Friday, December 16, 2011

விஷச் சாராயத்தால் இந்தியாவில் 143 பேர் பலி


இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் விஷச் சாராயம் அருந்திய 143 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மருத்துவமனையில் பலர் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சங்களும் எழுந்துள்ளன. மாநிலத் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தெற்கு 24 பர்காணா மாவட்டத்திலுள்ள 12 கிராமங்களிலுள்ள மக்கள் இந்த விஷச் சாராயத்தை பருகியுள்ளனர்.

பலர் பலியாக காரணமாக இருந்த விஷச் சாரயத்தை விற்ற ஏழு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இறப்புகள் குறித்த தகவல் வெளியானவுடன் அப்பகுதியில் இருக்கும் மக்கள் வேறு பல சாரயக் கடைகளையும், சாராயம் காய்ச்சும் இடங்களையும் தாக்கி அழித்தனர். இந்தச் சம்பவம் குறித்த ஒரு குற்ற விசாரணைகு மேற்குவங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

போதையைக் கூட்ட சாராயத்தில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பல வேதிப் பொருட்கள் இந்த விஷச் சாராயத்தில் கலக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாநிலத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகிறார்.

விஷச் சாராயம் அருந்திய பலர், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று பயந்து தங்கள் வீடுகளிலேயே இருந்ததால், இறப்புகள் அதிகரித்துள்ளன. இன்னும் சிலர் மருத்துவமனைக்கு தாமதமாக வந்ததால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று அரசு மருத்துவர் ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

மாநிலத்தின் கோச்சாரன் பகுதியில் சட்டவிரோதமாக பல சாராயம் காய்ச்சும் ஆலைகள் இருப்பதாகவும், அவர்கள் எவ்வித அச்சமுமின்றி, உள்ளூர் அதிகாரிகளின் ஆதரவில் செயல்படுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர் என்று கொல்கத்தாவிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இந்தியாவில் விஷச் சாராயத்தால் பலர் உயிரிழப்பது அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் தமிழ்நாடு, உத்திரபிரதேசம் மற்றும் குஜராத்தில் இதனால் பலர் பலியாயினர். கடந்த வாரம்தான் குஜராத் மாநில அரசு சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் ஒரு சட்டத்தை இயற்றியது.

இந்தியாவில் குஜராத், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் மது விற்பனை சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment