Saturday, December 17, 2011

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பரிணாமம்


(எஸ்.எம்.அறூஸ்) 
இலங்கை முஸ்லிம்களுக்கென்று தனியானதொரு அரசியல் கட்சி இல்லாமல் பெரும்பான்மைக் கட்சிகளில் அரசியல் செய்து கொண்டிருந்த முஸ்லிம்களை தனித்துவமிக்க அரசியல் சமூகமாக மாற்றியமைத்த பெருமை மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபையே சாரும். இலங்கை அரசியலில் இனத்துவ அரசியல் வெற்றியடையாத நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள் சிறுபான்மையினருக்கு எதுவுமே செய்ய மாட்டாது என்பதை உணர்ந்தே மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் இனத்துவ அரசியலை முன்னடுக்க தீர்மானித்தார்.

பச்சை, நீலம் என்று ஐக்கிய தேசியக் கட்சியிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலும் வேறூன்றி ஓட்டியிருந்த முஸ்லிம்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பக்கம் சாய்த்தடுத்த எம்.எச்.எம்.அஷ்ரபின் சாணக்கியம் இன்று அவர் மரணித்ததன் பின்னரும் பேசப்படுகின்ற வரலாறாக மாறியுள்ளது.

அண்மையில், காலமான சம்மாந்துறையின் மூடிசூடா மன்னன் அப்துல் மஜீத், கல்முனையின் மன்சூர், அட்டாளைச்சேனையின் டாக்டர் ஜலால்தீன், நிந்தவூர் எம்.எம்.முஸ்தபா, கிண்ணியா மஹ்றூப் மற்றும் ஏ.சி.எஸ். ஹமீத் போன்ற பிரபல அரசியல்வாதிகளை பின்தள்ளி அவர்களோடு இருந்தவர்களை தம் பக்கம் ஆக்கியதுதான் அஷ்ரபின் ஆளுமையாகும்.

அஷ்ரபின் ஆளுமையினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 1988ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் சுமார் 30 ஆசனங்களை பெற்றதன் மூலம் தனது அரசியல் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்திக் கொண்டது. அன்று ஆரம்பித்த முஸ்லிம் காங்கிரஸின் பயணம் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம் வரைக்கும் தெளிவான ஒரு கொள்கையுடன் முஸ்லிம் சமூகம் சார்ந்ததாகவே அமைந்தது.

சலுகைகள் வேண்டாம் உரிமைகள்தான் வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் 1994ஆம் ஆண்டு சந்திரிக்கா அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக மாறியது. உரிமை மாத்திரமல்ல அபிவிருத்தியும், இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பும் நமது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அஷ்ரப்பின் போக்கு முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தியதை இன்று ஒவ்வொருவரும் நினைவு கூறுகின்றனர்.


அதுமட்டுமல்ல அன்று இருந்த காலகட்டத்தில் இனத்துவக் கட்சியினூடாகவே முஸ்லிம்களை ஒன்றுபடுத்த முடிந்தது. ஆனால், இன்று பொதுக் கட்சியினூடாக முஸ்லிம்களை ஒன்றுபடுத்தலாம் என்பதோடு தமிழ், சிங்கள மக்களையும் ஒன்றினைத்ததாக கொண்டு செல்லலாம் எனக் கருதியே அஷ்ரப் தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கினார். அதில் வெற்றியும் கண்டார்.

குடும்ப வர்க்கமும், கல்வித் தகமையும், அரசியல் பின்னணியும் இருக்கின்றவர்களுக்கே அரசியல் என்றிருந்த நிலையை மாற்றியமைத்து சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அரசியல் செய்யலாம் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக வரலாம், வாகனங்கள் ஓடலாம் என்கின்ற நிலைப்பாட்டை உண்டாக்கிய அஷ்ரப் ஒரு மாமனிதர்தான். ஆனால், இன்று அவரின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் பல கூறுகளாக பிளவுபட்டுள்ளது. அஷ்ரபின் கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. அஷ்ரப் கண்ட தென்கிழக்கு மாகாணக் கனவு கதையே இல்லாமல் போய்விட்டது. மொத்தத்தில் இன்று முஸ்லிம் காங்கிரஸில் அஷ்ரப் கொள்கைகள் மறைக்கப்பட்டுள்ளது/ அழிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸில் இருப்பவர்களும் சரி, முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்தவர்களும் சரி அஷ்ரபின் கொள்கைகளை முன்னடுப்பதாகவே சொல்கின்றார்கள். தேர்தல் வந்துவிட்டால் மாத்திரம் அஷ்ரபின் படத்தைப் போட்டு போஸ்டர் அடிப்பார்கள். தேர்தல் முடிந்து விட்டால் அதேகதிதான். முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவர்களின் போக்கு எதுவாக இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடு பிழையாக அமையக் கூடாது, இந்தக் கட்சி ஒன்று இன்று இருப்பதற்கும், அந்தக் கட்சி மூலம் பதவியும் பட்டமும் அனுபவிப்பதற்கும் காரணமானவர் அஷ்ரபாகும்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு எந்தவித வேலைத்திட்டங்களும் முன்னடுக்கப்படவில்லை. அது தொடர்பாக கதைத்தவர்களை ரவூப் ஹக்கீம் கடிந்து கொண்டதாகவும் கதைகள் அடிபடுகின்றது. இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் கஸ்ட, நஷ்டங்கள் தெரியாததன் எதிரொலியாகவே இதனைப் பார்க்கலாம். தான் மரணிக்கும் வரைக்கும் இக்கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்பதுவே ஹக்கீமின் இன்றைய போக்காகும்.

அஷ்ரப் மரணித்ததன் பின்னர் நாடு தழுவியரீதியில் கட்சி புனரமைக்கப்படவில்லை. காலத்திற்குக் காலம் கட்சிக்குள் வருகின்ற பணம் படைத்தவர்களை கொண்டு தேர்தலில் வென்று விடலாம் என்கின்ற சிந்தனையிலேயே ஹக்கீமின் திட்டங்கள் அமைந்துள்ளது. அரசியலையும் ஒரு வர்த்தகமாகவே ஹக்கீம் செய்கின்றார். அது மட்டுமல்ல அஷ்ரபின் விசுவாசிகள் என்பவர்களை ஓரங்கட்டும் செயற்பாட்டிலேயே அவரது ஒவ்வொரு காரியமும் அமைவதாக கூறுகின்றனர்.


குறிப்பாக அஷ்ரப்புடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பிக்க பாடுபட்ட கட்சியின் ஸ்தாபகச் பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் முற்றாக ஓரங்கட்டப்பட்டுள்ளார். மர்ஹூம் அஷ்ரப் இன்று உயிருடன் இருந்திருந்தால் நிச்சயமாக கபூர் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பார். மு.கா.வின் வளர்ச்சிக்கு எஸ்.எம்.ஏ.கபூர் ஆற்றிய பணிகள் மறைக்கப்பட்டுள்ளது. 5 தடவைகள் இவரின் பெயர் தேசியப் பட்டியலில் இடம் பெற்றமையும் குறிப்பிட வேண்டியுள்ளது. ஆனால், அவரின் அட்டாளைச்சேனை வீட்டிற்குச் சென்றால் அங்கு தொங்க விடப்பட்டுள்ள பசுமையான புகைப்படங்கள் எல்லோர் மனதையும் நெகிழ வைக்கின்றது. இப்படி எத்தனையோ ஆரம்ப கர்த்தாக்களை ரவூப் ஹக்கீம் ஓரங்கட்டியுள்ளார்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் போக்கு இருக்கத்தக்கதாக முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகள் முஸ்லிம் பிரதேசங்களில் எவ்வாறான செல்வாக்கைக் கொண்டிருக்கின்றது என்று பார்ப்பதும் மிக முக்கியமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பிழையான பாதையில் செல்கின்றது என்ற விடயத்தை முன்வைத்து மாற்றுக் கட்சியை ஆரம்பித்தவர்கள் தங்களது பாதையை சரியான முறையில் கொண்டு செல்கின்றார்களா? அல்லது இல்லையா? என்பதும் மக்களுக்கு பயன்படும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதா? ஏன்ற விடயங்களும் ஆராயப்பட வேண்டியுள்ளது.

தேசிய ஐக்கிய முன்னணி தலைவியாக இருந்த பேரியல் அஷ்ரப் அக்கட்சியை கலைத்துவிட்ட நிலையில் தேசிய காங்கிரஸ் கட்சியும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரான அரசியலை இன்று செய்கின்றது. தேசிய காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தைப் பலமாகக் கொண்டு இயங்குகின்றது. அக்கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் உள்ளார். இவரைத் தவிர கிழக்கு மாகாண சபையில் அம்பாரை மாவட்டம் சார்பாக 3 உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டம் சார்பாக ஒருவரும் இக்கட்சியை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். இவர்களில் அமைச்சராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த தேசகீர்த்தி எம்.எஸ். உதுமாலெப்பை செயற்படுகின்றார்.


அது மட்டுமல்ல அக்கரைப்பற்று மாநகர சபையையும், அக்கரைப்பற்று பிரதேச சபையையும் தேசிய காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருக்கின்றது. இதனைப் பார்க்கின்றபோது அம்பாரை மாவட்டத்திலேயே இக்கட்சியின் செல்வாக்கு காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் முழுமையாகவும், கிழக்கிற்கு வெளியிலும் இக்கட்சியின் ஆதரவுத் தளம் இல்லாமலேயே காணப்படுகின்றது. இது இவ்வாறிருக்க, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வடக்கில் தனது அடித்தளத்தைக் கொண்டிருந்தாலும் இன்று கிழக்கிலும் பெரும் சக்தியாக உறுவெடுத்துள்ளதுடன் வட, கிழக்கிலும் கனிசமான ஆதரவைக் கொண்டுள்ளமை நிரூபிக்கப்பட்டு வருகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு நிகராக அரசியல் செய்யும் அமைப்பாக இன்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மாறியுள்ளது. இக்கட்சியின் தலைவராக உள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆளுமைமிக்க நேர்மையான ஒரு அரசியல் வாதியாக மதிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்ல மக்கள் நலனே தனது வழி என்று செயற்படும் ரிசாட் பதியுதீன் துடிப்புமிக்க ஒரு இளம் அரசியல் வாதியாவார்.

அவரது ஆளுமைமிக்க செயற்பாடுகளே மிகக் குறுகிய காலத்திற்குள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அமைச்சுப் பதவி கிடைத்தால் மக்களை மறந்து பணம் சேர்க்கும் வேலைகளில் ஈடுபடும் அரசியல் வாதிகளுக்கு மத்தியில், இரவோடு இரவாக தமது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட தனது மக்களுக்கு ரிசாட் பதியுதீன் ஆற்றும் பணிகள் எண்ணிலடங்காதவை. இவரது சேவையை மதித்தே மக்கள் இவருடன் சேர்த்து வன்னியில் ஹுனைஸ் பாறூக்கையும் பாராளுமன்ற உறுப்பினராக்கியுள்ளனர்.


எப்போதும் ஊடகவியலாளர்களுடன் அன்பாகப் பழகும் ரிசாட் பதியுதீன் அவர்களது முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுகின்ற ஒருவர் என பரவலாகச் சொல்லப்படுகின்றது. மர்ஹூம் அஷ்ரபிற்குப் பிறகு ஊடகவியலாளர்களுக்கு உதவி செய்கின்ற ஒரேயொரு அரசியல்வாதி அமைச்சர் ரிசாட் பதியுதீன் என்றால் அது மிகையில்லை. அம்பாரை மாவட்டத்தில் எத்தனையோ அரசியல்வாதிகள் இருக்கத்தக்கதாக அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலைக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான கனணி கூடத்தை அமைத்துக் கொடுத்திருக்கின்றார். அதுமட்டுமல்ல அவரது சக பாராளுமன்ற உறுப்பினரான ஹுனைஸ் பாறூக்குடன் இனைந்து மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடத்தையும் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

மிக இளம் வயதில் முஸ்லிம் கட்சியொன்றின் தலைமைப் பதவியைப் பொறுப்பெடுத்துள்ள இவர் அப்பொறுப்புக்களை சிறப்பாக செய்து வருகின்ற சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தில் பாரிய சவால்களைக் கூட சந்திக்க நேரிடலாம். அதற்கு தன்னை அவர் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். ரிசாட்டைப் பொறுத்தவரை அவருக்கு பக்க பலமாக கட்சியில் பலரும் உள்ளனர். அந்த வகையில், கிழக்கின் அரசியல் விடிவெள்ளியாக மதிக்கப்படும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபையிர், கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் போன்றவர்களின் கடின உழைப்பும் செல்வாக்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்குக் காரணமாகும்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் தலைவர் ரிசாட் பதியுதீனை சேர்த்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஹுனைஸ் பாறூக் ஆகியோர் உள்ளனர். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாக மூன்று பேர் உள்ளனர். அவர்களில் எம்.எஸ். சுபையிர் அமைச்சராக இருக்கின்றார். அதேபோன்று பல பிரதேச சபைகளையும் அக்கட்சி கைப்பற்றியுள்ளது.


அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவிருந்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாமல் மறுக்கப்பட்டது அக்கட்சிக்கு பெரும் இழப்புத்தான். இருந்தாலும் அரசாங்கத்துடனான நல்லிணக்கத்தை கருத்திற்கொண்டு பொறுமையோடு இருக்கின்றனர். இந்த விடயத்தில் அரசாங்கம் நடந்துகொண்ட விதம் கண்டிக்கப்பட வேண்டியதாகும். இந்த வருடத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இனைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பல பிரதேசங்களில் மக்கள் ஆதரவைப் பெற்றள்ளதோடு, கூடுதலான உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் இக்கட்சியின் தேசிய பரிணாமத்திற்கு வலுச் சேர்த்துள்ளது. அதன்படி இத்தேர்தலை சற்று பின்னோக்கிப் பார்ப்பது சாலப் பொறுத்தமாகும் என நினைக்கின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சிகள் அரசாங்கத்துடன் சேர்ந்தும் தனித்தும் போட்டியிட்டிருந்தன. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து மாத்திரமே போட்டியிட்டது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனித்து அம்பாரை மாவட்டத்தில் நான்கு சபைகளையும் அரசுடன் இணைந்து மூதூர் பிரதேச சபையினையும் கைப்பற்றியது. ஏனைய இடங்களில் கூடுதலான உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. தேசிய காங்கிரஸ் அக்கரைப்பற்று மாநகர சபையையும், அக்கரைப்பற்று பிரதேச சபையையும் கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி நகரசபை மற்றும் ஒட்டமாவடி பிரதேச சபை, முசலி பிரதேச சபை போன்ற முஸ்லிம் சபைகளையும் வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச சபையையும், கிண்ணியா நகர சபையின் தவிசாளர் பதவியினையும் பெற்றுள்ளது.

இவற்றிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் எதிர் அரசியல் சக்தியாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வளர்ந்துள்ளது தெளிவாகின்றது. இதனால்தான் என்னவோ தங்களது கட்சியின் பெயரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியாக மாற்றியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடிப் பிரதேச சபையில் அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 8,816 வாக்குகளைப் பெற்று 7 உறுப்பினர்களைப் பெற்றுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ வெறும் 966 வாக்குகளைப் பெற்று ஒரு உறுப்பினரையே பெற்றுள்ளனர். இதிலிருந்து முன்னால் அமைச்சர் அமீரலியின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.


கடந்த பொதுத் தேர்தலில் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் தனக்குப் போட்டியாக இருந்த முன்னாள் தவிசாளர் லெப்பை ஹாஜியார் போட்டியிடாததும், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தருவதாக வாக்குறுதியளித்த ரவூப் ஹக்கீம் அதனை வழங்காமல் ஏமாற்றியதனாலும் மக்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பெரும்பான்மையாக ஆதரித்துள்ளனர்.

கல்குடா தொகுதியின் அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் பெரும் பங்காற்றிய அமீரலி கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, லெப்பை ஹாஜியாருக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும். இன்று ஹக்கீமின் பொய் வாக்குறுதிக்கு மக்கள் அளித்த பதிலடியாகவே தேர்தல் முடிவு காட்டுகின்றது. அதுமட்டுமல்ல மக்களின் போக்கினை விளங்கிக்கொண்ட லெப்பை ஹாஜியார் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸோடு இன்று இணைந்து கொண்டுள்ளார்.

காத்தான்குடி நகர சபையும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வசமாகியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்ற காத்தான்குடி மண் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கோட்டையாகும் ஹிஸ்புல்லா எந்த அணியில் இருக்கின்றாரோ அந்த அணியின் தளமாக காத்தான்குடி நகரசபை மாறுவதே வரலாறாகும். இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்  10,357 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைக் கைப்பற்றியது. முஸ்லிம் காங்கிரஸ் 1,429 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றுள்ளது. காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண சபை உறுப்பினராக முபீன் இருந்தும் பாரிய வீழ்ச்சியினை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ளது.


காத்தான்குடி நகர சபையின் தலைவராக அஸ்வர் நியமிக்கப்பட்டு சிறந்த சேவையினை செய்து வருகின்றார். முஸ்லிம்களின் முக வெற்றிலையாகக் கருதப்படும் காத்தான்குடியும் ஹிஸ்புல்லாவின் செல்வாக்கினால் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வசமாகியிருக்கின்றது. கிண்ணியா நகரசபையின் தவிசாளர் பதவியும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வசமாகியுள்ளது. இக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஒரே ஒரு வேட்பாளரான எம். மஹ்றூப் ஹில்மி 3,283 விருப்பு வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தைக் கொண்டுள்ள ஹில்மி போன்ற இன்னும் பலரையும் கட்சிக்குள் உள்வாங்கி சிறந்த கட்டமைப்பினை ஏற்படுத்துவார்களாயின் கிண்ணியாவில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை தடம் பதிக்கலாம். இங்கு மு.கா. சார்பில் ஒரு உறுப்பினரே தெரிவாகியுள்ளார். 

வன்னி மாவட்டத்தில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட முசலி பிரதேச சபையினையும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கைப்கற்றியுள்ளது. முசலி பிரதேச சபையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 5,052 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. கடந்த 25 வருடத்திற்குப் பிறகு முசலியில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் மூலம் மக்கள் நிருவாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று அங்கு பாரிய அபிவிருத்தி வேலைகள் ரிசாட்டினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீனின் ஆற்றிய சேவைகளை அம்மக்கள் மறக்கவில்லை என்பதை இவ்வெற்றி எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகின்றது. இங்கு தேசமான்ய எஹியான் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மு.கா. 2,202 வாக்குகளைப் பெற்று இரண்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.

வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச சபையினையும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இது சிங்கள மக்களும் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதேபோன்று மாந்தை மேற்கிலும் ஏனைய சபைகளிலும் கூடுதலான உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர். இதன்படி வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் நடைபெற்ற 9 பிரதேச சபைகளிலும் ஒரு நகர சபையிலும் சேர்த்து மொத்தமாக 28 உறுப்பினர்களை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ளது.

இதேபோன்று, மலையகத்தின் வலப்பனை, கொத்மலை, அம்பகமுவ பிரதேச சபைகளிலும் 7 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். மட்டக்களப்பின் ஏறாவூர் நகர சபையை அலிசாஹிர் மௌலானா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பெரும் பங்காற்றியுள்ளது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான எம்.எஸ். சுபையிரின் செல்வாக்கு ஏறாவூரில் அதிகரித்திருப்பதையே இது காட்டுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சருமான பஷிர் சேகுதாவுத்pன் சொந்த இடமே ஏறாவூராகும்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைத்த ஒரே ஒரு பிரதியமைச்சுப் பதவியையும் ஹக்கீம் அம்பாறைக்கு வழங்காமல் பஷிர் சேகுதாவுத்திற்கு வழங்கியும் மு.கா. ஏறாவூரில் படுதோல்வியே கண்டுள்ளது. இதிலிருந்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வன்னி மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம், திருகோணமலை மாவட்டம் போன்ற இடங்களில் கூடுதலான வெற்றிகளைப் பெற்றுள்ளது. அம்பாரை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபையில் ஒருவருமாக மொத்தமாக 51 உறுப்பினர்களைப் பெற்றுள்ளனர். மேற்படி மூன்று மாவட்டங்களிலும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான கட்டமைப்புடன் செயற்படுகின்றதோ அதேபோன்று அம்பாரை மாவட்டத்திலும் செயற்படுத்தப்படுமாயின் முஸ்லிம்களின் nரும்பான்மையைப் பெற்ற கட்சியாக எதிர்காலத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மாற வாய்ப்பேற்படலாம்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் இடம்பெறுகின்றனர். தமிழ், முஸ்லிம், சிங்கள இனங்களின் நன்மதிப்பைப் பெற்ற சேவையின் சிகரமாக வடபுல முஸ்லிம்களினால் போற்றப்படுகின்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைவராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹீம் எம்.எச்.எம். அஷ்ரபினால் சிறந்த நிர்வாகியாக  பெயரெடுத்த வை.எல்.எஸ். ஹமீட் செயராளராகவும், பிரதித் தலைவராக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும், தவிசாளராக முன்னால் அமைச்சர் அமீரலியும் செயற்படுகின்றனர். தேசிய அமைப்பாளராக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரான எம்.எஸ்.சுபையிர் மற்றும் முன்னால் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன் போன்ற இன்னும் பலரும் இடம்பெறுகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதிலிருந்து விலகிச் செல்வதாகவும், ரவூப் ஹக்கீம் தன்னிச்சையாக நடக்கின்றார் என்று கூறி அக்கட்சியிலிருந்து விலகிய இவர்கள் ஜனநாயக வழியில் மக்கள் மேம்பாட்டிற்காக  அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை கொண்டு செல்வார்களாயின்  மக்கள் இக்கட்சியின் பின்னால் அணிதிரள வாய்ப்பேற்படலாம். உள்ளுராட்சி சபைத் தேர்தல் மூலம் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றுள்ள அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியான செயற்பாடுகளை சகல இடங்களிலும் மேற்கொள்ளுமாயின்  பெற்ற வெற்றியினை தக்கவைத்துக்கொள்ளலாம். இல்லாதுவிடின் தேர்தலுக்காக மாத்திரம் மக்கள் காலடிக்கு வருகின்ற கட்சியாக இருக்குமாயின் பெற்ற ஆதரவைக்கூட இழக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம். முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  தனது செல்வாக்கினை இழந்துள்ளதாகவும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் அவ்வப்போது ஊடகங்களில் தெரிவித்து வருகின்றார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக், கிழக்கு மாகாண சபை பரீத், சட்டத்தரணி என்.எம். சஹித் ஆகியோரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பெரும் பலமாக உள்ளனர். அமைச்சர் ரிசாட் பதியுதீன் கிழக்கில் தனது செயற்பாடுகளை பரவலாக்குவதன் மூலமும், முஸ்லிம்களின் உரிமைகளைப் பெறுவதற்கு முன்னிற்பதன் மூலமும் தேசியத் தலைவராக பரிணாமம் பெறலாம் அமைச்சுப் பதவிக்காக முஸ்லிம்களின் உரிமைகளைப் பெறுவதில் பின்நிற்பாராயின் ஒரு கட்சியின் தலைவராகவே அவரால் பரிணமிக்க முடியும். அது மட்டுமல்ல அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகூட தேசிய கட்சியாக பரிணமிக்க முடியாமல் போய்விடும்.

ஆனால், முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தனது அமைச்சுப் பதவியைக் கூட துக்கியெறியும் நிலையிலும் ரிசாட் இருப்பதாக சொல்லப்படுகின்றது. வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கு தடையாக இருப்பவர்களுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுத்து வருகின்றார். அதனால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ரிசாட்டின் மீது குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றனர். மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பிற்குப் பிறகு முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்கக் கூடிய தகுதி அமைச்சர் ரிசாட் பரியுதீனுக்கு மாத்திரமே இருப்பதாக சொல்லப்படுகின்றது. 

கிழக்கு மாகாணம்தான் முஸ்லிம் காங்கிரஸை தூக்கி நிறுத்தியது. ஆனால், இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் படு தோல்வியடைந்து வெறும் 6,000 ஆயிரத்திற்குட்பட்ட வாக்குகளையே மு.கா. பெற்றுள்ளது. அதேபோன்று திருகோணமலை மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் படுதோல்வியடைந்து ஒரே ஒரு சபையினை மாத்திரம் கைப்பற்றியுள்ளது. அம்பாரை மாவட்டத்தில் மாத்திரம்தான் தமது ஆதரவை ஒரளவு தாக்கவைத்துள்ளனர்.

இதனடிப்படையில் பார்க்கின்றபோது, 2013ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கிழக்க மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் படுதோல்வியினை சந்திப்பதுடன் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூலம் முஸ்லிம் முதலமைச்சரை பெறம் வாய்ப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் அ.இ.மு.க. தலைவர் ரிசாட் பதியுதீன் தனது செயற்பாடுகளை கிழக்கில் முன்னுரிமைப்படுத்த முனைய வேண்டும். முதலமைச்சரைப் பெறுகின்ற விடயத்தில் முஸ்லிம் கட்சிகளோடு மாத்திரமல்ல தமிழ் கட்சிகளோடும் பாரிய சவால்களை அ.இ.மு.க. கட்சி சந்திக்க நேரிடலாம்

இப்போதிருந்தே, கிழக்கில் ஒவ்வொரு பிரதேசத்திலும் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு மத்திய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அறிக்கை விடுக்கின்றவர்களை வைத்துக் கொண்டு கட்சியை ஒரு போதும் கட்டியெழுப்ப முடியாது என்பதை அமைச்சர் ரிசாட் பதியுதீன் விளங்கி வைத்துக் கொள்ளவேண்டும். மக்கள் ஆதரவைப் பெற்றவர்களை கட்சிக்குள் உள்வாங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசியக் கட்சி என்ற பரிணாமத்தைப் பெறமுடியும்.

உங்களது கருத்துகளுக்கு aroos27@gmail.com

0 comments:

Post a Comment