Monday, December 05, 2011

முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான வயது


(எஸ்.எம்.அறூஸ்) 
முஸ்லிம் காங்கிரஸின் வயதும் வருடங்களும் பற்றிய உண்மையை தெளிவுபடுத்துகிறார் ஸ்தாபகச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர். 

கடந்தவாரம் வெளியான பத்திரிகைகளில் முஸ்லிம் காங்கிரஸின் வெள்ளி விழாவும் அதன் வயதும் பற்றிய சந்தேகங்களுக்கும் வினாக்களுக்குமான செய்தி தொடர்பாக அக்கட்சியின் ஸ்தாபக பொதுச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் துருவத்துக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையின் விபரம் வருமாறு.

01. முஸ்லிம் காங்கிரஸ் முதன் முதலாக காத்தான்குடியில் 21.09.1980ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. எனவே இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு சுமார் 31 வருடங்களை கடந்து செல்கின்றது. அதன் வயது தற்போது 30 என்பதும் அது ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1981ஆம் ஆண்டு என்பதும் பிழை. (Founded / Formed)

02. கொழும்பு தெமட்டகொட பாஷாவிலாவில் அதன் 6ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் 29.11.1986ஆம் ஆண்டு நடைபெற்றபோது அக்கூட்டத்தில் வைத்துத்தான் இது அரசியல் கட்சியாக பிரகடனம் செய்யப்பட்டது (Declared / Declaration) என ஏற்றுக் கொள்ளப்படும்போது இதன் ஆரம்ப ஆண்டு 1980 தான் என்பது உறுதிப்படுத்தப் படுகின்றதல்லவா...? எனவே, இவ்வருடம் 25 ஆவது வருட வெள்ளி விழாவை கொண்டாடுவதற்கு கடந்த 29.11.2011, கொழும்பில் புதிய நகர மண்டபத்தில் கூடிய கூட்டம் சரியான கணக்கெடுப்பின் பிரகாரமே நடத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. 

03. இக்கட்சி இந்நாட்டின் அப்போதைய தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு மரச்சின்னமும் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப்பட்ட திகதி 11.02.1988ஆம் ஆண்டு என்பது உண்மையே (Recognized and Approved Registered Political Party).

04. அதன் பின்னர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு வட, கிழக்கும், வடகிழக்குக்கு அப்பாலும் சுமார் 30 உறுப்பினர்களை பெற்று முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிவாகை சூடியது இக்கட்சியின் சரித்திரத்தின் முதற்படியாகும். அதற்கான நியமனப்பத்திரத்தில் ''பிஸ்மில்'' சொல்லி அதற்கான எமது கையொப்பத்தை இட்டு ஆரம்பித்ததனால் அன்று முதல் இன்று வரையும் இந்த மரத்தின் ஆணிவேர் இந்நாட்டில் நாலாபகுதிகளிலும் அன்றும் இன்றும் என்றும் நின்று நிலைத்துக் கொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.


அத்துடன் இன்னுமொரு முக்கிய விடயம் சம்பந்தமாகவும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமும், அவசரமும் எழுந்துள்ளது. இன்று பலர் பத்திரிகையிலும் எழுவது போலும் சிலர் மேடைகளில் பேசுவது போலும் இம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு சமூகசேவை சங்கமாகவோ அல்லது நல்லினக்க மன்றமாகவோ ஊர் வேலைகளை கவனிக்கும் நலன்புரி அமைப்பாகவோ நிச்சியமாக அது ஆரம்பிக்கப்படவில்லை. மாறாக முஸ்லிம்களுக்கான முகவரியை அரசியல் ரீதியாக அடையாளப்படுத்துவதற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள பலதரப்பட்ட அரசியல் வாதிகள் சிந்தனையாளர்களைக் கொண்ட புத்திஜீவிகளை உள்ளடக்கிய அக்கூட்டத்தில் பல வாதப் பிரதிவாதங்களுக்கும் காரசாரமான விமர்சனங்களுக்கும் மத்தியில் இக்கட்சி அன்று அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. சிலர் இக்கட்சி தேவையில்லையென்றும் வாதித்தார்கள். இறுதியில் எமக்கு சலுகைகள் தேவையில்லையென்றும் உரிமைகள் வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வு 21.09.1980ஆம் ஆண்டுதான் காத்தான்குடி முன்னாள் பட்டினசபை தலைவர் ஏ.அகமது லெவ்வை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இப்பெயர் சூட்டப்பட்டது. பல அரசியல் கட்சிகளிலிருந்து விரக்தியும் தோல்வியும் கண்ட மறைந்த மாமனிதர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் கட்சியின் அவசியத்தை உணர்ந்துதான் இக்கட்சி அன்று தோற்றுவிக்கப்பட்டதையன்றி வெறும் சமூகசேவை சங்கமாக அமைக்கப்படவில்லை. அதற்கான தேவையும், அவசியமும் அவசரமும் எங்களுக்கு அப்போது எழவில்லை.


உலக நாடுகளில் உள்ள சில அரசியல் கட்சிகளின் பெயர்களில் இந்த காங்கிரஸ் என்ற நாமம் பொதிந்துள்ளமையை மையமாகக் கொண்டு அதற்கான விளக்கங்களை ஆங்கில அகராதிகளை புரட்டிப்பார்த்து அதன் சரியான கருத்துக்களை கண்டறிந்த பின்புதான் முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரை இக்கட்சிக்கு நாங்கள் அன்று சூட்டிவைத்தோம். இதுதான் நிதர்சனமான உண்மைகள்.  

எனவே, இது சம்பந்தப்பட்ட சகல விடயங்களிலும் அதற்கான ஆதாரமாக ஆவணங்களும் பத்திரிகைச் செய்திகளும் தலைவரின் கையொப்பமிட்ட கடிதத் தலைப்புகளும் ஏராளமான புகைப்படங்களும் அன்று முதல் இன்று வரையும் என்னிடம்தான் உண்டு என்று என்னுகிறேன். ஏனெனில் இக்கட்சி சம்பந்தப்பட்ட சகல ஆரம்ப விடயங்களிலும் அதனை பதிவு செய்வதற்காக அப்போதைய தேர்தல் ஆணையாளரை சந்தித்து இக்கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் 1986ஆம் ஆண்டுக்கு முன்பு கடந்து வந்த 06 ஆண்டுகளுக்கான விடுபட்ட மொத்த கூட்டக்குறிப்புகளை சரி செய்து ஒழுங்குபடுத்தி இரவு பகலாக எழுதி அதனை சமர்ப்பித்து இக்கட்சியை பதிவு செய்தோம்.

பல வகையான கஷ்ட, நஷ்டங்களுக்கு முகங்கொடுத்து மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களுடன் இணைந்து இன்று வரையும் செயல்பட்டு வந்த ஒருவன் என்பதனால் இதனை இன்று தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு எப்போதும் உண்டு என்று எண்ணுகிறேன். இந்த அரசியல் வரலாறுகள் எமது எதிர்கால சந்ததிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவும் விரும்புகிறேன். காங்கிரஸ் கடந்து வந்த கஷ்டமான காலகட்டங்களின் வரலாற்று பின்னணிகளை இன்றுவரை எம்மவர்கள் எத்தனைபேர் எங்களைப்பற்றி எவ்வளவு தூரம் விளங்கி வைத்துள்ளார்கள் என்பது என்னவோ எனக்கு இன்னும் சந்தேகம்தான்.

0 comments:

Post a Comment