
(நமது செய்தியாளர்)
பாலமுனை மாவட்ட வைத்தியசாலை மிகவும் பழைமையான ஒரு வைத்தியசாலை. ஆனால், இங்குள்ள நிருவாகிகளோ ஏனோதானோ என்று காணப்படுகின்றனர். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு துண்டு வழங்கவென பலர் காணப்படுகின்றனர். ஆனால் நோயாளிகள் வருகை தந்தால் அவர்களால் விரைவாக துண்டுகள் வழங்கப்படுவதில்லை. காரணம் கேட்டால் அப்படித்தான் என்பார்கள். ஐயா இன்னும் வரவில்லை என்பார்கள். அல்லது ஐயா உள்ளே வேலையாக இருக்கிறார் என்பார்கள். ஒருகாலத்தில் மிகவும் பிரபல்யமாக இருந்த இந்த வைத்தியசாலையின் நிருவாகக் கட்டமைப்புக்கள் ஒழுங்கின்றி காணப்படுவதற்கு யார் யார் காரணம் என்பது புரியவில்லை.
இவ்வைத்தியசாலையில் இடைத்தங்கள் பராமரிப்பு பிரிவு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அது அமைந்திருக்கும் வழியில் புற்பூண்டுகளால் காணப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. சுற்றிவர நீர் நிறைந்து காணப்படுகிறது. இது நுளம்புப் பெருக்கத்திற்கு வழிகோலும் எனவும் மக்கள் கூறுகின்றனர். இந்த ஊர்மக்கள் அக்கரைப்பற்று அல்லது கல்முனைக்கு செல்லவேண்டிய துர்பார்க்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மாவட்ட வைத்தியசாலை என்கிற அடையாளம்கூட தெரியாத நிலையில் பெயர்ப்பலகையும் பழுதடைந்து காணப்படுகிறது. நோயாளிகளின் பராமரிப்புக்கள் இவ்வாறு இருந்தால் அரசு கோடிக் கணக்கில் பணத்தை செலவு செய்து மருந்துகளையும், டாக்டர்களையும் தந்துள்ள போதிலும் அவை சரியான முறையில் மக்களை சென்றடைகின்றதா என்றால் இல்லை என்றுதான் கூறமுடியும். கிராமிய மக்கள் தங்களுடைய சிறிய வருத்தங்களுக்குக்கூட தனியார் வைத்தியசாலையை நாடவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதற்கு யார் காரணம்?
எனவே, இவ்வூரில் தற்போதைய அட்டாளைச்சேனைப் பிரதேச சபை உதவி தவிசாளர் அன்சில் அவர்களும், அமைச்சர் அதாஉல்லா அவர்களின் இணைப்பாளர் உபைத்துள்ளா அவர்களும் இருக்கின்றனர். இவர்களாவது இந்த வைத்தியசாலையின் அவலநிலையைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த வைத்தியசாலைக்கென அபிவிருத்தி அமைப்பொன்று இது வரை இல்லாமை பெரிய குறைபாடாகவும் காணப்படுகிறது.
இப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளாராக கடமையாற்றுகின்றார். அவரிடம் சென்றாவது இவ்வைத்தியசாலையின் அவலத்தைப் போக்க பாலமுனைப் பிரதேச இளைஞர்கள், கற்றவர்கள், அறிஞர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் ஆதங்கமாகும்.




0 comments:
Post a Comment