Saturday, December 31, 2011

புதுவருட வாழ்த்துச் செய்தி - பிரதமர் தி.மு. ஜயரட்ண


இலங்கையானது முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தி.மு. ஜயரட்ண தெரிவித்துள்ளார். அன்பினதும், சகவாழ்வினதும் செழிப்பினதும் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் 2012 புத்தாண்டினை முன்னிட்டு ஆசிச் செய்தியினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

தனித்தனி நபர்களாகவும், முழுநாட்டு மக்களாகவும் முழுமையான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குள் பிரவேசித்துள்ள இத்தருணத்தில் கடந்தகால தவறுகள் மற்றும் பலவீனங்கள் சம்பந்தமாக மீட்டிப் பார்ப்பதற்கு மிகச் சிறந்த தினம் இதுவாகும் என்பது எனது கருத்தாகும். இன, மத, குல, கட்சி ரீதியாகப் பிரிந்திருப்பதனால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி கடந்த காலம் எமக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது.

இலங்கையானது அபிவிருத்தியடைந்துவரும் நாடு என உலகப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யுகத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவரல் வேண்டும். எந்தவொரு வெளிநாட்டினதும் தலையீடு இன்றி பயங்கரமான, கொலைக்காரப் பயங்கரவாதத்தினை, தனது சுய சக்தியினால் தோற்கடித்த உலகிலுள்ள சிரேஷ்ட மக்கள் தலைவன் மற்றும் சிரேஷ்ட நாட்டவர் இலங்கையர் என்பதில் விவாதத்திற்கு இடமில்லை. அதற்கான உடற்பலமும், மனப்பலமும் எம்மிடம் உண்டு. அவ்வாறான இலங்கையன் என்ற பெருமையினை- அபிமானத்துடன் எமது தலைமீது சூடிக் கொள்ள வேண்மாயின், எம் முன்னே இருக்கும் அபிவிருத்திப் போராட்டத்தினையும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வெற்றிபெறல் வேண்டும்.

உதமாகியுள்ள இந்த 2012 புத்தாண்டில் உங்கள் ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருக்கும் அதுபோலவே, வீரத்துடனும் தன்மானத்துடனும் அபிவிருத்தியடைந்துவரும் நாடு என்ற வகையில், இந்த நாட்டின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்திற்கும் ஒரு கனவு உண்டு. நீங்கள், உங்களுடைய குடும்பம் சம்பந்தமாகக் காணும் கனவுகளை நனவாக்கிக் கொள்ள வேண்டுமாயின், முதலில் இந்த நாடு சம்பந்தமாக நாம் அனைவரும் காணும் பொதுக் கனவினை நனவாக்கிக் கொள்ள முயலவேண்டும்.

இந்தப் புத்தாண்டின் முதல் எண்ணத்தினை அந்தக் கனவிற்காக ஒதுக்குவோம். இலங்கையானது, முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் தினமானது எம் அனைவரினதும் கனவு நனவாகும் தினமாகும். அந்தத் தினமானது, மிகத் தொலைவில் இல்லை என்ற உறுதிமொழியினை இத்தருணத்தில் உங்கள் அனைவருக்கும் வழங்க நான் விரும்புகின்றேன். அப்போது உண்மையாகவே ஆசியாவின் புதுமையின் உரிமையாளன் உங்களைத் தவிர வேறெவரும் இல்லை. சகலவிதமான வாதங்களையும், பேதங்களையும் பின்தள்ளி விட்டு அந்தக் கனவினை நனவாக்க கைகோர்த்துச் செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment