Wednesday, December 21, 2011

வெற்றிப் பாதையில் பயணிக்கும் பாகிஸ்தான்


பங்களாதேஷத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி முன்னேறுகிறது. பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மிர்புரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 338 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்திருந்தது. யூனிஸ் கான் (48), மிஸ்பா (26) அவுட்டாகாமல் இருந்தனர்.

மிஸ்பா நம்பிக்கை:
நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணியின் யூனிஸ் கான் (49) அரைசத வாய்ப்பை இழந்தார். பொறுப்பாக ஆடிய கேப்டன் மிஸ்பா (70) நம்பிக்கை அளித்தார். அடுத்து வந்த ஆசாத் ஷபிக் (42), அப்துர் ரெஹ்மான் (24) ஓரளவு கைகொடுத்தனர். 

அத்னன் அரைசதம்:
மறுமுனையில் நிதானமாக ஆடிய அத்னன் அக்மல் (53) தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். உமர் குல் (11), சயீத் அஜ்மல் (0) ஏமாற்றினர். முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 470 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. வங்கதேசம் சார்பில் சாகிப் அல் ஹசன் 6, நஜ்மல் ஹொசைன் 2, இலியாஸ் சன்னி, ரோபியுல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

குல் மிரட்டல்:
பின், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, உமர் குல் வேகத்தில் திணறல் துவக்கம் கண்டது. இவரது துல்லிய பந்துவீச்சில் தமிம் இக்பால் (21), நபீஸ் (0) அடுத்தடுத்து வெளியேறினர். நஜிமுதின் (12), மகமதுல்லா (32), சாகிப் அல் ஹசன் (6) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச அணி 5 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் பின்தங்கி உள்ளது. பாகிஸ்தான் சார்பில் குல், சீமா தலா 2, அப்துர் ரெஹ்மான் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இன்று ஒருநாள் மட்டுமே மீதமிருப்பதால், வங்கதேச அணியின் எஞ்சிய ஐந்து விக்கெட்டுகளை, பாகிஸ்தான் பவுலர்கள் விரைவில் கைப்பற்றும் பட்சத்தில், சுலப வெற்றி பெறலாம்.

0 comments:

Post a Comment