Wednesday, December 21, 2011

பிரித்தாளப்படும் தென்கிழக்கு பிரயோக விஞ்ஞான பீடம்


பிரயோக விஞ்ஞான பீடத்தின் உருவாக்கம்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடமானது 1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓர் தனியான பீடமாகும். தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது ஒலுவில் வளாகத்தில் கட்டடப் பற்றாக்குறை நிலவிய காரணத்தினால் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எ.ச்.எம். அஷ்ரப் அவர்கள் சம்மாந்துறை பிரதேசத்தில் மிகக்குறுகிய நிலப்பரப்பில் அமைந்திருந்த  அரிசி ஆலைக்குச் சொந்தமான கட்டடத்தில் தற்காலிகமாக இப்பீடத்தை ஆரம்பித்ததுடன் இப்பிரயோக விஞ்ஞான பீடத்திற்காக பிரத்தியேகமாக நிரந்தர இடத்தினையும் ஒலுவில் வளாகத்தில் ஒதுக்கியிருந்தார். 

அபிவிருத்தித் திட்டங்களின் பின்னடைவும் அதற்கான காரணங்களும்
இப்பிரயோக விஞ்ஞான பீடத்தினை அதற்கென ஒலுவில் பிரதான வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு நிரந்தரமாக கொண்டு செல்வதற்கான பல்வேறுபட்ட முயற்சிகள் இதற்கு முன்னைய காலங்களில் பல்கலைக்கழக நிருவாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சில குறுகிய பிரதேச வாத நோக்கம் கொண்ட அரசியல் வாதிகளின் எதிர்ப்புகாரணமாக அம்முயற்சிகள் கைவிடப்பட்டன. அது மட்டுமன்றி இம்முயற்சியினை மேற்கொண்ட பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர். அதன் பின்னர் பிரயோக விஞ்ஞான பீடத்தை அதற்குரிய ஒலுவில் வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுவுவதற்கான முயற்சிகள் யாவும் திட்டமிட்டு முடக்கப்பட்டன.

ஒலுவில் வளாகத்திலுள்ள கலை, வர்த்தகம், அரபு பீடங்களில் பல்வேறுபட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளை அரசாங்கமும் ஏனைய நிறுவனங்களும் மேற்கொண்ட போதிலும் சம்மாந்துறையில் தனியாக ஒதுக்கப்பட்டிருக்கும் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு எவ்வித பிரதான அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை. ஏனெனில் இப்பீடமானது சம்மாந்துறையில் போதியளவு இடவசதியற்ற இடத்தில் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ளது என்ற காரணத்தினாலாகும். இதனால் இதுவரைக்கும் பல்வேறுபட்ட அபிவிருத்தித்திட்டங்கள் பிற்போடப்பட்டு வந்துள்ளன.

இதன் ஒரு கட்டமாக 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கான நிரந்தர கட்டட தொகுதிக்காக 170 மில்லியன் ரூபா நிதியும் மற்றும் மாணவர், விரிவுரையாளர்களுக்கான விடுதிக்காக 149 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டன. எனினும் 2006ஆம் ஆண்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராகவிருந்த கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் அவர்கள் சம்மாந்துறை பீடம் தற்காலிக ஏற்பாட்டில் இயங்குகின்றபடியால் இத்திட்டங்களைப் பிற்போட்டு வந்தார்.

ஆனால் தற்போதைய உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் நியாயங்களை புறம் தள்ளிவிட்டு தனது சொந்த ஊரான சம்மாந்துறையில் பிரயோக விஞ்ஞான பீடம் நிலைத்து நிற்கவேண்டும் என்ற காரணத்திற்காக ஒலுவில் பிரதான வளாகத்தில் இடவசதிகள் தாராளமாகவிருந்தபோதும் அங்கு இத்திட்டத்தை மேற்கொள்ளாமல் சம்மாந்துறையில் திட்டத்தை மேற்கொள்ள நினைப்பது குறுகிய பிரதேசவாத சிந்தனையினையே எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் அவரது பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் 6  மாதங்களே மீதம் உள்ள நிலையில் அதற்குள் எவ்வாறேனும் தனது ஊர் நலனை முன்நிறுத்தி மேற்படி அபிவிருத்தித் திட்டங்களை சம்மாந்துறையில் ஆரம்பிக்க நினைப்பது அவரது ஊர்ப் பற்றினை வெளிப்படுத்துகிறதே தவிர மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்தும் செயற்பாடாக அமையவில்லை என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

அத்துடன் புதிய கட்டிடத்தொகுதியை ஆரம்பிக்கும் முகமாக சென்ற 28.11.2011 அன்று பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உபவேந்தர் அவர்கள் உரையாற்றுகையில் தனக்கு சம்மாந்துறை மக்கள் இக்குறிப்பிட்ட வளாகத்தில் கட்டிடங்கள் மிக விரைவாக அமைக்கப்படவேண்டும் என்று அடிக்கடி வற்புறுத்தியதாகவும் அதன் நிமித்தமே தான் இக்கட்டிட வேலையை ஆரம்பிக்க எண்ணியதாகவும் அத்துடன் திறைசேரியில் இருந்து பணம் கிடைக்க கால தாமதம் ஆகுவதால் தனக்கு விசுவாசமானவர்களின் நிதி உதவியுடன் கட்டிட வேலையை ஆரம்பிக்க இருப்பதாகவும் தனது பிரதேசவாத கொள்கையை பெருமையுடன் பறைசாற்றியிருந்தார். அது மட்டுமன்றி சம்மாந்துறை பிரதேச சமூகசேவை அமைப்புகளை ஒன்றுதிரட்டி அவர்களையும் இந்நிகழ்வுக்கு அழைத்துவந்து அவர்கள் முன்னிலையில் தனது ஊர்ப் பற்றை நிரூபித்திருந்தார் இச்செயலானது மாணவர் சமுதாயத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு எரிகொள்ளியாகவே அமைகிறது எனலாம்.

சம்மாந்துறை நெற்களஞ்சியம் இப்பீடத்திற்கு பொருத்தமற்றதற்கான காரணங்கள்
சம்மாந்துறை நெற் களஞ்சிய வளாகமானது பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு பொருத்தமற்றதாக காணப்படுவதற்கு பல காரணங்கள் இனங்காணப்பட்டாலும் அவற்றில் மிக முக்கியமான காரணங்கள் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது காலத்தின் அவசியமாகும். ஆவையாவன

பிரயோக விஞ்ஞான பீடமானது ஒலுவில் பிரதான வளாகத்தில் போதிய கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே சம்மாந்துறை அரிசி ஆலைக்கு சொந்தமான கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்குவதற்குரிய ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. தற்காலிக ஏற்பாடு ஒன்றின் பிரகாரம் பிரயோக விஞ்ஞான பீடமானது சம்மாந்துறையில் இயங்கியதே தவிர அங்கு ஒரு பல்கலைக்கழக பீடமானது நிலையாக இயங்குவதற்குரிய அமைப்புக்கள் காணப்படவில்லை

உண்மையில் ஒரு பல்கலைக்கழகமானது மாணவர்களுக்கு சகலவிதமான கலைகளையும் போதிக்கக்கூடிய ஓர் இடமாகும் எனினும் பல்கலைக்கழகங்கள் கல்வியுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல மாணவர்களின் விளையாட்டுத்திறன் விருத்தி,தொழில்சார் திறன் விருத்தி,தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ திறன் விருத்தி என்பன பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்குவது காலத்தின் தேவையாகும். தற்போது பிரயோக விஞ்ஞான பீடமானது கல்வி தொடர்பான மாணவர்களின் தேவைகளை மட்டுமே மேற்கொள்ளத்தக்கதொரு வளாகமாக காணப்படுகின்றது.

இன்று மாணவர்களின் பிற தேவைகளான விளையாட்டு மைதானம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிப்பட்டறைகள், ஆய்வு மையங்கள், மாணவர் சேவை நிலையங்கள், நிரந்தர விடுதிகள் என்பன அறவே இல்லாத நிலையே காணப்படுகின்றன. காரணம் இது ஒரு குறுகிய பரப்பில் அமைந்துள்ளமையே அத்துடன் தற்போது இப்பீடம் இயங்கிவரும் சம்மாந்துறை நெற் களஞ்சியசாலை கட்டிடத்தொகுதி வெறும் ஐந்து ஏக்கருக்கும் குறைவானதொரு நிலப்பரப்பினையே கொண்டிருக்கின்றது. இன்றும் கூட நெற்களஞ்சிய சாலைக்குரிய பல அமைப்புக்கள் அங்கு காணப்படக்கூடியதாகவுள்ளன. இவ்வாறானதொரு குறுகிய நிலப்பரப்பில் பல பழமையான கட்டிடங்களும் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ளமையால் எதிர்காலங்களில் பீடத்தின் அபிவிருத்திக்காக புதிய கட்டிடங்களை கட்டுவதற்குரிய போதியளவு இடம் இல்லை எனலாம்.

மாணவர் விடுதியின் அவல நிலை
இதனுடன் தொடர்பான மாணவர் விடுதிகள், விரிவுரையாளர்களுக்கான விடுதிகள்,விளையாட்டு மைதானம், பயிற்சிக் கூடங்கள் என்பன பீடத்தினுள் அமைவதற்கான முற்றிலும் சாத்தியமற்றதொரு நிலையே இங்கு காணப்படுகின்றது. அத்துடன் ஒலுவில் பிரதான வளாகத்துடன் ஒப்பிடுகையில் எமது வளாகமானது எல்லா விதத்திலும் மிகவும் பின்தங்கியதொரு நிலையிலேயே காணப்படுகின்றது. அவற்றுள் பின்வருவனவற்றை முக்கியத்துவப்படுத்தலாம்.

எமது மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற விடுதியானது தனியார் வீடுகளை வாடகைக்கு அமர்த்தியே தந்துள்ளார்கள். அத்துடன் சம்மாந்துறை பீடத்திற்கு அண்மையில் அதிகளவில் புதிய மாணவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் பல புதிய பிரச்சினைகள் தலை தூக்கியுள்ளன. விடுதிகளில் பாரிய நெருக்கடியினை தோற்றுவித்துள்ளது.  சுமாராக இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீடு ஒன்றில் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கவேண்டிய கஷ்டமான நிலை காணப்படுகின்றது. அத்துடன் அவ்விடுதிகளிலே போதியளவு  மேசைகள், கதிரைகள் அற்ற நிலையிலேயே விடுதி மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விடுதிகள் காடுகள் நிறைந்த பிரதேசத்தில் அமைந்துள்ளமையால் விஷப் பாம்புகள் மற்றும் ஏனைய விலங்குகளின் தொல்லையும் காணப்படுகின்றது. இவ்வாறான விடுதிகளில் 25 மாணவர்கள் குளிப்பது மற்றும் உடைகளைக் கழுவுவதற்காக இரண்டு பைப்/ ஷவர் மாத்திரமே காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை வெட்டாந்தரைகளிலேயே மேற்கொள்ள வேண்டிய அவல நிலை உள்ளமை எமது பீடத்தில் மாத்திரமே காணக்கூடியதாகவுள்ளது. அத்துடன் மாணவர்கள் நிம்மதியாக உறங்குவதற்குரிய வசதிகள் கூட இவ்விடுதிகளில் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. மாணவர்கள் மிகவும் நெருக்கடியாகவே தூங்க வேண்டியுள்ளனர். மற்றும் மாணவர்கள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எவ்வித வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மாணவர்கள் தங்களின் பொருட்களை அங்குமிங்கும் தரைகளிலேயே வைக்கவேண்டிய ஒரு சூழலே காணப்படுகின்றது. 

இவ்வாறு விடுதி நிலைமை மிகவும் கஷ்டமாக இருப்பதால் பல மாணவர்கள் விடுதிக்கு வெளியே பணம் செலுத்தி பிறர் வீடுகளில் தங்குகின்றனர். இதன் மூலம் விடுதிகளின் தார்ப்பரியத்தை விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் ஒலுவில் பிரதான வளாகத்தில் உள்ள விடுதி வசதியானது மிகவும் சிறப்பானதாகவும் சகல விதமான நவீன வசதிகளுடனும் கூடிய சொகுசு விடுதிகள் அங்குள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

மேலும், எமக்கு வழங்கப்பட்டுள்ள விடுதிகளிலே பராமரிப்பு மற்றும் மேற்பார்வை என்பன அறவே அற்றதொரு நிலையே காணப்படுகின்றது. உதாரணமாக இங்கு வழங்கப்பட்டுள்ள விடுதிகள் மேற்பார்வை செய்யப்படாத காரணத்தினால் மாணவர்களின் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படாமல் தன்னிச்சையானதொரு செயற்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்காலங்களில் இவ்வாறான நிலைமைகள் தொடருமாக இருந்தால் இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் ஒன்றாகும்.

மாணவர்களுக்கு மருத்துவத் தேவைகள் ஏற்படும்பொழுது அதனை பூரணமாக நிறைவேற்றுவதற்குரிய போதியளவு மருத்துவ வசதிகள் இப்பீடத்தில் காணப்படவில்லை. எனினும் ஒலுவில் பல்கலைக் கழகத்தில் பூரண (24 மணித்தியால) மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழகத்துக்கு என தனியானதொரு வைத்தியசாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விடுதிகளில் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டால் அதனை உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்கப்படும் நிலை ஒலுவில் வளாகத்தில் காணப்படுகின்றது. ஆனால் இங்கு அவ்வாறானதொரு திருத்த வேலைகள் செய்வதாயின் சுமார் இரண்டு வாரங்களாவது செல்லும். பல தடவைகள் சென்று முறையிட்டாலும் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக மாணவர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர். இதன் காரணமாக பல்கலைக் கழக நிர்வாகத்திடம் கூறியும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால் மாணவர்கள் தங்கள் சொந்த செலவில் மேற்படி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ள சந்தர்ப்பங்களும் உள்ளன.

இவற்றுக்கு மேலாக மறுக்கவோ மறைக்கவோ முடியாத இன்னொரு பிரச்சினையாக விடுதி மாணவர்களின் பாதுகாப்பு பிரச்சினையைக் குறிப்பிடலாம். அதாவது பல சந்தர்ப்பங்களில் விடுதி மாணவர்கள் சம்மாந்துறை காடையர்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் கற்களைக் கொண்டு விடுதிகளும் தாக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. அத்துடன் விடுதிகளிற்கு பாதுகாப்பு வழங்கப்படாமையினால்பல தடவைகள் விடுதியிலுள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன. அண்மையில் சம்மாந்துறை மத்திய கல்லூரிக்கு அண்மையிலுள்ள மாணவர் விடுதியில் இருந்த தொலைக்காட்சி பெட்டி போன்ற பெறுமதிமிக்க பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான பொருட்கள் திருடப்பட்டமையினைக் குறிப்பிடலாம்.

மிகவும் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் இவ்வாறான பாதுகாப்பற்ற விடுதிகளில் உள்ள பெண் மாணவிகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். பெண்கள் விடுதிகளுக்கு அடிக்கடி சம்மாந்துறையை சேர்ந்த தீய எண்ணம் கொண்ட சிலர் வந்து பாலியல் ரீதியான சேஷ்டைகளில் ஈடுபடும் நிகழ்வுகள் நாளாந்தம் நடந்தவண்ணமுள்ளன. இவ்வாறான நிகழ்வுகளால் மாணவிகள் இப்பீடத்திற்கு வந்ததை ஒரு சாபக்கேடாகவே கருதுகின்றனர். அத்துடன் ஒலுவில் வளாகத்தின் விடுதிக் காப்பாளரே இங்கும் நியமிக்கப்பட்டிருப்பதால் அவரின் மேற்பார்வை இங்கே இடம்பெறுவதில்லை.

மேலும் மாணவர்கள் இன்றும்கூட தமது பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பான தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒலுவில் பிரதான வளாகத்திற்கே செல்ல வேண்டியுள்ளது. அத்துடன் இத் தேவைகளினை நிறைவேற்ற விரிவுரைகளை இழந்துவிட்டு அங்கு செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றமையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. பொதுவாக முஸ்லிம்களால் நிருவாகிக்கபாடுகின்ற எமது பீடத்தில் முஸ்லிம் பெண் மாணவர்கள் தமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக பொருத்தமான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்பது சமூகம்மீதுள்ள அவர்களின் அக்கறையின்மையை வெளிப்படுத்துகின்றது.

விரிவுரையாளர்களின் வெளியேற்றமும் அதற்கான காரணங்களும்
இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் எமது பீடத்தில் கற்பிக்கும் விரிவுரையாளர்களின் வசதியானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏனைய பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களுக்கு சிறப்பான தங்குமிட வசதியினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அது மட்டுமல்லாது ஒலுவில் பிரதான வளாகத்தில் கூட விரிவுரையாளர்களுக்கு மிக ஆடம்பரமான தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் இன்னும் கவலைக்குரிய விடயம் என்னவெனில் எமது விரிவுரையாளர்கள் தங்களது அலுவலக அறைகளிலேயே தங்க வேண்டியதொரு மிக துர்ப்பாக்கியமானதொரு நிலை இப்பீடத்தில் காணப்படுகின்றது. மிகச்சிறப்பாகக் கற்று பல்வேறு தேர்ச்சிகளினை அடைந்து அயராத முயற்சியின் பேராக கலாநிதிப் பட்டங்களினை பெற்றிருந்தும் கூட அவர்களது வாழ்வு மிகவும் கஷ்டங்களிற்கு மத்தியிலேயே செல்கின்றது. இவ்வாறான நிலைமை காரணமாக பல விரிவுரையாளர்கள் இப் பீடத்தினை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சில விரிவுரையாளர்கள் வேறு பல்கலைக்கழகங்களிற்கு இடமாறிச் சென்றுள்ளனர். இவ்வாறானதொரு நிலை தொடருமாகவிருந்தால் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் அற்ற நிலையொன்று இப்பல்கலைக்கழகத்தில் ஏற்படலாம். சுமார் 3 வருட காலத்தில் 5 விரிவுரையாளர்கள் இவ்வாறு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். ஒரு பல்கலைக்கழகமானது விரிவுரையாளர்களின் வளத்திலேயே தங்கியுள்ளது. இந்நிலை நீடித்தால் எமது வளாகம் கல்வித் துறையிலே பின்தங்கிய நிலைக்கு மாறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின.

இந்நிலை காரணமாக எமது பீடத்தினுள் பல பேராசிரியர்களுக்கான பதவி வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும் வெகுநாட்களாக இவ்வெற்றிடங்களினை பூரணப்படுத்துவதற்கு எந்தவொரு பேராசிரியரும் முன்வரவில்லை. இது அவர்களின் பிழையல்ல இது எமது பல்கலைக்கழக நிர்வாகத்தின் பிழையாகும். சம்மாந்துறை அரசியல் பலத்திற்கு எதிராக தீர்மானங்களினை மேற்கொள்ள தைரியமற்ற ஒரு நிர்வாகமே இங்கு காணப்படுகின்றது.இவ்வாறு விரிவுரையாளர்கள் வெளியேற்றமும் உள்வரவு அற்ற நிலையே எமது பீடம் இலங்கையிலேயே பின்தங்கிய விஞ்ஞான பீடமாக மாறியிருப்பதற்கான காரணமாகும்.

எமது பீடத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பல பீடங்கள் இன்று அசுர வேகத்தில் முன்னேறிச்செல்லும் இன்றைய சூழலிலே எமது பீடமானது தொடர்ந்தும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. என்ன செய்வதென்று அறியாத நிலையில் தத்தளிக்கும் மாணவர்கள்எம் விதி இதுதான் என்று எங்களை நாங்களே சமாதானப்படுத்தும் நிலையே உள்ளது. துரதிஷ்டம் என்னவென்றால் இப்பிரதேச மக்களிடமும் இது தொடர்பானதொரு அக்கறையற்ற நிலைமை காணப்படுவதாகும்.

விரிவுரையாளர் வளப்பற்றாக்குறை காரணமாக மாணவர்களுக்கான கல்விசார் பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவையாவன.
• கணணி விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய பாடங்களில் விஷேடமானி (Special Degree) கற்கும் வாய்ப்பில்லாமை.
• அடிப்படை தூயவிஞ்ஞான பாடங்கள் (Pure Science) மட்டுமே போதிக்கப்படுகின்றமை.
• மாணவர்கள் தாம் விரும்பியவாறு பாடங்களினை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளமை.
• அடிப்படை கட்டாயமற்ற விருப்பத்திற்குரிய பாடங்களினை தொடர வாய்ப்பற்ற நிலைமை(Optional Course).
• தொழில்சார் பாடங்கள் அற்ற நிலை.
• தொழில் பயிற்சிகளினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாமை.
• பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு ஆறு மாதங்கள் வரை கால தாமதம் செய்யப்படுகின்றமை 
• பல பாடங்களுக்கு வருகைதரு விரிவுரையாளர்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை
• பல பரிசோதனைகளை நிறைவேற்றுவதற்காக பிற பல்கலைக்கழகங்களுக்கு செல்லவேண்டியுள்ளமை
என்பவற்றினைக் குறிப்பிடலாம்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தில் பிரயோக விஞ்ஞான பீடம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இப்பிரதேச மாணவர்கள் விஞ்ஞானமானி பாடநெறிக்காக இலங்கையின் முன்னணி பல்கலைகழகங்களுக்கு சென்று தமது கல்வியை பெறக்கூடிய நிலை இருந்தது. இம்மாணவர்களின் கல்வித்தேவைகளை நிறைவுசெய்யத் தேவையான அனைத்து வளங்களும் அங்கு அவர்களுக்கு கிடைத்தன. இவ்வாறு மேற்படி பல்கலைக்கழகங்களில் கல்வியை நிறைவு செய்தவர்கள் இன்று பேராசிரியராகளாகவும் பிற துறைகளிலும் பிரகாசிக்கின்றனர்.

இந்நிலை 1997ஆம் ஆண்டு முதல் தடைப்பட்டுள்ளது. காரணம்  இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தில் பிரயோக விஞ்ஞான பீடம் ஆரம்பிக்கப்பட்டமையே.  கடந்த 14 வருடங்களாக இயங்கிவரும் பிரயோக விஞ்ஞான பீடம் எதைச்சாதித்துள்ளது? இன்று இப்பீடத்தில் இருந்து வெளியேறும் மாணவர்கள் தாம் கற்ற துறைக்கு எவ்விதத்திலும் தொடர்பற்ற தொழில்களையே செய்யவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் இப்பீடத்திற்கு அனுமதி பெரும் மாணவர்களில் சுமார் 50% மாணவர்கள் இங்குள்ள குறைபாடுகளை பார்த்து தமது பதிவை ரத்துசெய்துவிட்டு வேறு தொழில்சார் தனியார் பாடநெறிகளை கற்பதற்காக சென்றுவிடுகின்றனர். இதுவே இங்குள்ள உண்மை நிலையாகும். இவற்றுக்கெல்லாம் காரணம் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களே.

தொலைத்தொடர்பு பற்றாக்குறையும் அவல நிலைமையும்
இவை மட்டுமல்லாது இப் பல்கலைக்கழக வளாகத்தினுள் தொலைத் தொடர்பிற்கான வசதிகள் மற்றும் Fax, Printingபோன்ற வசதிகள் அற்ற இக்கட்டான நிலையே காணப்படுகின்றது. மேலும் பல்கலைக்கழக மாணவர்களின் பணப் பரிமாற்றல் தேவைகளுக்காக வங்கி வசதிகள் அறவே அற்ற நிலை காணப்படுகின்றது. இவ்வாறான தேவைகளினை நிறைவேற்ற மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து அண்ணளவாக 5Km தொலைவில் அமைந்துள்ள சம்மாந்துறை நகரத்தினை அணுக வேண்டிய  நிலை காணப்படுகின்றது.

மேலும் மாணவர்களின் இதர அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான எந்தவொரு வசதிகளும் இங்கு காணப்படவில்லை. இப் பிரச்சினைகள் பலவருடங்களாக நிலவிவருகின்ற நிலையினிலும் எந்தவொரு ஏற்பாடுகளினையும் மாணவர்களிற்கு ஏற்படுத்திக் கொடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் முன்வரவில்லை. ஆயினும் ஒலுவில் பல்கலைக்கழக வளாகத்தில் வங்கி வசதிகள் மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்றல் வசதி உட்பட அனைத்து விதமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வருடம் வருகை தந்துள்ள புதிய மாணவர்களுற்கு இரண்டே இரண்டு விரிவுரை மண்டபங்களினையே பயன்படுத்தக்கூடிய நிலையிலுள்ளது.

மேலும் இம்மாணவர்களிற்கு ஆய்வுகூட வசதிகள் போதாமையால் இம்மாணவர்களினை நான்கு குழுக்களாகப் பிரித்தே ஆய்வுகூட வகுப்புக்களை நடாத்தப்பட வேண்டிய நிலைக்கு பீடம் தள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக உபவேந்தர் கலாநிதி S.M.M.ISMAIL அவர்களிடம் வினவியபோது “ இரசாயனவியல் ஆய்வு கூடத்தில் போதிய இடவசதி இல்லாவிட்டால் பௌதீகவியல் ஆய்வுகூடத்தினை இரசாயனவியல் பாடத்திற்காகப் பயன்படுத்தலாம்” எனக் கூறியுள்ளார். உபவேந்தரின் இக்கூற்று அவரது கல்வித் தகைமையையே சந்தேகிக்க வைக்கின்றன. அத்துடன் எமது பரிசோதனைக் கூடங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக பல பெறுமதிமிக்க பரிசோதனைக்கூட உபகரணங்களை பொருத்துவதற்குக் கூட இடமில்லாமல் அவை பயன்படுத்தப்படாததொரு நிலையே இங்கு காணப்படுகின்றது.

இலங்கையில் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் விஞ்ஞான பீடமானது பிரதான வளாகத்திற்கு வெளியே அமையப் பெற்றிருக்கவில்லை காரணமென்னவெனில் விஞ்ஞான பீடமானது ஒரு பல்கலைக்கழகத்தின் பிரதான பீடமாக இருப்பதுடன் அதன் வளங்கள் பிற பீடங்களுக்கு அவசியமானது ஏனெனில் விஞ்ஞான பீட விரிவுரையாளர்கள் பலர் பல பீடங்களிலுள்ள விஞ்ஞானம் சார்ந்த பாடங்களை கற்பிக்கின்றனர். அத்துடன் சாதாரணமாக பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட ஒரு பீடத்தில் உள்ள மாணவர்கள் பிற பீடங்களில் போதிக்கப்படுகின்ற சில பாடநெறிகளைக் கற்க வாய்ப்பேற்படுகின்றது. ஆனால் இவ்வாறான வாய்ப்புக்களை எமது பீடம் இழந்து நிற்கின்றது.

அத்துடன் பிற பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் விஞ்ஞான பீட வளங்களைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. பொதுவாக விஞ்ஞான பீடமானது விஞ்ஞானம் சார்ந்த பல பாடநெறிகளை போதிக்கக்கூஎடிய இடமாகவுள்ளது. இவ்வாறான பாடநெறிகளுள் ; Biology, Chemistry, Physics, mathematics, Statistics, Earth Science, Computer Science என்பன மாத்திரமே இப்போதைக்கு எமது பீடத்தில் காணப்படுகின்றன. எனினும் ஏனைய பாடங்களான Biotechnology, Micro Biology, Biochemistry, Electronics,, Zoology, Botany, Marine Biology, Environmental Biology, Human biology, Engineering physics, Computational Physics, Pharmacy, Computational Bio Informatics, Nuclear Physics, Computational mathematicsபோன்ற பாடங்கள் எதிர்காலத்தில் இங்கு ஆரம்பிப்பதாயின் அவற்றுக்கான ஆய்வுகூடங்களை அமைப்பதற்கும் அவற்றுக்கான பிரத்தியேக கட்டிடங்களை அமைப்பதற்கும் தகுந்த இடங்களும் அவற்றுக்கான போதிய வசதிகளும் தற்போதைய விஞ்ஞான பீடம் அமையப்பெற்றிருக்கும் பிரதேசத்தில் இல்லையென்பது வேட்டவேளிச்சமாகும். 

இவ்வாறான நிலையில் முதுமானிப்பட்டங்களைப் பெறக்கூடிய பாடநெறிகளை இங்கு கற்பது எமது மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே காணப்படுகின்றது. இதற்கு அப்பால் சற்று தூர நோக்கோடு சிந்தித்தால் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்ற பாடநெறிகளை எடுத்துநோக்கினால் பெரும்பாலான பாடநெறிகள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்ததாகவே காணப்படுகின்றன. இவ்வாறான பாடநெறிகள் எதிர்காலத்தில் எமது பீடத்தில் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் சம்மாந்துறை பீடம் நிலப்பற்றாக்குறையுடன் காணப்படுவதனால் தடைப்பட்டுள்ளது.

வீணாக்கப்படும் வளங்களும் மறுக்கப்படும் தேவைகளும்
அத்துடன் எமது வளாகம் தனியாக சம்மாந்துறையில் அமைந்துள்ளமையால் அரச வளங்கள் பல வீண்விரயம் செய்யப்படுகின்றன அவற்றுள் பின்வருவன முக்கியமானவையாகும்.

• பீடமானது தனியாக இயங்குவதால் அதற்காக அதிகளவில் மேலதிகமான ஊழியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியுள்ளதால் மிகப்பெரிய நிதி வீண் விரயமாக்கப்பட்டுள்ளது.

• அத்துடன் எமது பீடத்தினைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் ஒலுவில் வளாகத்திpலுள்ள சில பீடங்களிற்கு விரிவுரை நிகழ்த்த வேண்டியுள்ளது போல் ஒலுவில் வளாகத்தினைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் எமது பீடத்திற்கு வந்து விரிவுரை எடுக்கும் சந்தர்ப்பமும் உண்டு. இதன்போது விரிவுரையாளர்கள் பல பிரச்சினைகளினை சந்திப்பதோடு வளங்களினை உச்ச அளவில் பாவிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் மேற்படி சந்தர்ப்பங்களின் போதும் பிற தேவைகளுக்காகவும் அடிக்கடி வாகனங்கள் எமது பீடத்தில் இருந்து ஒலுவிலுக்கும் ஒலுவிலில்லிருந்து எமது பீடத்திற்கும் சென்று வருவதனால் பாரிய அளவில் அரசவளம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது.

• விடுதிகளிற்காக பல்கலைக்கழகம் வீடுகளினை வாடகைக்கு பெற்றுள்ளமையினால் ஒவ்வொரு வீட்டிற்கும் சுமாராக 30000 ரூபாய்க்கும் மேற்பட்ட தொகைகளினைச் செலவிடுகின்றது. இவ்வாறான 20 விடுதிகள் காணப்படுகின்ற நிலையில் மாதம் ஒன்றுக்கு சுமார் ஆறு இலட்சத்திற்கு மேற்பட்ட தொகையினைச் செலவிடுகின்றது. இந் நிலையிலேயே பல்கலைக் கழக நிர்வாகம் எமது பீடத்திற்கு 50 வீதமான நிதியினை செலவிடுவதாக கூறுகின்றது

அவ்வாறாக ஒதுக்கப்படும் நிதியானது இவ்வாறு வீண்விரயமாக்கப் படுவதானது புத்தியுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல வழமையாக பல்கலைக் கழகங்களிற்கு மின்சார சபையினால் மானியங்கள் வழங்கப்படுகின்றன. எனினும் வாடகை வீடுகளை விடுதிகளாக பயன்படுத்துவதனால் இந்த மானியம் இழக்கப்படுகின்றது. அத்துடன் இவ்வாறான வாடகை வீடுகளை கேள்விப்பத்திரம் மூலமாக பெறாமல் நிருவாகத்திற்கு வேண்டியவர்களின் வீடுகளை மிகஉயர்ந்த வாடகைக்கு பெற்றுள்ளனர். இதுவும் ஒரு வீண்விரயமாகும்.

• இவ்வாறான விடுதிகள் பீடத்தில் இருந்து வெகுதூரத்தில் காணப்படுவதனால் பஸ் கட்டணங்கள் செலுத்தியே செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாணவர்களிற்கு செலவு இன்னும் அதிகரிக்கின்றது.

• எமது பீடம் பழைய நெற்களஞ்சியசாலை கட்டடத்தில் இயங்குவதால் அதன் திருத்த வேலைகளுக்கென பெருமளவு நிதி வீண்விரயம் செய்யப்படுகின்றது.

இருட்டடிப்பு செய்யப்பட்ட உண்மைகளும் மறுக்கப்பட்ட உரிமைகளும்
எமது பீடமானது சுமார் 5 ஏக்கர் பரப்பளவினை மட்டுமே கொண்டுள்ளபோதும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினரிடம் எமது பீடமானது சம்மாந்துறையில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது என்றதொரு பொய்யான தகவலினை வழங்கியுள்ளனர். இது தொடர்பாக மாணவர்களுக்கு தெரியவந்து கேட்டபோது சம்மாந்துறையில் இருந்து 10 Km இற்கு அப்பால் உள்ள மல்வத்தை என்ற இடத்தில் அமைந்துள்ள ஆள் நடமாட்டம் அற்ற நிலமும் எமது பீடத்திற்குரியது என்ற காரணம் கூறப்படுகின்றது. இக்குறிப்பிட்ட காணியிற்கும் எமது பீடத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


2009ம் ஆண்டு எமது பீடத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பல்கலைக் கழகத்தின் தரத்தினை ஆய்வு செய்யும் குழுவினர் (Quality Assurance Team)) எமது குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டனர். இதன் இறுதியில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலே எமது பீடமானது வளங்களினை முறையாகப் பயன்படுத்துவதில்லை எனவும் மற்றும் ஒலுவில் பிரதான வளாகத்திற்கும் எமது பீடத்திற்கும் பாரியளவு ஏற்றத்தாழ்வு நிலவுவதாகவும். எமது பீடம் ஒலுவில் பிரதான வளாகத்துடன் இணைக்கப்படுவது சிறந்தது என்று பரிந்துரைகளினை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் எமது பீடமானது தனியாக அமைந்து இருப்பதனால் வெளிநாடுகளின் உதவிகள் எமக்கு கிடைப்பதில்லை உதாரணமாக அண்மையில் குவைத் நாட்டினால் 1000 மில்லியன் ரூபா நிதி தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் எந்தவொரு நிதியும் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு ஒதுக்கப்படவில்லை. அனைத்து நிதிகளும் ஒலுவில் வளாகத்திற்கு ஒதுக்கப்பட்டன. அவற்றுடன் இலங்கையின் சிறந்த வாசிகசாலைகளில் ஒன்றான ஒலுவில் வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வாசிகசாலையை அதே பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்களாகிய எம்மால் பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கியகரமான நிலையே காணப்படுகின்றது.

மற்றும் அதனுடன் இணைந்து அமெரிக்க ஆய்வு நிலையம் (American Research center), சகல வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் (Physical Education Unit), ஆங்கில மொழி விருத்தி நிலையம் (English Language Teaching Unit), தொழில் வழிகாட்டல் நிலையம் (Career Guidance Unit), நூதனசாலை, தகவல் தொழில்நுட்ப நிலையம் (Information Technology Center), அரசின் ICTA வேலைத்திட்டங்கள் IRQUE HTEC நிலையம், சர்வதேச பல்கலைகழக கிளைகள், கனடா ஆய்வு நிலையம் (Canadian Research Centre), மாணவர் ஆலோசனை மையம்(Student  Counseling Center), உலக பல்கலைகழக சேவை நிலையம், மாணவர் நலன்புரி நிலையம், முழு நேர வைத்திய, சேவைகுறைந்த செலவில் Photocopy, Printing மற்றும் தொலைத் தொடர்பு வசதிகள் என்பன ஒலுவில் வளாகத்தினில் மாத்திரம் காணப்படுகின்றது.

அத்துடன் எமது பல்கலைக்கழக மாணவர் பேரவை அமைப்பில் எமது பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் எவரும் சேர்க்கப்படாமலேயே பல தீர்மானங்கள் ஒலுவில் வளாகத்தை மட்டும் கருத்திற்கொண்டு எடுக்கப்படுகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும் அத்துடன் அண்மைக்காலங்களில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கண்காட்சிகளுக்குக் கூட பங்களிப்பு செய்யும் தகுதி அற்றவர்களாகவே எமது பீட மாணவர்கள் கணிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் அவ்வாறானதொரு கண்காட்சி இடம்பெறுவது வீதிகளின் இடப்பட்டிருந்த விளம்பரங்கள் பதாகைகளை பார்த்தே அறிய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் எமது பீட மாணவர்கள் உள்ளமை மிகவும் மனவேதனைக்குரிய விடயமாகும். இதுமட்டுமன்றி இது போன்ற பல நிகழ்வுகள் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் எமது பீடத்திற்கு அறிவிக்கப்படாமலே மேற்கொள்ளப்படுகின்றது. இது எமது பீட மாணவர்களை மாற்றாந்தாய்ப் பிள்ளைகள் போல் கவனிக்கின்ற தன்மையினையே காட்டுகின்றது.

அது மட்டுமன்றி உள்ளூர் மாணவர்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து சேவைக்குட்படுத்தப்பட்டுள்ள பஸ் வண்டிகள் சீரான முறையில் சேவைகளைச் செய்யாது அசமந்தப் போக்கில் காணப்படுகின்றது. அது மட்டுமன்றி ஒலுவில் வளாகத்திற்காக இடப்பட்டுள்ள போக்குவரத்து சேவையானது பெரியநீலாவணை முதல் ஒலுவில் வரையும் அக்கரைப்பற்று முதல் ஒலுவில் வரையும் இடப்பட்டுள்ள அதே வேளையில் எமது பீடத்திற்கான சேவை கல்முனையில் இருந்து மட்டுமே வழங்கப்படுகின்றது. இதனால் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், திருக்கோயில், தம்பிலுவில், பெரியநீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு மாணவர்கள் பலசிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மேற்கூறிய அனைத்து பிரச்சினைகளும் எமது பிரயோக விஞ்ஞான பீடமானது தனியாக சம்மாந்துறையில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் அமைந்துள்ளமையாலேயே ஏற்படுகின்றது.

இவற்றுக்கான தீர்வாக பிரயோக விஞ்ஞான பீடத்தினை ஒலுவில் வளாகத்திற்கு மாற்றுவதே ஒரே வழியாகும். இதற்கு சாதகமாக ஒலுவில் வளாகத்தில் அண்மையில் குவைத்தின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப பீடம் காணப்படுகின்றது. இந்த புதிய கட்டிடமானது தொழிநுட்ப பீடத்திற்கெனக் கட்டப்பட்ட போதிலும் அவ்வாறானதொரு பீடமானது ஆரம்பிப்பதற்கான அனுமதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இன்னும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படவில்லை. அத்துடன் தொழில்நுடப பீடத்தினை ஆரம்பிப்பதற்கான வளங்களும், விரிவுரையாளர்களும் இங்கு இல்லை. இதன் காரணமாக இந்த புதிய கட்டடத்தினை பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு வழங்குவதுடன் தொழில்நுட்ப பாடநெறிகளை ஆரம்பிப்பதாயின் அவற்றை பிரயோக விஞ்ஞான பீடத்தினுள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தை எதிர்காலத்திற்கு பொருத்தமற்ற இடத்தில் தொடர்ந்தும் வைத்திருப்பதானது எதிர்கால மாணவர் சமூகத்திற்கும் இந்த நாட்டிற்கும் செய்யும் அநியாயமாகும்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்டிட வேலைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு அவற்றுக்கான தொழிநுட்ப,சுழல் மற்றும் சமூக பொருத்தப்பாட்டு ஆய்வினை (feasibility study) நடுநிலைமையுடன் மீள மேற்கொண்டு அவற்றை மீள் பரிசீலனை செய்து சுயநலவாத அரசியல்,பிரதேசவாதம் என்ற மாயைகளுக்கு அப்பாற்பட்டு முழு மாணவர் சமூதாய முன்னேற்றத்தினை மாத்திரம் கருதி இக்கட்டிடத் தொகுதியினை ஒலுவில் வளாகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கென ஒதுக்கப்பட்ட இடத்திலேயே கட்டப்பட ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்பதே எம் அனைத்து மாணவர்களின் ஏகோபித்த முடிவாகும். இவ்வாறு செய்யப்படும் பட்சத்தில் ஒட்டு மொத்த மாணவர் சமுதாயமும் இதற்காகப் பாடுபடுகின்ற அனைத்து உள்ளங்களுக்கும் கடமைப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது திண்ணம். ஆகவே எமது மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு மாணவர்களின் பிரயோக விஞ்ஞான பீடத்தினை ஒலுவில் வளாகத்தில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிக்கு உங்கள் தார்மீக ஆதரவை நல்குமாறு தயவுடன் வேண்டுகின்றோம்.

மாணவர் சமூகம்,
பிரயோக விஞ்ஞான பீடம்,
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.

0 comments:

Post a Comment