அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகரிலுள்ள மேட்டுநில பயிர்ச்செய்கை நிலங்களில் இராணுவத்தினர் அத்துமீறி இராணுவ முகாம்களை அமைத்துள்ளதை மக்கள் கண்டித்து அண்மையில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்தப் பிரச்சினையை நேரில் சென்று பார்வையிட்டார். அஷ்ரப் நகர் மக்களை நினைத்தது போன்று இருப்பிடங்களை விட்டு வெளியேற்ற முடியாது. விரைவில் இதற்கான தீர்வு பெற்றுத் தரப்படும் எனவும் அறிவித்தார்.
ஆனால், மக்களுக்குச் சொந்தமான காணிகளில் இராணுவ முகாம்களை அமைத்துவிட்டு இருப்பிடங்களை விட்டுச் செல்லுமாறு இராணுவத்தினர் மக்களுக்கு கூறிவருகின்றனர். முன்னர் அரச காணியாக இருந்த இவ்விடத்தில் அஷ்ரப் நகர் மக்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்களை வெளியேற்றுமுகமாக 35 பேருக்கு எதிராக வனபரிலான சபையினர் வழக்குத் தொடுத்திருந்தனர். ஆனால், இறுதித் தீர்ப்புகள் குடியிருப்பு மக்களுக்கு சாதகமாக அமைந்தன.
நீதிமன்றத் தீர்ப்பினை மதிக்காது வனபரிபாலன சபையினர் மீண்டும் மக்களை வெளியேறுமாறு கூறிவருகின்றனர். இதனால் அஷ்ரப் நகர் மக்களின் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு விஜயம் செய்த ரவூப் ஹக்கீம் மக்களை தற்காலிகமாக மேட்டுநிலங்களில் பயிர்செய்வதை நிறுத்துமாறு கோரியுள்ளார். இந்த தடை இறுதியில் நிரந்தரத் தடையாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
திடீரென அப்பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைப்பதற்கான தேவைதான் என்ன? எப்போது இம்மக்களுக்கு தீர்வு கிட்டும்...?

0 comments:
Post a Comment