(தென்கிழக்கு செய்தியாளர்)
அண்மைக் காலமாக ஆசிரியர்களது இடமாற்றம் சம்பந்தமான பேச்சுக்களும் இடமாற்றங்களும் நடைபெற்று வருகின்ற நிலையில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பல அதிபர்கள் தங்களுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு எவ்விதமான இடமாற்றங்களும் இல்லை. அவர்களுக்கு பிடித்தமான ஆசிரியர்களை தெரிவு செய்வதும், பிடிக்காதவர்களை விலக்குவதுமாக காணப்படும், இவ்வாறான அதிபர்களுக்கு ஏன் இடமாற்றம் வழங்குவதில்லை.
பல பாடசாலைகளில் பல அதிபர்கள் நீண்டகாலம் சேவையாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஏன் இடமாற்றம் வழங்கப்படுவதில்லை. அண்மையில் கல்வி அமைச்சு அதிபர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்படும் என அறிவித்தும் அவர்களுக்கு மாகாண அமைச்சோ, மத்திய அரசோ இடமாற்றங்களை செய்யவில்லை. பல அதிபர்கள் இதனைச் சாட்டாக வைத்துக் கொண்டு தங்களுடைய இஷ்டத்திற்கு பாடசாலைகளை ஆட்டுவிக்கின்ற ஒரு நிலையும் காணப்படுகிறது.
சில பாடசாலைகளில் நீண்டகாலமாக பாடசாலை அபிவிருத்திக் குழுத் தெரிவுகளோ, ஏனைய கணக்கு, வழக்குகளோ காட்டாது காணப்படுகின்ற பாடசாலையின் அதிபர்களும் இருக்கின்றனர். அடிக்கடி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஆசிரியர்களை மாற்றுவது போன்று அதிபர்களையும் மாற்றுகின்றபோது அப்பாடசலையிலுள்ள அனைத்து விடயங்களும் புதுப்பொழிவு பெறுவதற்கு அதிபர்களது இடமாற்றம் வழிவகுக்கும் என்பது பொதுசனங்களின் அபிப்பிராயமாகும்.
அதேவேளை, அண்மையில் தென்கிழக்கு பிரதேசப் பாடசாலைகள் சிலவற்றிலிருந்து நீண்டகாலம் சேவையாற்றிய அதிபர்கள் சிலர் ஓய்வூதியத்திற்கு சென்றனர். ஆனால், பரிதாபம் என்னவென்றால் அப்பாடசாலைகளுக்கு அதிபர்களைத் தேடி ஓடவேண்டிய நிலைக்கு அந்தப்பாடசாலை நிர்வாகம் கஷ்டப்பட்டதை அவதானிக்கக்கூடியதாய் இருந்தது. எனவே, இந்நிலை மாற்றம் பெறவேண்டுமானால் அதிபர்களுக்கும் இடமாற்றத்தை வழங்கவேண்டுமென்பதே மகாஜனங்களின் பொது அபிப்பிராயமாகும்.
0 comments:
Post a Comment