Thursday, December 29, 2011

3,687 மாணவர்கள் 3 பாடங்களிலும் 'A' ; 1,42,000 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி


(பஹமுன அஸாம்) 
இம்முறை வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 3687 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் A தரத்தைப் பெற்றுள்ளார்கள். அத்தோடு 23,233 மாணவர்கள் 3 பாடங்களிளும் சித்தியடையவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இம்முறை 60 வீதமானோர் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இதன்படி 1,42,000 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.

உயிரியல் விஞ்ஞானத்தில் மூன்று பாடங்களுக்கும் A தர சித்தி பெற்றவர்கள் 422 பேரும், கணிதம், பொறியியல் துறையில் மூன்று A தர சித்திபெற்றவர்கள் 317 பேரும், வர்த்தகத்துறையில் 800 பேரும், கலைத்துறையில் 2146 பேரும் மூன்று பாடங்களில் A தர சித்தி பெற்றுள்ளனர்.

உயிரியல் விஞ்ஞானத் துறையில் 20,862 பேரும், கணிதம், பொறியியல் துறையில் 13,297 பேரும், வர்த்தகத்துறையில் 30,893 பேரும், கலைத்துறையில் 75,734 பேரும் சித்தியடைந்துள்ளனர் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

இம்முறை பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி ஆராய விசேட குழு ஒன்று நியமிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக உபவேந்தர்கள் மூவர் மற்றும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒருவரைக் கொண்டதாக இவ்விசேட குழு நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன  தெரிவித்தார். க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளிவந்ததையடுத்து மாவட்ட மட்ட தர நிலைப்படுத்தலில் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இதனால் பெறுபேறுகள் குறித்து நாடு முழுவதும் சர்ச்சைகள் எழுந்தன.  

க.பொ.த பெறுபேறுகளில் குளறுபடிகள் ஏற்படுவதற்கு காரணமாகவிருந்தவர்களை கண்டறியவும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பது குறித்தும் மேற்படி நிபுணத்துவ குழு பரிந்துரை செய்யும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.

பரீட்சைகள் திணைக்கத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்த்தன, அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க, உட்பட பலரும் கலந்து கொண்டனர். இச்செய்தியார் மாநாட்டிற்கு வருவதற்கு முன் ஜனாதிபதியைச் சந்தித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி இவ்விசேட குழு நியமிப்பது குறித்து விளக்கமளித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

0 comments:

Post a Comment