இலங்கையின் கப்பல் பணியாளர்களும் கடற்றொழிலாளர்களும் அடுத்துவரும் சில தினங்களுக்கு காலநிலை குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக்கு தென்கிழக்காக 600 – 700 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் தாழமுக்கம் உருவாகி இருப்பதால் இந்த வேண்டுகோளை விடுப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பிரதம வானிலையாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.
இத்தாழமுக்கம் காரணமாக சில சமயங்களில் காற்று வீசும் வேகம் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீச முடியும் எனவும் அவர் கூறினார். இத்தாழமுக்கம் காரணமாக ஆழ்கடலில் கொந்தளிப்பு நிலமை காணப்படுகின்றது என்று கூறிய அவர் அடுத்து வரும் சில தினங்களுக்கு நாட்டில் பரவலாக மழை பெய்யமுடியும் எனவும் குறிப்பிட்டார்.
அதேவேளை வடக்கு, கிழக்கு, தென் மாகாணங்களில் காலை வேளைகளிலும் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலிலோ மாலை வேளையிலோ மழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணிநேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக்கூடிய மழை இரத்மலானையில் 65.7 மில்லி மீற்றர்களாகப் பதிவாகியுள்ளது.

0 comments:
Post a Comment