்பவர்கள்.

விவகாரம் சந்தைக்கு வந்துவிட்டது என்றால் அங்கே பிசுபிசுக்களும், பிரச்சினைகளும் வெடிக்கத்தான் செய்யும். அட்டாளைச்சேனைக்கான பொதுச் சந்தையை அமைப்பதிலும், அட்டாளைச்சேனையை அழகு பார்ப்பதிலும் அமைச்சர் அதாஉல்லாவுடன் கைகோர்த்துள்ளவர், ஊர் சிந்தைனையை சதா எண்ணுபவர்தான் இந்த மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை. ஆனால் கடந்த காலங்களில் எந்தவிதமான அபிவிருத்தி என்றாலும் இந்த அமைச்சர்கள் இருவரும் சேர்ந்துதான் செய்வார்கள். பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் தற்போது அட்டாளைச்சேனை புதிய சந்தை அமைப்பதில் இழுபறி நீண்டகாலமாகவே நிலவுகிறது. 

பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் அமைச்சர்களுடன், அட்டாளைச்சேனை அபிவிருத்திக்குழு, பள்ளிவாசல் நிருவாகம், ஊர்பிரமுகர்கள் என பலதரப்பட்டவர்கள் ஒன்றுகூடி தற்போது சந்தையுள்ள இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்துத் தரப்பாரும் ஒத்துக்கொண்டதன் பிரகாரம் சந்தைக் கட்டிடத்திற்காக அடிக்கல்நாட்டு விழா என்றும், அத்திவாரம் போடுவதற்கான கல், மண் போன்றவைகளும் உரிய இடத்தில் வந்தன் பிற்பாடு பத்திரிகை ஒன்றில் அமைச்சர் உதுமாலெவ்வையின் விசேட செய்தி பிரசுரமாகி இருந்தது. அதாவது கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமித்த கண்காணிப்பு ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பின்னரே சந்தை அமைக்கப்படும் என்கிற விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இவ்வாறு இழுபறியிலுள்ள சந்தை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அமைச்சரின் துண்டுப்பிரசுரம் தற்போது அட்டாளைச்சேனையில் வெளியாகியுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள விபரங்களை முழுமையாகத் தருகின்றோம்.

அட்டாளைச்சேனை பொதுச் சந்தை விவகாரம் நடப்பது என்ன…?

அஸ்ஸலாமு அலைக்கும்

அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கான பொதுச் சந்தை அமைக்கும் விடயத்தில் உண்மைக்கு மாறான பல பத்திரிகைச் செய்திகள் வெளிவந்தது தொடர்பாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை ஆகிய நான் தெரிவிப்பதாவது:

அட்டாளைச்சேனை பிரதேசசபை மிக பழைமை வாய்ந்த ஆதிகால கட்டிடங்களுடன் இயங்கி வந்தது. இக்கட்டிடங்களானது அட்டாளைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாசலின் இயற்கை முகத்தோற்றத்தினை மறைத்துக் கொண்டிருந்தது. இதனை வெளிக்கொண்டு வருமுகமாக கௌரவ உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும, தேசியக் காங்கிரஸின் தேசியத் தலைவருமான அல்ஹாஜ். ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் அட்டாளைச்சேனைப் பிரதேசசபை காணியில் அமைந்திருந்த பழைய கட்டிடங்களை நிக்கிவிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கென புதிய இரண்டு மாடி கட்டிடங்களை அமைத்துக் கொடுத்ததோடு அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கென புதிய கலாசார மண்டபத்தையும் அமைத்துத் தந்தார்.

மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் முயற்சியினால் 1997ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவை நினைவு கூறுமுகமாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் புதியதொரு இயற்கையான தோற்றம் வெளிக்கொண்டு வரப்பட்டது.

அமைச்சர் அல்ஹாஜ். ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் கலை உணர்வுடன் அமைகப்பட்டுள்ள அட்டாளைச்சேனையின் இயற்கைத் தோற்றத்தினை பொறுக்க முடியாத சிலர் தனிப்பட்ட அரசியல் குரோதங்களுக்காக அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலின் இயற்கை முகத்தோற்றத்தினை மறைத்துவிடுவதற்கு பல வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையும் எவ்வித அபிவிருத்தியையும் செய்யாத அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்திக் குழுச் செயலாளரின் அண்மைக்கால பத்திரிகை அறிக்கை இதற்கு நல்லசான்று.

சென்ற 2008 ஆண்டு நெக்டெப் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சந்தைக் கட்டிடத் தொகுதி ஒன்றை கட்டி அட்டாளைச்சேனை ஜூம்ஆ பள்ளிவாயலின் முகத்தோற்றத்தினை மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக என்னால் முறைப்பாடு செய்யப்பட்டு பள்ளிவாசலின் இயற்கை முகத்தோற்றத்தினை மறைக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் காணியில் இக்கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் கிழக்கு மாகாண சபையினால் செயற்படுத்தப்படும் நெல்சிப் திட்டநிதி மூலம் அட்டாளைச்சேனைக்கான சந்தை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான சிறிய காணித் துண்டில் இச் சந்தைக் கடிடத்தினைக் கட்டி அட்டாளைச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசலின் இயற்கை முகத்தோற்றத்தினை மறைப்பதற்கு அட்டாளைச்சேனை பிரதேசசபை தவிசாளரும் அவரைச் சார்ந்த சில பிரமுகர்களும் முயற்சியினை மேற்கொண்டனர்.

தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான அல்ஹாஜ். ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் எனக்கு வழங்கப்பட்ட அமைச்சர் என்ற பதவிமூலம் கிழக்கு மாகாணம் முழுவதும கடந்த 30வருட காலமாக யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை தற்போது அடையாளங்கண்டு, அபிவிருத்தி ஊடாக சமாதானத்தை உருவாக்கிவரும் நான், என் சொந்த ஊரான அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நன்கு திட்டமிட்டு செயல்படுத்திவரும் அதேவேளை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அட்டாளைச்சேனை பள்ளிவாசலுடைய இயற்கையான தோற்றத்தை மறைக்காமல் சந்தையை அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன்.

இதுதொடர்பாக கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது அட்டாளைச்சேனை பொதுச் சந்தை அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் ஜும்ஆ பள்ளிவாசல், கலாசார மண்டபம், தேசிய மீலாத்விழா நினைவுத் தூபி, பொதுநூலகம் ஆகியவை அமைந்துள்ளதால் வேறொரு பொருத்தமான இடத்தை தெரிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது.

கடந்த 2011.08.09 ஆம் திகதி நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அட்டாளைச்சேனை பொது சந்தைக்கான காணியை அடையாளம் காண்பது தொடர்பான தீர்;மானம் மேற்கொள்வதற்கென விஷேட குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது. அட்டாளைச்சேனை பொதுச்சந்தை அமையும் காணி தொடர்பான அம்பாறை மாடவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஏஜே. இர்ஷாத், கௌரவ தவிசாளர் ஏஎல். நஸீர், நெல்சிப் (NELSIP) திட்ட உயர் அதிகாரிகள், பொறியியலாளர்கள், அட்டாளைச்சேனை பள்ளிவாசல் தலைவர் எஸ்.எல்.ஏ. றஷீட், அட்டாளைச்சேனை வர்த்தக சங்கத்ப் பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட 04 கூட்டங்கள் நடத்தப்பட்டு இறுதியாக பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

01. அட்டாளைச்சேனை பொது நூலகம் இரண்டு மாடிக் கட்டிடத்தினை பொதுச் சந்தைக்கு ஏற்ப மற்றியமைத்தல்.
02. புதிதாக அமைக்கப்பட்ட கலாசார மண்டபத்தின் முதலாவது மாடியை பொது சந்தைக்கு பாவித்தல்.
03. கலாசார மண்டபத்திற்கு தென்புறத்தில் வெற்றிடமாக உள்ள காணியில் பொதுச் சந்தைக்கான புதிய இரண்டு மாடிக் கட்டிடத்தினை அமைத்தல்.
04. அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலின் தற்போதுள்ள இயற்கையான தோற்றத்தை மறைப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

பொதுச் சந்தைக்கான மாதிரி வரைபடத்தை தயாரிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டு வரைபடம் தயாரிப்பதற்கான அதிகாரிகளையும் கொண்ட விசேட குழுவும் தெரிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் இக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாமல் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எப்படியும் பள்ளிவாசலை மறைத்து சந்தைக் கட்டிடம் கட்டுவேனென்று கங்கணம் கட்டிக் கொண்டு இது தொடர்பாக பிரதேச வாதங்களை கிளப்பி உண்மைக்கு புறம்பான தகவல்கைள வெளியிட்டு வருவது மிகவும் கலைக்குரிய விடயமாகும்.

கிழக்கு மாகாண கௌரவ முதலமைச்சரினால் இது தொடர்பான மாகாண அமைச்சர்கள், உயர் அதிகாரிகளைக் கொண்ட விஷேட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் இதுதொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இஸ்லாமிய கலாசாரத்துடனும், கலை உணர்வுடனும் பல வருடகாலமாக திட்டமிட்டு கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து உருவாக்கப்பட்ட இயற்கையான அட்டாளைச்சேனையின் முகத்தோற்றத்தினை இல்லாமல் செய்வதற்கு முஸ்லீம் காங்கிஸ் தலைவரும் அட்டாளைச்சேனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களும் எடுக்கின்ற முயற்சிகளை இப்பிரதேச மக்கள் விரைவில் நன்கு உணர்வார்கள் என்று நம்புகின்றேன்.

மேலும், கூட்டத் தீர்மானங்களுக்கேற்ப, சந்தைக்கட்டிடமொன்றை பள்ளிவாசலின் எழில்மிகு தோற்றத்தினை மறைக்காமல் அதே இடத்தில் கட்டுவதற்கு எடுக்கப்பட்ட ஏகோபித்த முடிவுகளை மூடிமறைத்து வீண் பழியைப் போடும் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களை பொதுமக்கள் இனங்கண்டுகொள்ள வேண்டும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

தேசியப் பட்டியல் மூலம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்குப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படுமென்ற (இது சம்பந்தமாக துருவம் இணையத்தளத்தில் ஒரு கட்டுரை வரையப்பட்டுள்ளது. ஒரநீதி காட்டுகிறதா முஸ்லிம் காங்கிரஸ்? எனும் தலைப்பில் உள்ளது பார்க்கவும்).

முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் பொய் வாக்குறுதிகளை நம்பியவர்களாக வெறும் கோசத்திற்காக தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களித்துவரும் அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு எந்தவித அரசியல் அதிகாரமோ, அபிவிருத்தித் திட்டங்களோ இதுவரையும் வழங்கப்படாமல் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவது குறித்து சிந்திக்காமல் இப்பிரதேச மக்களின் நலனுக்காய் தொடர்ச்சியாக திட்டமிட்ட முறையில் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு நமது நடடிவடிக்ககைகளுக்கு தடையாக இப்பிரதேச முஸ்லீம் காங்கிரஸ் பிரமுகர்கள் செயற்படுகின்றனர். இவர்களின் சுயநலப் போக்கினை அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்.

எம்.எஸ். உதுமாலெவ்வை. 
கிழக்கு மாகாண அமைச்சர்

குறிப்பு: இவ்வாறு துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வாசித்த அன்பர்கள் உண்மை எந்தப்பக்கம் இருக்கிறது என்பதை கண்டுகொண்டால் சரி. குறிப்பாக அரசியல்வாதிகள் தங்களுடைய காய்நகர்த்தல்களை தமது எதிர்கால அரசியலை மையப்படுத்தியே நகர்த்துவார்கள். இவ்வேளை சமூக சிந்தனையும், அபிவிருத்தி வேட்கையும் இருந்தால் இந்த சந்தையை தற்போதுள்ள பிரதேச செயகம் அமைந்துள்ள இடத்தில் அமைத்துவிட்டு பிரதேச செயலகத்தை பாவங்காய் வீதியில் நிரப்பட்டு வருகின்ற ஓரிடத்தில் அமைக்கின்ற ஒரு செயற்பாட்டை முன்வைத்து நகர்த்துகின்ற போது அது அனைவருக்கும் சாதகமாக அமையும்.

சந்தை என்பது மக்கள் ஒன்று கூடுகின்ற ஒரு இடத்தில்தான் அமையவேண்டும். அதிலும் பிரதான வீதிக்கருகில் அமைந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும். எனவே, அரசியல் அதிகாரம் இரு தரத்தாரிடமும் உள்ளது. இந்த ஊரின் நலனில் அக்கரை கொண்டு உழைக்கின்றவர்களாக இருப்பார்களானால் இந்த முயற்சி ஒரு சிறிய விடயமேயாகும். கடலை மூடி, கடலைத்தோண்டி கப்பல் துறைமுகம் கட்டுகின்ற அரசின் செயற்பாடுகளுக்கும், இன்றைய அரசின் பரந்தளவிலான அபிவிருத்திக்கு வித்திடும் எமது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்து உரிய நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு இருதரத்தாரும் உதவிசெய்வீர்களானால் அதுவே நீங்கள் பிறந்த மண்ணுக்கு செய்கின்ற மிகப் பெரிய அத்திவாரமாகும்.

இதைவிட்டுவிட்டு தனக்குரிய சாதக பாதகங்களை மறைத்து ஒற்றுமையான சமூதாயத்தைக் கட்டியெழுப்ப அரசியலால் பிளபுபட்டு வெறுமனே சண்டை சச்சரவுகள் என்றிருக்காமல் அரசியலின் ஊடாக ஒன்றுபட்ட அபிவிருத்திக்கு தங்களை ஈடுபடுத்துமாறு இப்பிரதேச மக்கள் சார்பாக வேண்டுகின்றோம். ஒற்றுமை ஓங்குகின்றபோது நிச்சயம் வெற்றிகிட்டும். இரு கை ஒன்று சேர்கின்றபோது சத்தம் வருமல்லவா?

0 comments:

Post a Comment