Tuesday, December 20, 2011

வர்த்தக நிலையங்களில் விலை கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டுகோள்


(தென்கிழக்கு செய்தியாளர்) 
தென்கிழக்குப் பிரதேசத்திலுள்ள சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் மீது அதிகாரிகள் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். அண்மைக்காலமாக இப்பிரதேசங்களில் அதிகரித்த விலைகளுக்கு பொருட்களை விற்பனை செய்வதும், திகதி முடிவடைந்த பொருட்களை விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் விலைப்பட்டியல் மிகவும் சிறியதாக கடையின் ஒரு மூலையில் தொங்கிக் கொண்டிருக்கும். ஆனால் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படும். அத்துடன் வாராந்த சந்தை என்ற பெயரில் இயங்குகின்ற சில இடங்களிலும் இவ்வாறு அதிகரித்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றனர். அங்கும் இவ்வாறான விலைப்பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படுவதில்லை என்றும் கூறப்படுகின்றது.

மேலும், முடி திருத்தம் செய்யும் அலங்கார நிலையங்கள் தங்களுடைய சங்கங்கள் எடுத்திருக்கின்ற விலையைப் பட்டியல்களை தொங்கவிட்டு காட்சிப்படுத்தியுள்ளனர். இத்தொகை வருடந்தோறும் அதிகரித்துச் செல்கின்றது. சாதாரணமாக முடிவெட்டுவதற்கு ரூ200.00 வரையில் அறவிடுகின்றனர். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் என வித்தியாசமின்றி இத்தொகை அறவிடப்படுகின்றது. 

இந்நிலையை மாற்றியமைக்கும் நோக்குடன் உரிய அதிகாரிகள் இவ்வாறான விற்பனை நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் மீது கண்காணிப்பை மேற்கொண்டு நுகர்வோரின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என நுகர்வோராகிய பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றர்.

0 comments:

Post a Comment