Wednesday, December 14, 2011

விலங்குகளாக மாறும் தருணங்கள்


(இந்தியாவிலிருந்து சோமா) 
படித்தவன் என்கின்ற முறையில் மட்டுமில்லாது, தனிமனித ஒழுக்கத்தை ஓங்கி உரைக்கும் நல்ல சூழ்நிலையையும் சமூகத்தையும் உடன் கொண்டவன் என்கின்ற முறையில் எனக்கான ஒழுக்கம் ஓம்பப்படுகிறது. விரைவில் உணர்ச்சிவயப்பட்டுவிடக் கூடாத நிலைகளை சோதித்து தோற்பதில் வெளிப்பட்டுவிடுகிறது எனக்கான விலங்கு குணமும் ஒழுங்கீனமும்.

கோபத்தின் உச்சத்தில் வெளிப்படும் உணர்ச்சியின் வேகம் நம்முடைய கட்டுப்பாட்டை இழக்கச் செய்கிறது. உயிராகவும் உயிரின் மேலாகவும் போற்றும் விசயங்கள் மற்றவரின் நகைப்புக்குள்ளாக்கப்படும் போது நம்மையும் மீறி நம் ஆழ்மன விலங்குகள் விழித்துக் கொள்கின்றன. அந்த ஆழ்மன விலங்குகள் நம்முடைய தற்காலிகக் கோபத்தை உணர்ச்சி வேகத்தில் வெளிப்படுத்தி நம்மின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து உணர்ச்சியின் அடுத்தநிலையை அடையாதவாறு நம்மை மழுங்கடிக்கச் செய்கின்றன.ஆனால் பெருத்த வருத்தத்தை நமக்குள்ளேப் பூட்டி வைத்துக் கொள்ளாமல் உடனே வெடிக்கச் செய்து மறைமுகமாக நம்மை ஆசுவாசம் கொள்ளச் செய்கின்றன. 

உடனே உணர்ச்சியைக் கொட்டி தற்காலிகமான அடுத்த கட்ட உணர்வைக் கட்டுப்படுத்தக் கூடிய விசயங்களை கையாளாமல் இருப்பதில் இருக்கிறது நமக்கான வலிமை. கோபம் தெறிக்கும் சமயங்களில் கொச்சை வார்த்தைகளிலும், உடல் பால் உறுப்புகளின் பெயர்களைக் கொண்டும், உறவுகளைக் கொச்சைப்படுத்தக் கூடிய இன்னும் பிற வழக்கு மொழிகளையும் கொண்டு எதிராளியை திட்டித் தீர்ப்பது அப்படிப்பட்ட விசயங்களில் ஒன்று. விரைவில் நம்முள் இருக்கும் கோபத்தைத் தணிக்கச் செய்வதற்கான கட்டுப்பாடு இழந்தவர்களின் மாற்று வழி.

கடந்த 30 வருட வாழ்நாளில் நான் கட்டுப்பாடு இழந்த தருணங்கள் என்று எண்ணுகையில் மூன்று தருணங்கள் என் நினைவில் நிற்கின்றன. முதலாவது 1999, கார்கில் போர் நடந்த போது, மூன்று மாதங்கள் சென்னையில் இருந்தேன். சென்னையின் புது வாசம். என் அண்ணனின் சென்னை நண்பர்களோடு பழக்கம் கொண்டதில் சென்னைக்கான அந்த ஒற்றை வார்த்தை என்னையும் ஒட்டிக் கொண்டது. உணர்ச்சி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத பருவம், பக்குவமின்மை. பாகிஸ்தான் படையினரைக் கொன்று வீழ்த்திட வேண்டும், பாகிஸ்தானியரே இல்லாது செய்து விட வேண்டும் என நித்தமும் வாய்ச் சவடால்களில் விழித்திருந்த எங்களுக்கான இரவுகள். மற்ற அண்ணன்மார்கள் பால் உறுப்புகளின் பெயர்களைக் கொண்டு பாகிஸ்தானியர்களைத் திட்டித் தீர்ப்பார்கள். அவர்களின் ஆக்ரோசங்கள் வார்த்தைகளாய் வந்து விழும்.


அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கான மனம் எனக்கில்லை. ஆனாலும் என்னுடைய ஆக்ரோசத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாய் என்னை ஆக்கிரமித்த ஒற்றை வார்த்தையை அதிகம் பயன்படுத்தினேன். ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் அந்த ஒற்றைச் சொல் வந்து ஒட்டிக் கொண்டது. நான் உபயோகித்த அந்த ஒற்றைச் சொல்லின் எண்ணிக்கையைக் கணக்கிட்டிருந்தால் அது பாகிஸ்தானியப் படை வீரர்கள் மற்றும் தீவிரவாதிகளின் அம்மாக்களின் எண்ணிக்கையை விட அதிகமாய் இருக்கக்கூடும்.

இரண்டாவது முறை எனக்கான கோபம் வரம்பு மீறி என்னையேத் தின்றபோது ஒரு நபரை பால் உறுப்புகளின் பெயர்களைக் கொண்டு திட்டித்தீர்த்தேன். தனி நபர் நம்பிக்கை சார்ந்த விசயத்தில் அவர் மீதான நம்பிக்கையைத் தொலைத்த சமயம். வாழ்நாளுக்கும் அதிகப்படியான கொச்சை வார்த்தைகளைக் கொட்டியதில் இருவருக்கான மனங்களும் அசிங்கப்பட்டது. கொட்டிய தருணம் தொலைத்து மீழ்கையில் என் அசுரன் இரத்தம் சுவைத்த நாக்கோடு என்னை விட்டு விலகினான். தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. வடுவைப் பெற்றவர் மறந்தாரா தெரியவில்லை. இன்னும் வடுக்களைச் சுமந்து கொண்டு அலைகிறேன். கொட்டிய வார்த்தைகளை எங்ஙனம் அள்ளுவது?

ஈனப் பிழைப்பு நடத்தும் சில சகுனிகள், சில எட்டப்பர்கள், சில மத்திய மாநில அரசில் பொறுப்பு வகிக்கும் மலையாளிகள். இவர்களில் எவரையும் திட்டி நான் என்னை ஆசுவாசப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை. இவர்கள் மீதான கோபம் இன்னும் உயிர்ப்பு நிலையிலேயே இருக்கிறது. இன்று எனது ஊரின் வாழ்வாதாரத்திற்கு உலை வைக்கின்ற அதே மலையாளிகள். அதற்கு சப்பைக் கட்டுவதற்கு ஒரு மத்திய அரசுக் கூட்டம். என்னடா கூட்டம் கூட்டமா உன் ஊர்க்காரனு காட்டுக்குள்ளே போறானுகன்னு விசாரிப்பு அலுவலக நண்பர்களிடமிருந்து. மற்ற மாவட்டத்துக்காரர்களுக்கு இங்கே என்ன நடக்கிறது என்றேத் தெரியவில்லை. அவர்களுக்கு அக்கறையும் இல்லை. அவசியமும் இல்லை.

எல்லோருக்கும் புரியற மாதிரி சொல்லனும்னா "பெரியார் அணையில இருந்து அவனுக விடுற மூத்திரத் தண்ணியக் குடுச்சுதான் அஞ்சு மாவட்டத்துக் காரனுக உயிர் வாழுறோம். அதுவும் நின்னு போச்சுனா வானம் பார்த்த பூமியாயிடும். அப்புறம் மற்ற மாவட்டத்துக்கு அகதிகளா, வேலை தேடியோ இல்ல திருடித் தின்னவோ கிளம்ப வேண்டி வரும்". 


படித்தவர்கள் மேம்போக்காய்ச் சொல்லும் செய்தி. அரசியல் பண்றானுகளோ? இடுக்கி தேர்தலை ஒட்டிய அரசியல் சாயம் மலையகத்தில் தான் இருக்கிறதே ஒழிய இங்கு இல்லை. சின்னமனூரிலே ஒரு டிஎஸ்பி மைக்கிலே கேட்டாராம். எந்த உதவியாக இருந்தாலும் கேட்கலாம் என்று. 17 வயது முதிராத சிறுவன் ஒரு உதவி கேட்டிருக்கிறான். ஒருவரைக் காணவில்லை என்றும் அவரைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும். அச்சிறுவனின் வேண்டுதலை போலிஸார் ஏற்றார்களோ இல்லையோ. ஊர் மக்கள் எல்லொரும் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மாவட்டமெங்கும் அவரைப் பற்றிய போஸ்டர்கள். ஆரூண் என்பவரைக் காணவில்லை. அவர் பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது கூடுதல் தகவல். கடந்த 10 நாட்களில் கட்சி கரை வேட்டி உடுத்திக் கொண்டு எவரும் பொது இடத்திற்கு வரவில்லை.

கரை வேட்டியையும் தாண்டிய வாழ்வுக்கான போராட்டம். தலைவனுக்காக உயிரைக் கொடுக்கும் எந்தத் தொண்டனும் என் ஊரில் இல்லை. யாரையும் வர விடவும் இல்லை. தொலைக்காட்சியில் கண்டிருக்கக்கூடும் செருப்புகள் பறந்ததை. நாளை முதல் கட்சியின் பெயரைக் கூறிக் கொண்டு சிலர் வருகிறார்கள். ஆனால் யாரும் தேனி நகரைத் தாண்டி மாவட்டத்துக்குள்ளே நுழைய முடியாது. எல்லா ஊர்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

சாதிக்காரர்கள் எனவும், தெருக்காரர்கள் எனவும், ஊர்க்காரர்கள் எனவும், விவசாயத் தொழிலாளர்கள் எனவும், கட்டிடத் தொழிலாளர்கள் எனவும், கல் உடைப்பவர்கள் எனவும், சிறு வணிக வியாபாரிகள் எனவும் பிரிந்து நின்ற அமைப்புகள் ஒன்று கூடி நிற்கிறது. கூடலூரான், கம்பத்தான், பாளையத்தான், பட்டிக்காரன் என ஊர் வாரியாய் பெருமை பேசித் திரியும் என் சோட்டுப் பசங்களைப் பதம் பார்த்த எங்களது வீச்சருவாளும், வேல் கம்புகளும், சூரிக்கத்திகளும் ஒன்றாய் கேரளம் நோக்கிப் பயணிக்கிறது. 'பொட்டச்சிகள்' எனப் பேசப்பட்டு அடக்கி வைக்கப்பட்டவள்கள் இன்று தலைமை தாங்கி நடக்கிறாள்கள். தலைமை என்று யாரும் இல்லாத, முன் யோசனைகள் இல்லாத, காட்டுமிராண்டித்தனமான பெரும் யானைகள் கூட்டமாய் நடந்து செல்கிறார்கள். போலிசார் மிரள்கிறார்கள்.

அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியவில்லை. குமுளி செல்லும் கூட்டத்தைப் பின் தொடர்ந்து போலிசார் சுமார் 2000 பேர் கூடலூர் லோயர் கேம்பிலே வந்து குவிய, 2000 பேரையும் சுற்றி வளைத்து ஊரோடு பிணையத்தில் வைத்து விட்டு கம்பம் மக்களுக்குத் தகவல் தருகிறார்கள். கம்பம், சுருளிப்பட்டி, காமையகவுண்டன் பட்டி, நாராயணதேவன் பட்டி, குள்ளப்பகவுண்டன் பட்டி என கூட்டம் கம்பம் மெட்டு வழியே விரைகிறது. அனைத்து ஊர் காவல் நிலையங்களும் மக்கள் கட்டுப்பாட்டில். மாவட்டத்தின் மற்றப் பகுதிகளில் மிஞ்சி இருக்கும் போலிசார் கம்பம் மெட்டு வர, அவர்களைச் சுற்றி வளைத்த பொதுமக்கள் பாளையம், தேவாரம், கோம்பை சுற்றிய கிராமங்களுக்குத் தகவல் சொல்ல அவர்கள் போடி மெட்டு நோக்கி விரைகிறார்கள். போலிசார் விரைவாக பயணம் செய்ய முடியாதவாறு சாலைகளின் குறுக்கு நெடுக்காக மரங்களை வெட்டி வீழ்த்தியிருக்கிறார்கள்.

பெரிய கருங்கற்களை சாலைகளில் குவித்து வைத்து போலிசாரின் வாகனங்கள் எங்கும் முன்னேறாதவாறு முடக்கியிருக்கிறார்கள். எங்கிருந்து புறப்படுகிறார்கள், எதை நோக்கிப் புறப்படுகிறார்கள் என யாருமே அறிந்து கொள்ள முடியாதபடி பயணங்கள். செய்தித் தாள்களில் படித்த மக்கள் புரட்சிகளின் ஆரம்ப நிலைகளையும், தீவிர நிலையை அடைந்து வன்முறையாளர்களாகும் தருணங்களையும் உள் வாங்குகிறேன். ஊர்ப் பெருமையென பிதற்றுகிறேன் என எண்ண வேண்டாம். இறுதியில் தோல்வியைத்தான் சந்திக்கப் போகிறோம் என்று தெரியாமல் இல்லை.

மத்திய அரசோ மாநில அரசோ நினைத்தால் நிலைமையை எளிதில் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஸ்பெக்ட்ரம் ஊழல் மறைப்பதற்கு/மக்கள் மறப்பதற்கு கூடங்குளம் தேவைப்பட்டது. நாளை மன்மோகன் சிங் ரஷ்யாவிலே கூடங்குளத்தின் இரண்டாம், மூன்றாம் வளர்ச்சி நிலைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார். இப்பொழுது கூடங்குளம் மறக்கப்பட வேண்டும். பெரியார் அணைப் பிரச்சினை பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. பின்பு ஒரு துப்பாக்கிச்சூடு போதும், மேலும் வன்முறைகள் நடக்காமல் தடுப்பதற்கு. ஆனால் அப்படி ஏதும் நடந்து விட்டால் விளைவு இன்னும் கோரமாய் முடியும். சரி. இப்படி காட்டுமிராண்டித்தனமாய் நடந்து கொண்டால், தண்ணீர் கிடைத்து விடுமா? என் ஊர்க்காரன் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அர்த்தமானது. இன்னும் எத்தனை காலத்திற்கு அவர்களை
எதிர்பார்த்துக் கிடப்பது. நாம் செத்தாலும், நம் பேரப்பிள்ளைகளாவது வாழட்டும்.

நாங்கள் தோற்றுப் போவதற்காய் வருத்தப்படப் போவதில்லை. தொலைக்காட்சியிலே பார்க்கின்ற மக்கள் கூட்டம் என்பது மொத்தத் தேனி மாவட்ட மக்கள் அல்ல. முதல் நாள் கூடலூர், கம்பம், சுருளிப்பட்டிகாரர்கள் மட்டும் என 50000 பேர்கள். அடுத்த நாள் கம்பம் பள்ளத்தாக்கு முழுதும் என ஒரு இலட்சம் பேர்கள். அடுத்த நாள் பளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் இணைந்தன. அடுத்த நாள் சின்னமனூர், அடுத்த நாள் தேவாரம், கோம்பை என இரண்டு இலட்சம் பேர் தங்களின் சுய நினைவோடு சகோதரப் பாசத்தில் இணைந்திருக்கிறார்கள். போடி, வீரபாண்டி, தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, வைகை அணை ஆகிய ஊர்க்காரர்களும் அதைச் சுற்றிய கிராமத்தவர்களும் இன்னும் இணையவில்லை. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அவர்களும் இணைந்து விட்டால் மொத்த மாவட்டத்துக் குள்ளும் ஒரு பிணைப்பு இருக்கும்.


தலைமுறைக்குமாய் இந்த ஒற்றுமையை என் பேரப்பிள்ளைகளிடம் சொல்லிச் சிலாகித்து மாண்டு போவேன் என் மண்ணிலேயே. தமிழர்களும் ஒற்றுமையாய் இருந்திருக்கிறார்கள் என வரலாறு எழுதக்கூடும். அதனால் தோற்றாலும் பரவாயில்லை. போராடுவோம். ஆதலால் வேடிக்கைப் பார்க்கும் சக இனத்தவர்களே, உங்கள் யாரையும் போராட்டத்திற்கு அழைக்கவில்லை. நீங்கள் உங்களது அன்றாட வேலைகளில் கவனம் செலுத்துங்கள். தயவுசெய்து கூடங்குளம் போல் இந்தப் போராட்டத்தையும் திசை திருப்பவோ அல்லது கொச்சைப்படுத்தவோ முயல்வதைத் தவிருங்கள்.

இந்தப் பிரச்சினையால் நான்காவது முறையாய் இன்று எனக்கு மிகப்பெரிய சோதனை. இன்றைக்கும் கைகள் கட்டப்பட்ட நிலையில் நான் இருக்கிறேன். ஆனால் எந்த நிலையிலும் தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்திக் கோபத்தின் வேகத்தைத் தணித்துக் கொள்ள நான் தயாராய் இல்லை. அதன் வலியை உணர்ந்தே தீருவது எனக் கங்கணம் கட்டாத குறை. இன்றைக்கு என் இனம் என்றோ இல்லை மொழிக்காரன் என்றோ நான் பெரியார் அணை நீரைப் பயன்படுத்துபவனைப் பார்க்க முடியாது. அவன் என் சொந்தச் சகோதரன். எங்கள் இரத்தத்தில் ஓடும் குருதியின் ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் பிரித்துப் பார்த்தால் அறிந்து கொள்ள முடியும் எங்களுக்கிடையேயான கார்பன் இணைப்புகளை. எங்கள் வாழ்வாதாரமான ஹட்ரஜனுக்கும் ஆக்ஸிஜனுக்கும்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். படித்த கணவான்களே.

என்னவனை அடிக்கும் போது எனக்கும் வலிக்கும். நான் வலி கொண்டிருக்கும் வேளையில் புத்தனையும் காந்தியையும் நினைவுபடுத்திக் கொண்டோ, அஹிம்சை என அறிவுரைக் கூறிக் கொண்டோ என் முன் வருபவர்களுக்கு நான் தான் கோட்சே. என் கோபத்தைக் கிளறாதீர்கள். இந்த முறை வார்த்தைகள் நிச்சயமாய் வராது. ஆனால், கனிவுறும் காலத்திற்காய் பொறுமை காக்கிறேன். இனி எதையும் வார்த்தைகளை) கொட்டுவதில்லையென தீர்மானமாய் இருக்கிறேன். இன்னும் பெருக்கிக் கொள்ளுங்கள் உங்கள் சுயநல வெறி பிடித்த சந்ததியினரை. எனக்கு என் கோபம் வேண்டும். தணியாதத் தாகத்தைப் போக்கிக் கொள்ள, தலைமுறைக்குமாய் குடிப்பதற்கு உங்கள் உயிர் வேண்டும்.

0 comments:

Post a Comment