மனித உரிமைகளை அனுபவிப்பதில் தமிழ் மக்களுக்கு உள்நாட்டில் ஏமாற்றகரமான நிலைமையே நீடிக்கின்றது. இவ்வாறு ஜனநாயக கடமைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு ஜனநாயகக் கடமைகளுக்கான நிலையம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மனிதஉரிமைகள் என்பதுகுடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயம், பொருளாதார சமூக அரசியல் பற்றிய சர்வதேச சமவாயம் ஆகியவற்றின் கீழ் முன்மொழியப்பட்ட உரிமைகளே என இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும் சர்வதேச சமவாயங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதுமான பாதுகாப்புக்களை தமிழ் மக்கள் அனுபவிப்பதில் உள்நாட்டில் தொடர்ச்சியாக நெருக்கடிகளே நிலவுகின்றன. குறைந்தபட்சம் அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதில் கூட நடைமுறையில் எமது மக்கள் முன் இடையூறுகளே நிலவுகின்றன.
போருக்குப் பின்பான நிலையில்கூட எமது மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கிவரும் மனிதஉரிமை மீறல் பிரச்சினைகளுக்கு நியாயமோ தீர்வோ வழங்கப்படவில்லை. இன்று கூட யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோரின் விடயத்தில் நியாயம் கேட்டு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. காணாமல் போனோர் மற்றும் தகவலின்றித் தடுப்பில் உள்ளவர்கள் விடயத்தில் பொறுப்புச் சொல்லவேண்டியவர்கள் நாட்டில் அப்படியானதோர் பிரச்சினை கிடையாது என மூடி மறைக்கின்றனர். வடக்கு, கிழக்கில் காணாமல்போன பிள்ளைகள் மற்றும் தகவலின்றி தடுப்பில் உள்ளவர்கள் தொடர்பில் எங்குசென்று நியாயம் கேட்பதெனத் தெரியாது பொற்றோர் திண்டாடுகின்றனர்.
எமது தாய் மொழியில் அரச இயந்திரத்துடன் தொடர்புகொள்ள முடியவில்லை. சாதாரணமாக தனியார்துறை நிறுவனங்களில் தமிழில் தொடர்பு கொள்ளத்தக்க அளவு கூட அரச நிர்வாகத்துடன் தாய் மொழியில் பேசமுடியவில்லை. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மீளத் திரும்புவதற்கான சந்தர்ப்பங்கள் உரியமுறையில் இல்லை. போரின்போது இடம் பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட மெனிக்பாமில் இருந்து மீளத் தமது வாழ்விடங்களுக்குச் செல்ல முடியாதவர்களாக இன்றும் மக்கள் காத்திருக்கின்றனர். அடிப்படை வசதியற்ற இடைத்தங்கல் முகாம் வாழ்க்கையே நிரந்தர வாழ்க்கையாக மாற்றப்பட்டு மக்கள் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட அனுபவிக்க இயலாதவர்களாக வாழ்கின்றனர்.
முகாம்களில் சிறுவர் பெண்கள் விசேட தேவையுள்ளவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை. இதுதான் எமதுமக்களின் யதார்த்த நிலைமை. மனித உரிமைகளை அனுபவிப்பதில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக புறந்தள்ளப்படும் ஏமாற்றமே போருக்குப் பின்பும் காணப்படுகின்றது. இது கண்டிக்கத்தக்க விடயம். இவ்வாறு ஜனநாயகக் கடமைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment