Tuesday, November 08, 2011

குத்துச்சண்டை வீரர் பிரேசியர் காலமானார்


பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியை வெற்றிக்கொண்ட முதல் வீரரான ஜோ பிரேசியர் தனது 67 ஆவது வயதில் காலமாகியுள்ளார். ஈரல் புற்று நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இருபதாம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான குத்துச் சண்டைப் போட்டி என்று வர்ணிக்கப்படும் இந்தப் போட்டி 15 சுற்றுகள் இடம்பெற்றன. மிகவும் கடுமையாகவும், பரபப்பாகவும் நியூயார்க்கின் மாடிசன் சதுக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஜோ பிரேசியர் முகமது அலியை வீழ்த்தி உலக ஹெவி வெயிட் குத்துச் சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றார்.

அந்தப் போட்டியை ஆச்சரியப்படும் வகையில் உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்கள் பார்த்தனர். ஸ்மோக்கிங் ஜோ என்று அழைக்கப்பட்ட பிரேசியர் மிக ஆக்ரோஷமானவராகவும், கடுமையான போட்டியாளராகவும் அறியப்பட்டார்.
1970 முதல் 1973ஆம் ஆண்டுவரை உலக ஹெவி வெயிட் குத்துச் சண்டை சாம்பியனாக திகழ்ந்த ஜோ பிரேசியரின் குத்துக்கள் ஆக்ரோஷத்துடன் கூடியதாக இருந்தது. மூன்றாண்டுகள் உலக அரங்கில் கோலோச்சிய பிரேசியரை வெற்றி கொண்டு அவரிடமிருந்து பட்டத்தை பெற்றார் ஜார்ஜ் போர்மேன்.


ஆனால், முகமது அலியுடன் அவர் போட்டியிட்ட மூன்று போட்டிகளுக்காகவே பிரேசியர் மிகவும் அறியப்பட்டவராக இருந்தார். "திரில்லர் இன் மனிலா" என்று அழைக்கப்படும் கடைசி போட்டி உட்பட இரண்டில் அவர் தோல்வியடைந்தார். அவரை முகமது அலி அடிக்கடி ஏளனம் செய்து வந்தது அவர்களிடையே ஒரு கசப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த கசப்புணர்வை மறந்து முகமது அலியை மன்னிக்க அவர் மிகவும் சிரமப்பட்டார். ஒரு பேட்டியில் இந்த கசப்புணர்வு குறித்து அவர் கூறியும் இருந்தார்.

"முகமது அலி பயந்ததாலேயே என்னைப் பற்றி இப்படியான கருத்துக்களை அவர் கூறிவந்தார். அவரை எதிர்கொள்ள நான் தயாராக இருந்தேன் என்பது அவருக்குத் தெரியும். என்னைப் பற்றி என்ன சொன்னாலும் அது தவறு என்பதை நான் நிரூபித்துக் காட்டுவேன் என்பதும் அவருக்குத் தெரியும்".

குத்துச் சண்டையின் பொற்காலத்தில் ஜோவுக்கு இடமுண்டு. ஜோ பிரேசியர் மிகுந்த மரியாதையுடனும், பாராட்டத்தகுந்த வகையிலும் நினைவில் கொள்ளப்படுவார் என அவரது மரணம் குறித்து கேள்விப்பட்டவுடன் வெளியிட்ட செய்தியில் முகமது அலி தெரிவித்துள்ளார்.
மூன்றாண்டுகள் உலகச் சாம்பியனாக திகழ்ந்த ஜோ ஃபிரேசியர் 1976 ஆம் ஆண்டு குத்துச் சண்டைப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

தனது குத்துச் சண்டை வாழ்நாளில் முகமது அலிக்கு அடுத்த இடத்திலேயே அவர் இருந்தாலும், ஹெவி வெயிட் குத்துச் சண்டைப் போட்டியின் பொற்காலத்தில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக ஜோ பிரேசியர் இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

0 comments:

Post a Comment