Thursday, December 15, 2011

தனியார் பஸ் கட்டண அதிகரிப்புக்கு பதிலாக மானியங்களை வழங்க யோசனை


தனியார் பஸ் கட்டண அதிகரிப்புக்கு பதிலாக பஸ் உரிமையாளர்களுக்கு பல்வேறு மானியங்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம முன்வைத்த யோசனைக்கு அனேகமான பஸ் உரிமையாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

கெமுனு விஜேரட்ணவின் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினைத் தவிர்ந்த ஏனைய பஸ் உரிமையாளர்களது சங்கங்களே இணக்கம் தெரிவித்திருப்பதுடன் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நன்மை கருதி தாங்கள் எவ்வித பணிப்பகிஷ்கரிப்பினையும் முன்னெடுக்கப் போவதில்லையென தீர்மானித்திருப்பதாகவும் அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன தெரிவித்தார். தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவில் நேற்றுக்காலை அதன் அதிகாரிகளுக்கும் பஸ் உரிமையாளர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டது.

டயர்கள் மற்றும் வரிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பஸ் உரிமையாளர்களுக்கு மானியங்களைப் பெற்றுக்கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை ஒருமாத காலத்திற்குள் செய்து தருவதாக நாம் வாக்குறுதியளித்திருந்த போதும் அதற்கான அங்கீகாரம் எமக்கு அமைச்சரவையிடமிருந்து கிடைக்கவில்லை. இந்நிலையில் எமக்கு திடீரென அதிகரிக்கப்பட்ட டீசல் விலைக்கு ஏற்ப பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது. இதற்கு மாறாக போக்குவரத்து ஆணைக்குழுவினூடாக பல மானியங்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளோமெனக் கூறினார்.

ஆனாலும் கெமுனு தலைமையிலான சங்கம் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் அதற்கு முகம்கொடுக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்தார். வாக்குறுதி மறுக்கப்பட்ட காரணத்தினால் முன்னறிவித்தலின்றி திடீரென பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தாம் தயாராகியிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment