Monday, December 19, 2011

அதிகரித்துச் செல்லும் வாகன விபத்துக்கள்


(எஸ்.எல்.மன்சூர்) 
கடந்த நாட்களில் நாட்டின் நாலாபுறமும் பல வீதி விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. விபத்துக்களால் சொத்துக்கள் நாசமடைவது ஒருபக்கம் மனித உயிர்களும் அல்லவா அழிகின்றது. ஒரேயடியாக உயிர் போனாலும் பரவயில்லை என்று அடுத்த பக்கம் பார்த்தால் உடல் ஊனமுற்று மாதக்கணக்கில் வைத்திய சாலைகளிலும், எலும்பு முறிவு நிலையங்களிலும் இவர்கள் படுகின்ற துன்பங்கள், துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இத்தனையையும் பார்த்துவிட்டு, அறிந்துவிட்டு வீதிகளில் வாகனங்களைச் செலுத்தி ஓடுகின்ற வேகம் படுபயங்கரமானதாகவே உள்ளது. 

இன்று சந்துபொந்தெங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றன. ஆனால், பாதைகள் அதிகரிக்கப்படவில்லை. ஆங்கிலேயர்களது காலத்தில் அதாவது 1832 ஆண்டுக்குப் பின்னர்தான் இந்த பாதைகள் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டன. அன்றைய பாதைகளுக்குப்பின்னர் இன்றைய நமது ஜனாதிபதி அவர்களின் தீர்க்கதரிசமான சிந்தனையின்படி சீன அரசின் உதவி, மற்றும் அரசின் உதவி கொண்டு நாடுமுழுவதும் அழகான முறையில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொங்கிரீட்பாதை என்றும், சில இடங்களில் மேம்பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனை அமைத்தும் நாளாந்தம் பெருகின்ற வாகனங்களுக்கு இப்பாதைகள் போதுமானதாக இருக்கின்றதா என்று பார்த்தால் அதுவும் போதாது. அண்மைக்கால பாதைகளின் சீராக்கம் வேகத்தை அதிகரித்துச் செல்லவும், விரைவாக பயணிப்பதற்கும் உதவியாக அமைந்திருக்கின்றன என்பதுடன் விபத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது என்பதுதான் இன்றைய பார்வையுமாகும்.

பாதை சீராக்கப்பட்டுள்ளது என்பதற்காக விரைவாக செல்ல வேண்டும் என்பது என்ன கட்டாயமா? அண்மையில் திறக்கப்பட்ட தென்பகுதி அதிவேகப் பாதையிலும் அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. பாதையை அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டதன் பின்புதான் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வாகனங்கள் பாதையில் செல்கின்றபோது வாகனத்தின் மீதான அவதானம் கட்டாயம் இருக்க வேண்டும். அதிகமான சாரதிகள் மதுபோதையில் இருக்கின்ற வேளையிலேயே விபத்துக்கள் ஏற்படுகின்றன எனவும் கூறப்படுகின்றது. மது அரக்கனை பாவிப்பவர்கள் மீது கட்டாயமானதும், கடினமானதுமான தண்டணைகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் இவ்வாறான விபத்துக்களைத் தடுக்க முடியும்.

சாரதிகள் மட்டுமல்ல வீதியால் செல்கின்ற அல்லது வீதியைக் கடக்கின்றபோதுகூட பொதுமக்களாகிய எம்மவரும் அவதானமாக கடந்து செல்ல வேண்டும். அண்மையில் ஒருவர் புகையிரதம் அதோ வருகின்றது போய்விடுவோம் என்று நினைத்து பாதையைக் கடந்தவர் உயிரே போய்விட்டது. இவ்வாறு அநியாயமாக உயிர்களை விடுவதிலிருந்து எம்மை பாதுகாக்க விபத்துக்களிலிருந்து விடுப நாம், நமக்கு எதிரே வருகின்ற வாகனத்தை நன்றாக அவதானிக்க வேண்டும். நாம் சரியாக சென்றாலும் எதிரே வருகின்ற வாகனம் எம்மை நோக்கி வந்து முட்டியும் விடுகிறது. எனவேதான் இன்றைய காலகட்டத்தில் வீதிவிபத்துக்கள் என்ன வடிவில் வருகின்றது என்பதை எம்மால் அனுமானிக்க முடியாதுள்ளது. ஆதலினால் அவதானம் அவசியமாகும்.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் நாளொன்றுக்கு சுமார் 100 தொடக்கம் 150 வரையிலான வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்தாண்டு அதாவது 2010ஆம் ஆண்டில் நாளொன்றில் சுமார் 92 வீதமான விபத்துக்களே ஏற்பட்டன. தற்போது அதிகரித்துச் செல்கின்ற ஒரு போக்கும் காணப்படுகிறது. இதனைவிட அடுத்தாண்டுகள் இன்னும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளே உள்ளன. அதுமட்டுமல்ல ஏற்படுகின்ற விபத்துக்கள் உடைந்து போகின்ற வாகனங்களின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? வருடமொன்றுக்கு 10 பில்லியன் ரூபாய் பணம் அழிகின்றது.

இவ்வாறு செல்கின்றபோது நாட்டில் வாகனவிபத்துக்களால் ஊனமுற்ற சமுகக் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு வருகின்றோமா? அப்படியானால் விபத்துக்களிலிருந்து எம்மை தவிர்த்துக் கொள்வதற்கு பயணங்களைத் தடுக்கலாமா என்ன? எனவேதான் வீதிகளிலுள்ள குறியீடுகள், சமிக்ஞைசைகள் போன்றவற்றை அவதானித்து வீதிக்கேற்றவாறு இடத்திற்கேற்வாறு வாகனத்தை செலுத்துதல் அவசியமாகும். 

மேலும், பழுதடைந்த வாகனங்களின் சப்தம், புகை போன்றகாரணங்களும் வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றன. புகைவிடும் வாகனங்களின் பரிசோதனைகள் அதிகரித்துள்ள நிலையிலும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பல பஸ் வண்டிகள் இப்படியான புகைபோக்கும் பஸ்களாக வலம் வருவதானது பின்னால் செல்கின்ற வாகனச் சாரதிக்கு பாதை தெரியாது சடுதியாக விபத்துக்களை ஏற்படுத்தி விடுகிறது. மேலும், வீதிகளில் மாடுகள், நாய்கள் போன்ற மிருகங்கள் படுத்துறங்குவதும் வீதிவிபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றன. சாரதிகளுக்கு நித்திரை மயக்கம், அடுத்தவருடன் பேசிக்கொண்டு வானத்தைச் செலுத்துதல், கைத்தொலைபேசி மூலம் உரையாடிக் கொண்டு செல்லுதல், நீர் அருந்துதல் போன்ற செய்கைகளும் வாகனத்தின் விபத்துக்கு கால் கோளாய் அமைந்து விடுகின்றன. எனவேதான் எந்தச் சந்தர்ப்பத்திலும் விபத்து ஏற்படலாம் என்பதை அவதானித்து, கவனித்து வாகனத்தைச் செலுத்துதல் சாரதிகளின் கட்டாய கடமையாகும். 

இன்று வீதிகள் தோறும் பொலிசார் நிற்கின்றனர். அவர்களையும் தாண்டி வேகமாக செல்கின்ற ஒரு நிலையும் காணப்படுகிறது. பொலிசார் வேகத்தைக் காண்பிக்கும் உபகரணத்துடன் நிற்கின்றனர் என்பதற்காக அந்த இடத்தில் மட்டும் வேகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது. பின்னர் வேகமாக செலுத்துவது இந்நிலையிலிருந்தும் வாகனம் செலுத்துவோர் மனநிலை மாறவேண்டும். எப்போதும் எம்மை நம்பி லட்சக்கணக்கான பணப் பெறுமதியான வாகனம், அதில் பயனிக்கும் மக்களின் உயிர் போன்றவைகளை மனக்கண்முன் கொண்டு வருதல் சாரதிகளின் கட்டாயக் கடமையாகும். 

எனவே, முறையான சாரதிப்பத்திரங்கள் இருந்தாலும் விபத்துக்களிலிருந்தும், மற்றவரின் பொருளில் உளப்புர்வமான நம்பிக்கையுடன் விபத்துக்கள் அற்ற இலங்கைக்கு எம்மால் எவ்வாறு உதவமுடியும் என்கிற மனப்பக்குவத்தை வளர்க்கும் போக்குடன் காணப்படுகின்ற சாரதிகள் உருவாகும் நிலை தோற்றம் பெறவேண்டும். அது விபத்தற்ற இலங்கையை கட்டியெழுப்ப உதவுமல்லவா.

0 comments:

Post a Comment