
மறைந்த வடகொரிய அதிபர் கிம் யாங் இல்லின் இறுதிச் சடங்கு நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் நடந்துள்ளது. அவரின் பூதவுடலை அடக்கஸ்தலத்துக்கு கொண்டுசெல்லும் மாபெரும் இறுதி ஊர்வலம் தலைநகர் பியாங்யாங் வீதிகளைக் கடந்து சென்றபோது, மக்கள் கதறிக் கண்ணீர்விடும் காட்சிகளை பல இடங்களில் காணமுடிந்தது.
பனி மூடி வெள்ளை ஆடை உடுத்தி நிற்கும் வீதிகளைக் கடந்து சிகப்பு கம்பளம் போர்த்தப்பட்ட சவப்பெட்டியுடன் வாகனத் தொடரணி சென்றபோது இராணுவ வீரர்கள் தலை குனிந்து மரியாதை செலுத்துவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.
துக்கத்தில் தனது இருதயமே வெடித்துவிடும்போல் இருக்கிறது என்று இராணுவ வீரர் ஒருவர் கூறினார். கடுமையான பனிப்பொழிவு காரணமாக இறுதிச் சடங்கு ஆரம்பிப்பது நான்கு மணி நேரங்கள் தாமதப்பட்டிருந்தது. ஆனாலும் அரசு மரியாதையுடன் நடந்த இந்த இறுதி ஊர்வலத்தை வடகொரியர்கள் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடத்தினர்.
தெய்வத்துக்கு ஒப்பானவராக உருவகப்படுத்தப்பட்ட கிம் யாங் இல்லுக்கு நகரத்தின் மையத்திலுள்ள ஒரு சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அதிகாரம் வாரிசுக்கு கைமாறுதல்
'மாதளபதி' என்று வடகொரியர்கள் மரியதையுடன் அழைத்து வந்த வந்த கிம் யாங் இல்லை முறையாக வழியனுப்பிவைக்க வேண்டும் என்பது இந்த கண்கவர் சடங்கின் நோக்கமாக இருந்தாலும், இல்லின் வாரிசாக அவரது இளைய மகனை நிலைநிறுத்த வேண்டும் என்பதும் இதன் நோக்கமாகத் தெரிந்தது.
கிம் யாங் உன் யார்
இன்னும் முப்பது வயதுகூட நிரம்பாதவர் கிம் யாங் உன், கடந்த இரண்டு மூன்று வருடங்களாகத்தான் இப்படி ஒருவர் இருப்பதே அந்நாட்டு மக்களுக்குத் தெரியும். ஆனால் அண்மையில் இவரையே தனது வாரிசாக அறிவித்திருந்தார் கிம் யாங் இல்.
ஊர்வலத்தின் முதன்மையாளராகவும் நிகழ்ச்சிகளின் மையப்பொருளாகவும் அவரே இருந்தார். அமரர் ஊர்தியுடன் கூடவே அவர் நடந்து செல்வதைக் காண முடிந்தது.
இச்சடங்கில் கிம் யாங் உன்னுக்குப் பின்னாலேயே காணப்பட்டார் அவரது அதிகாரம் மிக்க மாமாவான ஜங் சொங் தேக். கிம் யாங் உன்னிடம் ஆட்சி கைமாறுவதில் இவர் முக்கியப் பங்காற்றுவார் எனக் கருதப்படுகிறது.
வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சி, நாட்டின் இராணுவம் ஆகியவற்றின் பிற முக்கியத் தலைவர்களும் இந்த இறுதிச் சடங்கில் ஒருசேரக் காணப்பட்டது, கவனமாக ஒத்திகை பார்க்கப்பட்டு அரங்கேற்றப்பட்ட விஷயமாகத் தெரிந்தது.
கிம்யாங் உன்னின் தகுதி, திறமை, அனுபவம் தொடர்பில் சந்தேகங்கள் நிலவினாலும், தந்தையிடம் இருந்து மகனிடம் அதிகாரம் கைமாறுவது என்பது சுமூகமாகவே நடக்கிறது என்று நாட்டு மக்களுக்கும் வெளியுலகுக்கும் காட்ட வடகொரியா விரும்புகிறது.
வடகொரிய அரசு தொலைக்காட்சியின் அறிவிப்பாளர் கிம் யாங் உன்னைப் பற்றிக் குறிப்பிடும்போது 'மாதளபதியின் மஹா வாரிசு' என்றும், இராணுவத்துக்கும் தொழிலாளர் கட்சிக்கும் அதியுயர் கட்டளைத் தளபதி அவரே என்றும் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடகொரியாவை நிறுவியத் தலைவரான தனது தந்தை கிம் இல் சுங்கிடம் இருந்து அதிகாரத் தலைமைகளை அடைய கிம் யாங் இல்லுக்கு மூன்று வருடங்கள் ஆனது. ஆனால் இல்லின் மகன் உன்னும் அவரைச் சுற்றியிருப்பவர்களும் அந்த அளவுக்கெல்லாம் காத்திருக்க முடியாத ஒரு அவசரத்தைக் காட்டுவதாகவே எண்ணத் தோன்றுகிறது.
0 comments:
Post a Comment