
லோக்சபாவில் தட்டுத்தடுமாறி லோக்பால் மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு இன்று ராஜ்யசபாவில் 'லிட்மஸ் டெஸ்ட்' நடக்கப் போகிறது. லோக்சபாவில் இந்த மசோதாமீது நடந்த ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய 2 கட்சிகளின் எம்பிக்களும் வெளிநடப்பு செய்து, மத்திய அரசுக்கு மறைமுகமாக உதவியதால், இந்த மசோதா நிறைவேறியது. இவர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் மசோதா தோற்றிருக்கும்.
அதேபோல ராஜ்யசபாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மையே இல்லை. 245 பேர் கொண்ட இந்த அவையில் காங்கிரஸ், திமுக, மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தள் ஆகிய கட்சிகளுக்கும், வெளியில் இருந்து மத்திய அரசை ஆதரிக்கும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி ஆகிய கட்சிகள் அனைத்தையும் சேர்த்தாலும் மொத்தமே 93 எம்பிக்கள் தான் உள்ளனர்.
இதனால் ராஜ்சபாவிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற சமாஜ்வாடி கட்சி (5 எம்.பி.க்கள்), பகுஜன் சமாஜ் (18 எம்.பி.க்கள்), லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (4 எம்.பி.க்கள்) ஆகிய கட்சிகளையே மலைபோல நம்பியுள்ளது மத்திய அரசு. இந்த மூன்று கட்சிகளுக்கும் சேர்த்து 27 எம்பிக்கள் உள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணியின் 93 எம்.பி.க்களோடு இந்த 27 எம்.பி.க்களைச் சேர்த்தால், ராஜ்யசபாவில் உள்ள மொத்த எம்.பி.க்களில் கிட்டத்தட்ட 50 சதவீத ஆதரவைத் திரட்டிவிட முடியும். ஆனால், லோக்சபாவில் செய்ததைத் போல ராஜ்யசபாவிலும் இந்தக் கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டால், மசோதா வெல்வது சந்தேகமே. அதேபோல இந்தக் கட்சிகள் பாஜக, இடதுசாரிகளுடன் கைகோர்த்துவிட்டால் மசோதா நிச்சயமாக தோல்வியடையும்.
இதையடுத்து முலாயம், லாலு, மாயாவதி ஆகியோருடன் மறைமுகமான பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் துவக்கியுள்ளனர். பேச்சுவார்த்தைகள் நீடித்தால், மசோதாவை இன்றைக்குப் பதிலாக வியாழக்கிழமை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யவும் மத்திய அரசு யோசித்து வருவதாகத் தெரிகிறது.
0 comments:
Post a Comment