(நமது செய்தியாளர்)
ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தில் பல பெரிய பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தாண்டு தங்களுடைய பிள்ளைகளை எந்தப் பாடசாலையில் அனுமதிப்பது என்பதில் பெற்றோர்களுக்கு தெளிவின்மை காணப்படுவதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக ஒலுவில் அல்-ஹம்றா, பாலமுனை மின்ஹாஜ், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆகிய மகாவித்தியாலயங்கள் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் அமைந்துள்ள பெரிய பாடசாலைகளாகும். இப்பாடசாலைகள் ஒவ்வொன்றிலும் வருடந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தரம் ஒன்றிக்கு அனுமதி பெறுவார்கள்.
பெரிய பாடசாலை என்பதால் தூரப் பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் சேர்ந்து கற்பதற்கு வருவார்கள். ஆனால் தற்போது இப்பாடசாலைகளில் அடுத்தாண்டு (2012) தரம் ஒன்றிக்கு மாணவர்களை அனுமதிப்பதில்லை என்று கூறியுள்ள நிலையில் ஒவ்வொரு பாடசாலைகளுக்குமான ஊட்டப் பாடசாலைகள் என சில சிறிய பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அங்குதான் மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது.
ஆனால், இந்த ஊட்டப் பாடசாலைகளில் எவ்வித பௌதீக வசதிகளோ, ஆசிரியர் வசதிகளோ, கற்றல் நடவடிக்கைக்கான உபகரணங்கள் தொடர்பான வசதிகளோ முன்னரும் இல்லை. தற்போதும் இல்லை. இந்த நிலையில் புதிய மாணவர்களும் அனுமதிக்கப்படுகின்றபோது வசதிகள் அதிகரிக்கப்படும் என்கிற கதைகள் பேசப்படுகின்றவே தவிர எவ்விதமான அபிவிருத்திகளும் நடைபெறுவதாகவும் தெரியவில்லை.
இன்னும் சில நாட்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ஏற்கனவே இருக்கின்ற மாணவர்களுக்கே மேலுள்ள எவ்வித வசதிகளும் இல்லாதபோது புதிய மாணவர்களும் சேர்ந்து கொண்டால் மாணவர்களை எங்கே வைப்பது? அவர்களுக்கான இடம், கதிரை மேசை போன்ற எவ்வித வசதிகளும் இல்லாத நிலை காணப்படும்.
இப்போதாவது அது சம்பந்தமான ஏற்பாடுகள்கூட இந்த இணைப் பாடசாலைகளான ஊட்டப் பாடசாலைகளில் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லாத நிலையில் தங்களுடைய பிள்ளைகளை எங்கே அனுமதிப்பது என்பதில் ஒரு குழப்பகரமான சூழ்நிலை தோன்றியுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களுக்கு சரியான விளக்கம் ஒன்றை வழங்க உரிய அதிகாரிகள் முன்வரவேண்டுமெனவும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 comments:
Post a Comment