"நிச்சயமாக மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட வீடுகளில் முதல் வீடானது மக்காவிலுள்ள வீடாகும்" (அல்-குர்ஆன் 3.96) இவ்வாறு இறைவனால் பரிந்துரைக்கப்பட்ட வீட்டை தரிசிப்பதற்காக உலக முஸ்லிம்கள் வருடம்தோறும் புனித யாத்திரை மேற்கொண்டு ஹஜ்ஜை நிறைவேற்றி வருகின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புனித ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு அறபா வெளியில் செய்த போதனை உலகப் புகழ் பெற்றது. அப்போது சுமார் 1,24,000க்கும் மேற்பட்ட நாயகத் தோழர்களான சஹாபாக்கள் இவ்வுரையை செவிமடுத்தன் பிற்பாடு உலகமெல்லாம் இஸ்லாத்தை கொண்டுசெல்வதற்கு இவ்வுரை மிகவும் உந்துசக்தியாக இருந்தது.
ஹஜ்ஜின்போது பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதன்மூலமாக தியாகத்தின் உயர் ஈமானிய வெளிப்பாடு உணர்த்தப்படுகின்றது. உலகில் அமைக்கப்பட்ட முதலாவது வணக்கஸ்தலம் கஃபாவாகும். இது ஆதம் (அலை) அவர்களுக்கு முன்னமே மலக்குகளால் கட்டப்பட்டதாகும். ஒவ்வொரு நபிமார்களும் இங்கு வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டே வந்துள்ளனர். இருப்பினும் ஹஜ்ஜின் போது மிகவும் நினைவுகூறப்படுகின்ற ஒரு நபி ஹஸரத் இப்றாகீம் (அலை)அவர்களாகும். இன்னாரது தியாகங்களுக்கு செயல்வடிவமாக கருதப்படுகின்ற ஒரு வணக்கமுறைதான் இந்த ஹஜ் திருநாள் ஆகும்.
நீண்டகாலமாக பிள்ளைப்பாக்கியம் இல்லாது ஏங்கித்தவித்தபோது இஸ்மாயில் (அலை) பிறந்தார்கள். அவர்கள் அடைந்த மகிழ்வுக்கு அளவேயில்லை. அந்த சந்தோசம் அதிகநாள் நீடிக்கவில்லை. அல்லாஹ்வின் கட்டளை வந்தது. நபி இப்றாகீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தார்கள். சொந்தம், பந்தம், பாசம் போன்ற அனைத்தையும் இழந்து மக்கா நகர்நோக்கிய பயணத்தில் தன்அன்புக்குழந்தை மற்றும் மனைவியையும் தன்னந்தனியே யாருமற்ற மக்காவுக்கருகில் விட்டுவிட்டுப் போகிறார்கள். அங்கேதான் அன்னாரது ஈமான் முன்னிலை வகிக்கிறது. நினைத்துப்பாருங்கள் எந்;தவொரு மனிதனும் இவ்வாறு செய்வானா? அது எம்மையெல்லாம் படைத்தவனின் கட்டளை உடனே நிறைவேற்றுகிறார்கள்.
அப்போது வருகின்ற வழியில் இறைவனிடம் துஆ செய்கிறார். "எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை மிக்க கண்ணியம் நிறைந்த உன்வீட்டின் அருகில் விட்டுவிட்டேன். வெறும் பாலைவனமும், எவ்வித நீரும் அற்ற அந்த இடத்தில் உன்னைத் தொழுவதற்காகவே அங்கு வசிக்கச் செய்துள்ளேன். இறைவா! மனிதர்களில் ஒரு தொகையினரின் இதயங்கள் அவர்களை நோக்கும்படி நீ செய்வாயாக! (பற்பல) கனி வர்க்களையும் நீ அவர்களுக்கு ஆகாரமாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் (உனக்கு) நன்றி செலுத்துவார்கள்" (14.37) குர்ஆன் வசனம் சான்று பகிர்கிறது. இவ்வாறான தியாகம் வெறும் கற்பனையல்ல. அந்தத் தியாகத்தின் பலன் இன்று ஹஜ்ஜின் போது நிறைவுகூறப்படுகிறது.
அனல் கக்கும் வெயில் உணவுமின்றி, நீருமின்றி அங்கலாய்கின்றபோது அங்கும் இங்கும் பார்த்திவிட்டு சபா, மர்வா மலைக்குன்றுகளுக்கிடையில் ஓடுகிறார்கள். எங்காவது நீர் தெரிகிறதா என்று பார்க்கிறார்கள். தெரியவில்லை. இறைவனின் நாட்டம் அவர்கள் தேடியது தன் மைந்தன் இஸ்மாயில் (அலை) அவர்களின் காலடியில் நீர் ஊற்றெடுக்கிறது. ஸம்-ஸம் எனக்கூறி தன்கைகளால் அணைகட்டி பாதுகாத்தார்கள். வற்றாத நீர்ஊற்றாக ஸம்-ஸம் நீர் காணப்படுகிறது. இறைவனிடம் கேட்ட துஆ நிறைவேறுகிறது அல்லவா. ஹஜ்ஜின் போது இந்தத்தியாகம் செயற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு தாகத்தின்போது சபா, மர்வா மலைகளுக்கிடையில் ஓடியதை நினைவுகூறும் வகையில் ஹாஜிகள் ஏழுதடவை தொங்கோட்டம் ஓடுகிறார்கள். அந்த தியாகத்தை நினைவிற் கொண்டு வருவதற்காக. இவ்வாறு புனித ஹஜ்ஜின்போது செய்யப்படுகின்ற மற்றொரு முக்கிய கிரியையான உழ்ஹியா கொடுப்பதாகும். இதுவும் நபி இப்றாகீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி தன் அருமை மகனை பலியிடுவதற்காக முயற்சிக்கிறார்கள். கத்தி அறுக்கவில்லை. கத்திக்கு சக்தியில்லை. சக்தியள்ளவன் அல்லாஹ் என்கிற உண்மை நிருபிக்கப்படுகிறது. அங்கே அல்லாஹ் ஆட்டைகொடுத்து அதனை அறுத்துப் பலியிடும்படி கட்டளையிடுகின்றான்.
மேலும், அல்லாஹ்வின் கட்டளை கஃபத்துல்லாஹ்வை கட்டும்படி கூறப்படுகிறது. இப்பறாகீம் அலைஹிஸ்ஸலாம் தனக்குதவும்படி தனது அருமை மைந்தர் இஸ்மாயில் (அலை) அவர்களையும் அழைக்கின்றார்கள். இருவருமாக சேர்ந்து பணியை முடிவுற்றதன் பின்னர் இறைவனிடம் இவ்வாறு துஆ கேட்கிறார்கள். "எனது இறைவா! இந்த மக்காவை அபயமளிக்கும் ஒரு இடமாகவும் இங்கு வசிப்போரில் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசம் கொள்கின்றார்களோ அவர்களுக்கு ஆகாரமாக பலவகை கனிகளையும் அளித்துவா" (2:126) எனும் குர்ஆன் வசனம் எடுத்தியம்புகிறது. இன்று செல்வச் செழிப்புமிக்க நாடாக இந்தப் புன்னியஸ்தலம் உருவாகுவதற்கு அன்று இவர்கள் செய்த தியாம் கொஞ்சமா என்ன?
உண்மையில் இவ்வாறான உயர் தியாகத்தின் வெளிப்பாடுகளுக்கு உறுதுணையாக ஒரு பெண்ணும் இருந்து வந்துள்ளார். ஆனால் இன்றைய சமுதாயத்தில் பெண்களின் நிலையைப்பற்றி நாம் கவலைப்படுமளவுக்கு அவர்களின் நடத்தைகள் மிகவும் கவலைக்குரியதாக காணப்படுகிறது. அன்று அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் தனது கணவரின் கட்டளையை கீழ்படியாது விட்டிருந்தால் ஹஜ்ஜின் செயற்பாடுகள் நடைபெற்றிருக்குமா? என்ன? இறைவனின் கட்டளையை சிரம் மேற்கொண்டு வாழ்ந்ததனால்தான் உலகம் அழியும்வரை மக்கள் நினைவில் கொண்டு நல்ல அமல்களை செய்வதற்கு ஹஜ் கடமை தியாகத்தின் மீதான உயர் அந்தஸ்தை தொட்டுநிற்கிறது.
எனவே, அரும் பெரும் பொக்கிசங்களை நினைவுறுத்துகின்ற புனித ஹஜ்ஜை நிறைவேற்றிய ஹாஜிகள் பல்வேறு தியாகங்களையும், பொறுமைகளையும் சுமந்தவர்களாகவும், பாவச்சுமைகளை அகற்றியவர்களாகவும். அன்று பிறந்த பாலகன் போல் இறைவனின் வீட்டிலிருந்து அருட்கொடைகளை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த தியாகத்தின் வழியில் நாமும் இணைந்து இத்திருநாளை வேறு கேளிக்கைள் அற்றநிலையிலிருந்து புனித தியாகத்தின் வரலாற்றை நினைவுறுத்தல் வேண்டும். அந்த அடிப்படையில் வசதியும், வாய்ப்பும் உள்ளோர்கள் மக்கா சென்று புனித கடமையை நிறைவேற்றுவதற்கு சித்தமாய் இருக்கவேண்டும். இவர்களது தியாகங்களை நமது வாழ்விலும் சீரமைத்துக் கொள்வதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்
எஸ்.எல். மன்சூர் (B.Ed),
அட்டாளைச்சேனை.





0 comments:
Post a Comment