
சமாதான நீதிவான்களுக்கு மனித உரிமை, சிறுவர் உரிமை, பெண்கள் உரிமை, சட்டமும் நீதியும், ஜனநாயகம் போன்ற துறைகளில் முழுமையான பயிற்சிகள் வழங்கும் நிலையம் ஒன்றை சமாதான கற்கைகளுக்கான நிலையம் நிறுவவுள்ளதாக அதன் தலைவர் கலாநிதி எஸ்.எல். றியாஸ் எமக்குத் தெரிவித்தார். இதற்காக சமாதான நீதிவான்களின் சங்கம் ஒன்றையும் இந்நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
சமாதான கற்கைகளுக்கான நிலையமானது முரண்பாடு தீர்த்தல், நல்லிணக்கம், அமைதி காத்தல், மனிதப் பாதுகாப்பு, மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களை அபிவிருத்தி செய்வதில் முன்னணியில் செயற்படும் ஒரு நிறுவனம் ஆகும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்காக நடைமுறைச் சாத்தியமான திட்டங்களைச் சமர்ப்பித்ததன் மூலம் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்கின்றது. மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், பிராந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுடனும் இணைந்து செயற்பட்டுவரும் ஒரு நிறுவனம் ஆகும்.
சமுகத்தில் கீர்த்தி பெற்றுத் திகழுகின்ற சமாதான நீதிவான்களையும் இந்தப் பயணத்தில் பங்காளிகளாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியே இந்த சமாதான நீதிவான்களின் சங்கம் ஆகும் எனவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நிறுவனமானது, எந்தவொரு நிறுவனத்தின் நிகழ்ச்சி நிரலிலோ, நிதியிலோ இயங்கும் ஒரு நிறுவனமல்ல. இது சமாதான நீதிவான்களின் ஒத்துழைப்புடனும், CPS நிறுவனத்தின் வழிகாட்டலிலும் இயங்கும் ஒரு நிறுவனம் ஆகும்.
இதன் மூலம் சமாதான நீதிவான்களின் கௌரவம், உரிமைகள் பாதுகாக்கப்படும். மேலும் மாதாந்தம் சமாதான நீதிவான்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் இடம்பெறுவதோடு சமாதானத்தையும் இன நல்லுறவையும் ஏற்படுத்தும் முயற்சியில் சமாதான நீதிவான்கள் ஈடுபடுத்தப்படுவர்.
மனித உரிமை, சிறுவர் உரிமை, பெண்கள் உரிமை, சட்டமும் நீதியும், ஜனநாயகம் போன்ற துறைகளில் முழுமையான பயிற்சிகள் சலுகைக் கட்டண அடிப்படையில் வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ்களும் வழங்கப்படும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் உடனுக்குடன் அங்கத்தவர்களின் கலந்துரையாடலுக்கு விடப்படுவதுடன் விழிப்பூட்டலும் செய்யப்படும்.
இக்குறிப்பிட்ட துறைகளில் திறமையாகச் செயற்படும் சமாதான நீதிவான்களுக்கு வருட இறுதியில் 'ஆண்டின் தேசிய சமாதானத் தூதுவர்' (National Peace Ambassador of the Year) விருது வழங்கிக் கௌரவிக்கப்படும். இது ஒரு திறந்த போட்டியாகவிருப்பதால் அங்கத்தவரல்லாதவர்களும் தமது தகுதியை நிருபிப்பதன் மூலம் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கான விண்ணப்பப்படிவங்களை தலைவர், சமாதான நீதிவான்களின் சங்கம், 7/2, அலி வன்னியார் வீதி, சம்மாந்துறை எனும் முகவரியிலும் பெற்றுக்கொள்ளலாம்.
0 comments:
Post a Comment