Tuesday, December 13, 2011

தொடரும் பிளாஸ்டிக் கூடை பிரச்சினை – ஓர் ஆய்வு


(எஸ்.எல். மன்சூர்) 
மகிந்த சிந்தனையின் கருவூலம் ஆச்சரியமிக்க இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு அமைய நாட்டின் சகல துறைகளும் அபிவிருத்தி கண்டுவரும் இவ்வேளையில் பிளாஸ்டிக்கூடை விவகாரம் அரசு பாரிய தலையிடியை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. அரசின் அபிவிருத்திப் பாதையில் ஒவ்வொரு துறைகளும் நவீனத்துவமிக்கதான அமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நினைப்பதில் ஒன்றும் புதிய விடயமல்ல. அண்மையில்கூட உயர்கல்வி அமைச்சரின் தனியார் பல்கலைக்கழ அமைவுக்கு பாரிய எதிர்ப்பலைகள் கிளம்பின. ஆனால், எந்த எதிர்ப்பு வந்தாலும் அமைத்தே தீருவேன் என உயர்கல்வி அமைச்சர் கூற, அவ்வாறு அமைத்தால் அதனை முழுமையாக எதிர்ப்போம் என்றனர் மாணவர்கள். இது வேறு பிரச்சினை.

இவ்வாறேதான் இன்று எழுந்துள்ள பிளாஸ்டிக் கூடை விவகாரம் என்றுகூட சொல்லலாம். உண்மையில் அரசின் கடந்தகால ஆய்வின் பிரகாரம் சுமார் 25 வீதம் தொடக்கம் 40 வீதம் வரை பைகளில் அல்லது சாக்குகளில் ஏற்றிச் செல்லும் மரக்கறி வகைகள், பழவகைகள் போன்றன பழுதடைவதாகவும் இது வருடமொன்றுக்கு சுமார் 20 மில்லியன் ரூபாவரை நஷ்டம் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கவும், ஒழுங்கான முறையில் அடுக்கப்பட்டு அவை பழுதடையா வண்ணம் வாடிக்கையாளரை சென்றடைவதற்கான திட்டத்தை வகுத்துத்தான் இந்த பிளாஸ்டிக் கூடை அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் அறிவித்திருந்தது அரசு. மேலும் அவ்வாறான கூடைகளை குறைந்த விலைக்கு வழங்கவும் முடிவாக்கிய நிலையில் தற்போது விவசாயிகளும், வியாபாரிகளும் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கான காரணம் யாது?

வியாபாரிகள் கூறும் காரணங்களாக அவை அதிக பாரம், அதிக செலவு, அதிக இடத்தைப் பிடிக்கிறது என்றெல்லாம் கூறும் வியாபாரிகள், இலகுவாக பைகளில் அடைக்கின்றபோது அதனை இலகுவாக ஏற்ற இறக்கவும், இடைவெளிவிடாமல் லொறிகளில் அடுக்கவும், அதிகமாக கொண்டுசெல்லவும் முடிகிறதாம். மேலும் இப்பைகள் சாக்குகளுக்கு பெரியளவில் விலையில்லை. பிளாஸ்டிக் கூடைகளை விலைகொடுத்து வாங்குகின்றபோது அவை மரக்கறி மற்றும் பழங்களின் விலைகளில் மாற்றத்தை சாதாரண பொதுமக்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காகவே வியாபாரிகளாகிய நாம் போராட்டம் நடாத்துகின்றோம் என்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர். கொழும்பு மெனிங் சந்தை, தம்புள்ளை, பண்டாரவளை போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்த வியாபாரிகள் இதனையே கூறுகின்றனர்.

யார் என்ன சொன்னாலும் சட்டம் சட்டம்தான் என்கிறார் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ. குறிப்பாக இந்த அமைச்சர் அவர்கள் ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவராக இருந்து ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பக்கம் மாறியவர். இவரது அதிரடி நடவடிக்கைகள் விவசாயிகளையும், வியாபாரிகளையும் தாக்கத்திற்குள்ளாக்கியுள்ளதா அல்லது வேண்டுமென்றே பிரச்சினையை உருவாக்க முற்படுகின்றார்களா என்பதும் கேள்விக்குறி. அமைச்சரின் மரக்கறி மற்றும் பழவகை பாதுகாப்புத் திட்டமானது உண்மையில் பொதுமக்களுக்கு பழுதடையாதவாறு கிடைக்க வகை செய்யும் திட்டமாகக் காணப்பட்டாலும் விவசாயிகளும், வியாபாரிகளும் கூறுகின்ற காரணங்களிலும் நியாயம் இல்லாமலும் இல்லை. 


பொதுவாக இவ்வாறான விடயங்களை அரசு மேற்கொள்கின்றபோது இதனுடன் சம்பந்தப்பட்ட அமைப்பு, நிறுவனம், நபர்களுடன் ஆய்ந்தறிந்து மேற்கொண்டிருக்க வேண்டும் என்கின்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவ்வாறு கலந்தாலோசனை செய்யும் அளவுக்கு விடயம் பெரிதாக ஒன்றுமில்லை என்றே கூறலாம். ஆனால் அமைச்சர் இதில் விடாப்பிடியாக இருக்க முயற்சிக்கவில்லை என்றே பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து மரக்கறி மற்றும் பழவகைகள் பிளாஸ்டிக் கூடைகளில் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என்கிற கட்டாயம் அமுலில் இருந்தாலும் விட்டுப்பிடிப்போம் என்று ஒன்பது மாதங்களுக்கும் மேலாக அமைச்சும் சட்டமும் இதனை சட்டப்படிக் கவனிக்காது வந்துள்ள நிலையில் கடந்த பதினோராம் திகதி நள்ளிரவிலிருந்து கட்டாயம் அமுல்படுத்தப்பட்டதுதான் தாமதம் வியாபாரிகள் வழமைபோன்று பொலிசார் எதையும் செய்யமாட்டார்கள் எம்மை விட்டுவிடுவார்கள் என்றெண்ணி லொறிகள் பொருளாதார மத்திய நிலையங்களையும், சந்தைகளையும் நோக்கிச் சென்றபோது நள்ளிரவு நேரத்திலிருந்தே லொறிகளும் அதனுடன் காணப்பட்ட மரக்கறி மற்றும் பழவகைகளும் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு உரிய சட்டம் பின்பற்றப்பட்டது. 

அதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமை  பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்காவும் மரக்கறி மற்றும் பழங்கள் லொறிகளில் ஏற்றிச் செல்கின்றபோது பிளாஸ்டிக் கூடைகளில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று அரசின் அறிவிப்பும், விவசாயிகள், வியாபாரிகளின் ஆர்ப்பாட்டம் போன்ற விடயங்களில் அரசு சரியான தீர்மானத்தை எடுக்க முன்வரவேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்தார். இவ்விடயத்திற்கு அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ பிளாஸ்டிக் திட்டம் எக்காரணம் கொண்டும் கைவிடப்போவதில்லை என்று அறிவித்துள்ள அதேவேளை சிறிய லேன்மாஸ்டர் மற்றும் முச்சக்கர வண்டிகளில் ஏற்றப்படுகின்ற மரக்கறி மற்றும் பழவகைகளுக்கு இந்த பிளாஸ்டிக் கூடைகள் அவசியம் இல்லை என்கிற வகையில் சற்று ஆறுதல் கூறினார். 

இருந்தாலும் இந்த பிளாஸ்டிக் கூடைப் பிரச்சினை விஸ்பரூபம் எடுத்தால் நஷ்டம் அடையப்போவது பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும்தான். ஏனெனில், மரக்கறிவகைகள் ஏற்றுவது தடைப்பட்டால் உற்பத்தி தடைப்படும். பொதுமக்களுக்கு மரக்கறி கிடைக்காது வியாபாரிகள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விலையைக் அதிகரிக்கப்பார்ப்பார்கள். எது எப்படியோ அமைச்சரும், வியாபாரிகளும், உற்பத்தியாளர்களும் ஒரே இடத்திலிருந்து பேசி இத்திட்டத்தினால் ஏற்படவிருக்கி;ன்ற பிரச்சினைகளை எடுத்துக்கூறி சரியான தீர்மானத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து மேற்கொள்ள வேண்டும். தற்போது ஆர்;ப்பாட்டங்களும், வீதி மறிப்புக்களும் ஏற்படுத்துவதால் கஷ்டம் மக்களுக்கே. மக்களுக்கு நன்மை செய்யப்போய் அதுவே வம்பில் முடிவடைந்தால் அதனை என்னவென்று சொல்லுவது. 

0 comments:

Post a Comment