
இலங்கையின் மலையகத்தில் ஹட்டன் பகுதியில் உள்ள நான்கு தேயிலைத் தோட்டங்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் டிசம்பர் 13ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வெலிஓயா, புதுக்காடு, கண்டுகலா மற்றும் ஆக்ரோயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 2000 இற்கும் அதிகமான தொழிலாளர்களே தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பாகச் செய்துகொள்ளப்பட்டிருக்கும் கூட்டு ஒப்பந்தத்துக்கு முரணாக, அதில் கூறப்பட்டிருக்கும் அளவைவிட 3 கிலோ அதிகமாக தேயிலை கொழுந்து பறிக்கவேண்டும் என்று தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் வற்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே தாம் இந்த போராட்டத்தை நடத்துவதாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.
அத்துடன் தமது பிரச்சினைகள் தொடர்பாக தோட்ட முகாமையாளருடன் தாம் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டபோது, தோட்டத்துக்கு இராணுவம் அழைக்கப்பட்டு தொழிலாளர் தலைவர்கள் மிரட்டப்பட்டதாகவும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இவை போன்ற சில கோரிக்கைகளை முன்வைத்தே தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்துவதாகவும், கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற சில தொழிற்சங்கங்கள் தமது போராட்டத்தை கண்டுகொள்ளாது இருப்பதாகவும் அவர்களில் சிலர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து அந்த தோட்டத்தைச் சேர்ந்தவரும், போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் சார்பில் ஊடகங்களுக்கு தொடர்புகொள்பவருமான, மனித உரிமைகள் இல்லத்தைச் சேர்ந்த இராசலிங்கம் ஜெயராஜ் என்பவர் கூறுகையில், இதுவரை இந்த விவகாரம் குறித்து மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகவும், அவை குறித்த முடிவுகள் வந்த பின்னரேயே தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தொழிலாளர்கள் முடிவெடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment